சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவருக்கும் அண்ணாசாலை, பெருமாள் முதலி தெருவைச் சேர்ந்த சோபா என்பவருக்கும் (31) கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியருக்கு 4 வயதில் ஒரு மகன். அவருக்கு சரிவர வாய் பேச முடியாது. அதற்காக அந்தச் சிறுவனுக்கு அவரின் பெற்றோர் பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவந்தனர்.

அதனால், மனவேதனையடைந்த சோபாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மகனை அழைத்துக்கொண்டு சோபா, வண்ணாரப்பேட்டையிலிருந்து தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்தார். அதனால் தினேஷ்குமாரும் மாமியார் வீட்டுக்கு வந்து அங்கிருந்து வேலைக்குச் சென்றார். வேலை முடிந்து மாமியார் வீட்டுக்கு தினேஷ்குமார் வந்தபோது படுக்கையறை உள்பக்கமாக பூட்டியிருந்தது. அதனால் கதவைத் தட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால், சோபா கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து உறவினர்கள் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சோபா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். படுக்கையில் சிறுவன் இறந்துகிடந்தான். அதைப் பார்த்து தினேஷ்குமார், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சோபா, அவர் மகன் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீஸார் வழக்கு பதிவுசெய்து இருவரின் மரணம் குறித்து கணவர் தினேஷ்குமார், அவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். சோபாவின் செல்போனையும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.
மகனைக் கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.