Published:Updated:

``மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகன்?" - கூலிப்படை மூலம் கொலை செய்த சென்னைத் தாய்

 கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

பெற்ற மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகனை கூலிப்படையினர் மூலம் தாயே கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஆவடி அருகில் உள்ள திருநின்றவூர், வச்சலாபுரம் 3வது தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் கடந்த 2-ம் தேதி வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து திருநின்றவூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யாரென்று போலீஸார் விசாரித்தனர். அப்போது இறந்தவர் சதீஷ் (19). ஆவடி வீட்டு வசதி குடியிருப்பில் குடியிருக்கும் அஞ்சலை என்பவரின் மகன் எனத் தெரிந்தது.

`கொலை செய்ய பயன்படுத்திய பைக்; கட்டில்!'- ஆதாரத்துக்காக கேரளாவிலிருந்து நீலகிரி வந்த போலீஸ்
கொலை நடந்த பாழடைந்த வீடு
கொலை நடந்த பாழடைந்த வீடு

இதையடுத்து அஞ்சலையிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் இறந்தது சதீஷ் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், அவரின் நடவடிக்கைகள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. இதனால் அஞ்சலையை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அதோடு சதீஷ் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பைக்கில் சிலர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. பைக்கின் பதிவு நம்பர் மற்றும் செல்போன் சிக்னல் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர்.

இந்தநிலையில் சதீஷின் அம்மா அஞ்சலையின் முகத்தில் மகன் இறந்த கவலை தெரியவில்லை. அவர் சகஜமாக இருப்பது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சதீஷைக் கொலை செய்தது ஆவடியைச் சேர்ந்த சுரேஷ், முத்துக்குமார், ஆந்திராவைச் சேர்ந்த விக்னேஷ் எனத் தெரியவந்தது. அவர்களில் முத்துக்குமாரைத் தவிர மற்றவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலை நடந்த இடத்தில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை
கொலை நடந்த இடத்தில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆவடியைச் சேர்ந்த அஞ்சலையின் கணவர் வீரபத்திரன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அஞ்சலைக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். சதீஷ், அஞ்சலையின் வளர்ப்பு மகன். ஆனால், சின்ன வயதிலிருந்து அதைத் தெரியாமல் அஞ்சலை சதீஷை பாசமாக வளர்த்தார். சதீஷ், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அதோடு வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அஞ்சலை, கட்டட வேலைகளுக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார்.

ஆவடியைச் சேர்ந்த மேஸ்திரி ஒருவரிடம் அஞ்சலை வேலைக்குச் சென்றுவந்துள்ளார். அவருக்கும் அஞ்சலைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் சதீஷால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதை மேஸ்திரியிடம் அஞ்சலை கூறினார். அதனால் சதீஷை தீர்த்துக்கட்ட திட்டம் போடப்பட்டுள்ளது. இதற்காக 1,60,000 ரூபாய் கொடுத்தால் சதீஷை கொலை செய்ய கூலிப்படைக்கு ஏற்பாடு செய்யலாம் என்று அஞ்சலையிடம் மேஸ்திரி கூறியுள்ளார். அதற்கு அஞ்சலையும் சம்மதித்துள்ளார்.

கொலை நடந்த இடத்தில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை
கொலை நடந்த இடத்தில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை

கூலிப்படையினருக்கு அட்வான்ஸாக 25,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை வாங்கிய ஆவடியைச் சேர்ந்த சுரேஷ், முத்துக்குமார், ஆந்திராவைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் சதீஷை மது அருந்த திருநின்றவூரில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மதுபோதையிலிருந்த சதீஷை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் அரிவாளை வீட்டின் அருகில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை மீட்டுள்ளோம். கொலை தொடர்பாக அஞ்சலை, மேஸ்திரி காமராஜ், கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை பிடித்துள்ளோம்" என்றனர்.

அஞ்சலையிடம் போலீஸார் விசாரித்தபோது, `தன்னுடைய மகள்களுக்கு சதீஷ், பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். அதனால்தான் பாசமாக வளர்த்த மகன் என்றுகூட பார்க்காமல் கொலை செய்ய சம்மதித்தேன்' என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு