Published:Updated:

`ஆம்புலன்ஸில் ஏற்றும்போதே உயிர் இல்லை!' -சிறுவனை அடித்தே கொன்ற தாய்; கோவை அதிர்ச்சி

கொலை
கொலை

கோவையில் 6 வயது சிறுவனை தாயே அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் திவ்யா என்ற பெண் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். மிக்ஸர் கம்பெனியில் பணியாற்றி வரும் இவருக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருந்தனர். இந்த நிலையில், திவ்யாவின் மகன் அபிஷேக்குக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இன்று பிற்பகல் 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவை
கோவை

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று அபிஷேக்கை பரிசோதனை செய்தபோது, அந்தச் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் முகம் மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்து, போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது.

இதையடுத்து, சிறுவனின் தாய் திவ்யா மற்றும் தந்தை என சொல்லப்பட்ட ராஜதுரை ஆகியோரிடம் சாய்பாபா போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் ஆரம்பத்தில் இருந்தே திவ்யாவும், ராஜதுரையும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து வந்தனர். சனிக்கிழமை இரவு சிறுவன் அபிஷேக் குறும்பு செய்ததால், தாய் திவ்யா அவனைக் கடுமையாகத் தாக்கியதாகவும், பிறகு இரவே மருந்துக்கடைக்குச் சென்று வலி நிவாரண மாத்திரை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

கோவை சிறுவன்
கோவை சிறுவன்

ஆனால், சிறுவன் இன்று காலை முதல் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்ததால், ஆம்புலன்ஸுக்கு அழைத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

``ராஜதுரை திவ்யாவின் கணவர் இல்லை. அருண் என்ற ஆணுடன் திவ்யாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இதனிடையே, அருணை விட்டுப் பிரிந்த திவ்யாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜதுரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கால்டாக்ஸி டிரைவரான ராஜதுரையும், திவ்யாவும் சமீபத்தில்தான் கோவில்மேடு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

சிறுவன் உடலில் காயங்கள்
சிறுவன் உடலில் காயங்கள்

ஆனால், அவர்களின் உறவுக்கு சிறுவன் அபிஷேக் தடையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்து சிறுவன் அபிஷேக்கை தாய் திவ்யா அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார். இருவருரின் உறவுக்குத் தடையாக இருந்ததால், சிறுவனைக் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கிறோம். ஆம்புலன்ஸில் ஏற்றும்போதே சிறுவனின் உடலில் உயிர் இல்லை. எனவே, அவன் நேற்று இரவே உயிரிழந்திருக்கலாம்" என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறுவனின் தாயும் ராஜதுரையையும் போலீஸார் கைது செய்துள்ளனர்

அடுத்த கட்டுரைக்கு