Published:Updated:

இரண்டு குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை! - புதுக்கோட்டையில் சோகம்

புதுக்கோட்டை அருகே உள்ள இலுப்பூரில், இரண்டு குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டைத் தெருவைச் சேர்ந்தவர், மணிகண்டன். இவர், தனது அக்கா மகள் ராஜலெட்சுமி என்பவரைக் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, நந்தினி என்ற 3 வயது மகளும், தாரணி ஸ்ரீ என்ற 1 வயது மகளும் உள்ளனர். மணிகண்டன், கடந்த சில ஆண்டுகளாகவே வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மணிகண்டனுக்கும் அவரது தாய் கஸ்தூரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுவந்துள்ளது.

suicide
suicide

ராஜலெட்சுமியோ, வீட்டில் இருந்துகொண்டே சின்னச்சின்ன வேலைகளைப் பாருங்கள் என்று தனது கணவரிடம் அடிக்கடி கூறுவாராம். இந்த நிலையில்தான், மணிகண்டன் திடீரென 'புதிதாகத் தொழில் ஒன்று தொடங்க உள்ளேன் அதற்குப் பணம் வேண்டும்' என்று தனது தாய் கஸ்தூரியிடம் கேட்டுள்ளார். கஸ்தூரியோ, 'தன்னிடம் பணம் நகைகள் ஏதும் இல்லை' என்று கூறியுள்ளார். மேலும், மணிகண்டன் தன் மாமனாரிடமும் பணம் கேட்க, அங்கும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உடனே, `பணம் யாரும் எனக்குத் தர வேண்டாம். நான் திருப்பூருக்கு வேலைக்குச் செல்கிறேன். இனிமேல், நான் இந்த வீட்டிற்கே வர மாட்டேன்' என்று மனைவி ராஜலெட்சுமியிடம் கூறிவிட்டு மணிகண்டன் கோபத்துடன் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில், ராஜலெட்சுமி மன இறுக்கத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜலெட்சுமி வீட்டை பூட்டிவிட்டு தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் இருவரையும் எழுப்பி அவர்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு, தானும் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார்.

suicide
suicide

மூவர் மீதும் தீ பற்றி எரியவே, வலி தாங்கமுடியாமல் அலறியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தைகள் உட்பட 3 பேரும் உடல் கருகி உயிரிழந்துகிடந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் போலீஸார், மூவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.