Published:Updated:

வேலூரில் சொத்துக்காகத் தாய் கொடூரக் கொலை!- மகன், மருமகளுக்கு ஆயுள்தண்டனை

சொத்துக்காகப் பெற்ற தாயைக் கொடூரமாகக் கொன்று சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் மகன், மருமகளுக்கு ஆயுள்தண்டனை விதித்து, வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஆறுமுகம் - மனைவி பிரியா
ஆறுமுகம் - மனைவி பிரியா

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் ஈச்சன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரின் மனைவி ராணி (60). இவர்களுக்கு ஆனந்தி, பொன்னியம்மாள் என்ற இரண்டு மகள்களும், ஆறுமுகம் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் ஆனந்தியும் பொன்னியம்மாளும் காவல்துறையில் பணிபுரிந்துவருகிறார்கள். மூன்று பேரும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனித்தனியாக வசிக்கிறார்கள். 

ஆறுமுகம் - மனைவி பிரியா
ஆறுமுகம் - மனைவி பிரியா

தந்தை வேலாயுதம் இறந்துவிட்ட நிலையில் அவரின் பெயரில் உள்ள ஏழு ஏக்கர் நிலம், அரிசி ஆலை, 10 கடைகள் என 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளைத் தன் பெயருக்கு எழுதித் தருமாறு தாய் ராணியிடம் ஆறுமுகம் தகராறு செய்துவந்தார். ``அக்கா, தங்கைக்கும் சேர்த்துதான் சொத்துகளை மூன்று பாகமாக பிரித்துக் கொடுப்பேன். உன் ஒருவனுக்கே மொத்த சொத்தையும் கொடுக்க முடியாது’’ என்று ராணி கூறியிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆறுமுகம், ``பெண் வாரிசுகளுக்குச் சொத்தில் பங்கு தர முடியாது’’ என்று கூறி தாய்க்குக் கொலை மிரட்டல் விடுத்தார். 2017-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி ராணி தன் வீட்டருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த மகன் ஆறுமுகம் சொத்து பிரச்னையில் வாக்குவாதம் செய்தார். பின்னர், ஆத்திரமடைந்து, வயதான தாய் என்றும் பார்க்காமல் சரமாரியாகத் தாக்கினார். காயமடைந்த ராணி மயக்கமடைந்தார்.

வேலூர் நீதிமன்றம்
வேலூர் நீதிமன்றம்

தாய் இறந்துவிட்டதாக நினைத்து யாருக்கும் தெரியாமல் தன் வீட்டுக்குத் தூக்கிச் சென்றார். மூச்சு இருந்ததால் தலையணையை முகத்தில் வைத்து அமுக்கிக் கொன்றார். பின்னர், இரவு நேரத்தில் தன் வீட்டருகில் தாயின் சடலத்தைப் போட்டு பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்தார். இந்தக் கொடூர சம்பவத்தில் ஆறுமுகத்துக்கு உடந்தையாக அவரின் மனைவி பிரியா இருந்திருக்கிறார். மறுநாள் காலையில் பார்த்தபோது, பிணம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

‘மாட்டிக்கொள்வோம்’ என்கிற அச்சத்தில் உடனே மண்ணைக் கொட்டி மூடினர். இதனிடையே, தாயைக் காணவில்லை என்று காட்பாடி காவல் நிலையத்தில் இரண்டு மகள்களும் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் மகன் ஆறுமுகத்தைப் பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அப்போது தாயைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். உடந்தையாக இருந்த மருமகள் பிரியாவையும் போலீஸார் கைதுசெய்தனர்.

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விசாரணை நிறைவுபெற்ற நிலையில், நீதிபதி குணசேகரன் இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றம் சுமத்தப்பட்ட ஆறுமுகம், அவரின் மனைவி ஆஜர்படுத்தப்பட்டனர். இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.