Published:Updated:

நாகை : திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு! - பெற்ற மகனை கொன்ற கொடூரத் தாய்

அபர்ணா
அபர்ணா

``விசாரணையின் போது அபர்ணா குற்ற உணர்வோ, பதற்றமோ இல்லாமல் சர்வ சாதாரணமாக பதில் சொன்னது எங்களுக்கே அதிர்ச்சியாய் இருந்தது" என்கின்றனர் போலீஸார்.

திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தையை தாயே துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை
கொலை
representational image

நாகையை அடுத்த மேல வாஞ்சூர் பகுதியில் கார் டிங்கரிங் தொழில் செய்யும் கார்த்தி அரவிந்த் என்பவருக்கும், தாமரைக்குளம் தென்கரை பகுதியைச்  சேர்ந்த அபர்ணா என்பவருக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஓராண்டிலேயே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பின் உறவினர்கள் சமாதானம் செய்து வைக்க இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தினர்.

இத்தம்பதிக்கு நான்கு வயது மகனும் இருந்தார். கார்த்திக் அரவிந்த் சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், அவர் மனைவி அபர்ணாக்கு ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக கணவன்- மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 

இதனையறிந்த கார்த்தி அரவிந்த் அபர்ணாவைச் சந்தித்து ``உனக்கு என்ன பிடிக்கல. நீ வேற ஒருவன்கூட வாழுற. நீ எப்படியாவது வாழ்ந்துட்டுப் போ. ஆனா என் பிள்ளையை என்கிட்ட கொடுத்துடு. நான் அவன நல்லபடியா வளர்த்து படிக்க வைக்கிறேன்" என்று கேட்டுருக்கிறார். "நான் அவனக்  கொன்னாலும் கொல்வேனே தவிர உன்கிட்ட தரமாட்டேன்" என்று அபர்ணா மறுத்ததாக தெரிகிறது.

நெல்லை: குடிபோதை; கிணற்றுக்குள் தள்ளி கொலை! - மதுவால் நண்பனுக்கு ஏற்பட்ட சோகம்!

இந்நிலையில் சென்னையிலிருந்து கார்த்திக் அரவிந்த் நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தனது குழந்தையை மனைவி,  கொலை செய்துவிட்டதாக கூறியிருக்கிறார். உடனே இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து, குழந்தை உடலைக் கைப்பற்றியதோடு, திருமணம் மீறிய உறவில் இருந்த ஜோடியைக் கொண்டுவந்து விசாரித்தபோதுதான் அதிர்ச்சியான தகவல் தெரியவந்திருக்கிறது.

அபர்ணா
அபர்ணா

இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``அபர்ணா, ஆட்டோ டிரைவர் சுரேஷ் ஜோடி ஒன்றாக இருந்த நேரத்தில், குழந்தை கவிதிரன் அழுதுகொண்டு, அவர்கள் சந்தோஷத்துக்கு இடையூறாக இருந்திருக்கிறான். இதனால் எரிச்சலான சுரேஷ் சிறுவனைக்  கீழே தள்ளிவிட, அபர்ணாவோ தான் பெற்ற குழந்தை என்றும் பாராமல் சுடிதார் துப்பட்டாவால் சிறுவனின் கழுத்தை இறுக்கியிருக்கிறார். அதில் சிறுவன் இறந்துவிட, கொலையை மூடி மறைத்து அடக்கம் செய்ய முயன்றபோதுதான் அக்கம்பக்கத்தினர் கார்த்திக் அரவிந்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் எங்களுக்குச்  சொல்லவே கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்திருக்கிறோம். விசாரணையின் போது அபர்ணா குற்ற உணர்வோ, பதற்றமோ இல்லாமல் சர்வ சாதாரணமாக பதில் சொன்னது எங்களுக்கே அதிர்ச்சியாய் இருந்தது" என்றனர் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு