Published:Updated:

`காட்டிக் கொடுத்த முடி; கதறியழுத தந்தை' -குடும்பச் சண்டையில் தாயால் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

குழந்தை
குழந்தை ( மாதிரி புகைப்படம் )

விசாகப்பட்டினத்தில் உள்ள சின்னமுசிடிவாடா என்ற பகுதியில் ஒரு பெண் பாதி மயக்கத்தில் சாலையில் விழுந்து கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

குடும்பப் பிரச்னை!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள பெண்டுருத்தி என்ற நகரைச் சேர்ந்தவர் கர்கா அப்பாராவ். ஆறு வருடங்களுக்கு முன்பு இவருக்கும் குஷ்மலதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதிக்கு ஐந்து மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். ரயில்வே ஊழியரான அப்பாராவ் தன் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பெண்டுருத்தி
பெண்டுருத்தி

இந்நிலையில் கடந்த வாரம், குஷ்மலதாவின் நகைகளை அவருக்குத் தெரியாமல் கணவர் அடமானம் வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குஷ்மலதாவுக்குத் தெரியவரவே தன் கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்தப் பிரச்னை பெரிதாகி மாமியார், மருமகள் சண்டையாக மாறியுள்ளது. தனக்குத் தெரியாமல் நகையை அடகு வைத்த கோபத்தில் குடும்பத்திலிருந்த அனைவரிடமும் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளார் குஷ்மலதா.

இதனால் ஏற்பட்ட மன விரக்தியிலிருந்த குஷ்மலாதா, கடந்த 7-ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு யாருக்கும் சொல்லாமல் தன் ஒன்றரை வயதுப் பெண் குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். விடிந்ததும் அவரது மொத்தக் குடும்பமும் குஷ்மலதாவைத் தேடி அலைந்துள்ளனர். இந்தத் தகவல் லதாவின் தாய் வீட்டுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மகளைத் தேடியுள்ளனர். எங்கு தேடியும் லதா கிடைக்கவில்லை என்றதும், அன்று பிற்பகலே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பெண்டுருத்தி காவல்நிலையம்
பெண்டுருத்தி காவல்நிலையம்

சாலையில் கிடந்த குஷ்மலதா!

லதாவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்து, அவரை தேடும் பணியில் இறங்கியுள்ளனர் காவலர்கள். போலீஸாரின் இரண்டு நாள் தேடுதல் வேட்டையிலும் லதா இருக்கும் இடம் தெரியவில்லை. பிறகு விசாகப்பட்டினத்தில் உள்ள சின்னமுசிடிவாடா என்ற பகுதியில் ஒரு பெண் பாதி மயக்கத்தில் சாலையில் விழுந்து கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் நடத்திய விசாரணையில் அது பெண்டுருத்தியைச் சேர்ந்த குஷ்மலதா என்பது தெரியவந்துள்ளது.

`மனைவியுடனான தகராறால் 3 வயது மகளைக் கொன்ற கணவன்; மகனையும் கொல்ல முயற்சி!' - மயிலாடி அதிர்ச்சி

பின்னர் இரண்டு பகுதி காவல்நிலையம் தரப்பிலும் பேசி, குஷ்மலதாவைப் பெண்டுருத்தி காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு சுய நினைவு வந்த பிறகு, அவருடன் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை பற்றி காவலர்கள் விசாரித்துள்ளனர். அதற்கு, `நான் வீட்டிலிருந்து கிளம்பி அருகில் உள்ள மலைப் பகுதிக்குச் (துவ்வபாலம் மலை) சென்றேன். இரண்டு நாள்களாக அங்குதான் இருந்தேன். மலையில் தண்ணீர், உணவு போன்ற எதுவும் கிடைக்காததால் குழந்தை இறந்துவிட்டது. அதை மலை உச்சியிலேயே புதைத்துவிட்டேன்’ என்று அலட்சியமாகப் பதில் கூறியுள்ளார். குழந்தையைப் புதைத்த சரியான இடம் கூறும்படி கேட்டுள்ளனர். ஆனால் லதா, தனக்குத் தெரியவில்லை என்ற ஒற்றை பதிலில் முடித்துக்கொண்டுள்ளார்.

க்ரைம்
க்ரைம்

காட்டிக்கொடுத்த ரத்தக் கறை, முடி!

மீட்புக் குழுவைச் சேர்ந்த 20 பேர், 20 சிறப்புக் காவலர்கள், 10 உள்ளூர் காவலர்கள், 50 உள்ளூர் மக்கள், மோப்ப நாய்கள் என மொத்தம் 100 பேர் இணைந்து குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நான்கு குழுவாகப் பிரிந்து நான்கு நாள்களாக மலையில் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். இறுதியாக மலை உச்சியிலிருந்த ஒரு பாறைக்கு அருகில் ரத்தக் கறை இருந்ததை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மொத்தக் காவலர்களின் கவனமும் குவிந்துள்ளது.

பின்னர் அனைவரும் இணைந்து ரத்தக் கறை இருந்த அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மீண்டும் தேடியுள்ளனர். அப்போது ஒரு மரத்தில் குழந்தையின் முடி சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மரத்துக்கு அருகில் மண் தோண்டப்பட்ட தடயம் இருந்துள்ளது. இறுதியில் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு பாதி அழுகிய நிலையில் குழந்தையின் உடல் இருந்துள்ளது. மலை உச்சியில் குழந்தையின் அழுகிய உடலைக் கண்ட தந்தை அப்பாராவ், அதே இடத்திலேயே கதறி அழுதுள்ளார். இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கே.ஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர போலீஸ்
ஆந்திர போலீஸ்

காவலர்களின் சந்தேகம்!

``குழந்தை 8-ம் தேதியே இறந்திருக்க வேண்டும். குழந்தை பசியால் இறந்த பிறகேதான் புதைத்ததாக குஷ்மலதா கூறினார். ஆனால், குழந்தை புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் ரத்தக் காயங்களும் முடிகளும் இருந்தன. இதனால் குஷ்மலதாவே குழந்தையைக் கொன்று புதைத்துவிட்டு தானும் தற்கொலை செய்ய நினைத்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். குழந்தையின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே இந்த வழக்கில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும். ஒருவேளை குழந்தை பசியால் உயிரிழக்கவில்லை என்று அறிக்கை வந்தால், குஷ்மலதாவைக் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்துவோம்” என்று பெண்டுருத்தி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் மொத்த ஆந்திர மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு