Published:Updated:

தொழிலதிபரிடம் முகநூலில் பழகி மோசடி! - அனுதாபம் மூலம் ரூ.1.1 கோடி பறித்த தாய், மகள்

முகநூல் மூலம் பழகிய தொழிலதிபரிடம் நோய், இறப்பு எனப் பல்வேறு காரணங்களை கூறி அனுதாபத்தை ஏற்படுத்தி ரூ.1.1 கோடி மோசடி செய்த தாய், மகள் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை மேற்குப் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் 59 வயது தொழிலதிபருக்கு முகநூல் மூலம் ராணி சரங் (42) என்ற பெண்ணிடமிருந்து நட்பு கோரிக்கை வந்தது. அந்தப் பெண் தன்னுடைய கணவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடன் சேர்ந்து பணியாற்றியிருப்பதாகத் தொழிலதிபரிடம் தெரிவித்தார். இதனால் அந்தப் பெண்ணின் நட்பு கோரிக்கையை தொழிலதிபர் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் முகநூலில் சாட்டிங்கில் ஈடுபட்ட இருவரும், பின்னர் வாட்ஸ்அப் மூலமும் சாட்டிங், போனில் பேசி நட்பை வளர்த்தனர். சிறிது நாள்கள் கழித்து தனக்கு மூளையில் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறி அந்தப் பெண் தொழிலதிபரிடம் பணம் கேட்டிருக்கிறார்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

தொழிலதிபரும் அந்தப் பெண் கேட்ட தொகையை ஆன்லைன் மூலம் அனுப்பிவைத்தார். சில நாள்களில், தான் குணமடைந்துவிட்டதாக தொழிலதிபரிடம் தெரிவித்தார். தொடர்ந்து இருவரும் போன் மூலம் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அந்தப் பெண் பணம் கேட்டார். அதையும் தொழிலதிபர் கொடுத்தார். கேட்கும்போதெல்லாம் பணம் கொடுப்பதைத் தெரிந்துகொண்டு நயமாகப் பேசி பணம் பறிப்பதில் ராணியும், அவர் மகள், ஓர் உறவினர் என மூன்று பேர் தீவிரமாக இருந்தனர். ராணி தொழிலதிபரிடம் தனது சோகத்தைச் சொல்லி அனுதாபத்தை ஏற்படுத்தியே பணம் பறித்தார். தனது மாமா கொரோனாவால் இறந்துவிட்டதாகவும், அவரை தகனம் செய்யக்கூடப் பணம் இல்லை என்று கூறி தொழிலதிபரிடம் மீண்டும் ராணி பணம் கேட்டார். அவர் கேட்ட பணத்தை தொழிலதிபர் கொடுத்து உதவினார்.

அடுத்த சில நாள்களில் ராணியின் மகள் ருசிகா (24) தொழிலதிபரைத் தொடர்புகொண்டு தன் தாயார் இறந்துவிட்டதாகக் கூறிப் பணம் கேட்டார். அப்போதும்கூட எந்தவித சந்தேகமும்படாமல் தொழிலதிபர் பணம் கொடுத்து உதவினார். அதன் பிறகுதான் இதில் மூன்றாவதாக ஒருவர் நுழைந்தார். இது குறித்து இந்த வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி மங்கேஷ் தேசாய் கூறுகையில், ``ராணியின் உறவினர் பிரசாத் பனுசாலி சம்பந்தப்பட்ட தொழிலதிபரைத் தொடர்புகொண்டு ராணி சாகவில்லை என்றும், கடத்தப்பட்டார் என்றும் அவரை மீட்கப் பணம் ஏற்பாடு செய்து கொடுக்கும்படியும் கேட்டிருக்கிறார். அதற்கும் தொழிலதிபர் பணம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். தொழிலதிபர் கடந்த ஆறு மாதங்களில் 1.1 கோடி அளவுக்கு ராணிக்குக் கொடுத்திருந்தார்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

ஒரு கட்டத்தில் தொழிலதிபர், தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டபோது ராணியும் அவரின் கூட்டாளிகளும் முகநூலில் தங்களது தகவல்களை அழித்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள பிவாண்டியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட ராணி, அவரின் மகள், உறவினர் பனுசாலியிடம் விசாரித்தபோது பலரிடம் அனுதாபத்தை ஏற்படுத்தி பணத்தை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக இன்ஸ்பெக்டர் மங்கேஷ் தேசாய் தெரிவித்தார். அவர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். சமூக வலைதளத்தில் பழகுபவர்களிடம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மும்பை சைபர் பிரிவு டி.சி.பி ரேஷ்மி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு