Published:Updated:

`மருமகளை டார்ச்சர் செய்த பக்கத்து வீட்டுக்காரர்!' -திருத்தணி போலீஸில் புகார் கொடுத்த மாமியார்

திருத்தணி காவல் நிலையம்
திருத்தணி காவல் நிலையம்

திருத்தணி காவல் நிலையத்துக்கு வந்த புகாரைப் பார்த்த போலீஸார் ஒருகணம் அதிர்ச்சியடைந்துள்ளனர். மருமகளுக்கு நடந்த கொடுமைகளுக்கு நியாயம் கேட்டு மாமியார் புகார் கொடுத்துள்ளார்.

திருத்தணி காவல் நிலையத்துக்கு வந்த ராஜி (65) என்ற மூதாட்டி, கண்ணீர்மல்க அங்குள்ள போலீஸாரிடம் தன் மருமகளுக்கு நடந்த கொடுமைகளைக் கூறினார். அவர் போலீஸாரிடம், `என்னுடைய மகனும் மருமகளும் திருத்தணியில் குடியிருந்துவருகின்றனர். அவர்களின் வீட்டின் அருகில் சுமன் என்பவர் குடியிருந்துவருகிறார். சுமனின் மனைவியும் என் மருமகளும் தோழிகளாகப் பழகினர். அதனால் என் மருமகளுக்கும் சுமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதை ஆரம்பத்தில் நாங்கள் தவறாகக் கருதவில்லை.

representational image
representational image

இந்தச் சமயத்தில் வீட்டிலிருந்த நகை, பணம் ஆகியவை அடிக்கடி மாயமானது. இதுகுறித்து என் மகன், மனைவியிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகத் தகவல்களைத் தெரிவித்தார். அதனால் என் மருமகளின் நடவடிக்கைகளை நாங்கள் ரகசியமாகக் கண்காணித்தபோதுதான் சுமனின் பிடியில் அவள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து என் மருமகளிடம் விசாரித்தபோது அவள் உண்மையைக் கூறினாள்.

என் மருமகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்த சுமன், அவளைத் தவறான முறையில் படம் பிடித்து வைத்துள்ளார். பின்னர் அதை வைத்து மிரட்டி மருமகளிடம் தவறாக நடந்துள்ளார். தொடர்ந்து, மருமகளிடமிருந்து நகை, பணத்தை மிரட்டிப் பறித்து வந்துள்ளார். 10.2.2020 அன்று காலையில் வீட்டில் என் மகன், பேரப்பிள்ளைகள் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது வீட்டுக்கு வந்த சுமன், என் மருமகளிடம் ரூ.10,000 கேட்டுள்ளார். அதற்குப் பணமில்லை என்று என் மருமகள் கூறியுள்ளார்.

representational image
representational image

இதனால் ஆத்திரமடைந்த சுமன், என் மருமகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதை என் மகனும் பேரப்பிள்ளைகளும் தடுத்துள்ளனர். ஆனால், என் மருமகளை ஓர் அறையில் அடைத்து வைத்து அடித்துள்ளார்.

பின்னர், என் மருமகளைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். அவளின் அலறல் சத்தம் கேட்டு என் மகன் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அறைக்கதவை உடைத்து மருமகளை மீட்டுள்ளனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்த அவளை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சுமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருத்தணியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பஸ் டிரைவராக ரமேஷ் வேலை பார்த்துவந்துள்ளார். விபத்தில் சிக்கிய ரமேஷுக்கு இன்ஷூரன்ஸ் தொகை வந்துள்ளது. அந்தப் பணத்தையும் சுமன் பறித்தாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு