Published:Updated:

`திண்டிவனம் கொடுமைக்குப் பிறகு, உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டிருந்தாள்!'-கதறிய சிறுமியின் தாய்

representational image
representational image

``என் மகளுக்கு நடந்த அந்தக் கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு, அவள் உடலளவிலும் மனதளவிலும் ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தாள்" என்று சிறுமியின் அம்மா கண்ணீர்மல்க தெரிவித்தார்.

திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில், அக்காள்- தங்கையான 10, 7 வயது சிறுமிகள், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, பிரம்மதேசம் போலீஸார் வழக்குப்பதிந்து, 16 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். கைதானவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர். 7 வயது சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை மறந்து சென்னையில் படித்துவந்தார். இந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, சென்னை கே.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கே.கே.நகர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் பாட்டி
சிறுமியின் பாட்டி

சென்னை அரசு மருத்துவமனை பிணவறையின் முன் சோகத்தோடு காத்திருந்த சிறுமியின் பாட்டி நம்மிடம், ``2 வருஷமா என்னிடம்தான் என் பேத்திகள் இருந்தனர். நான், காலையில் மாடு மேய்க்கச் சென்றால் இரவுதான் வீட்டுக்கு வருவேன். வேலைக்குப் போனால்தான் சாப்பாடு. என் பேத்திகளும் காலையில் ஸ்கூலுக்குப் போய்விட்டு மாலையில் வீட்டுக்கு வந்து பசங்ககூட விளையாடுவார்கள். நான் வீட்டில் இல்லாத நேரத்தில்தான் பேத்திகளுக்கு அந்தக் கொடுமை நடந்துள்ளது. என் இளைய பேத்திக்கு நடந்த கொடுமையால் அவள் இன்று உயிரோடு இல்லை. அவளுக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமை, இனிமேல் யாருக்கும் நடக்கக்கூடாது. என் பேத்தியிடம் தவறாக நடந்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்" என்றார் கண்ணீர்மல்க.

சிறுமியின் அம்மா கூறுகையில், ``புதுச்சேரி மருத்துவமனையில் என் மகள்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் இருவரும் நன்றாகத்தான் இருந்தார்கள். திடீரென இளையவளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்தாள். மாத்திரைகள் கொடுத்தும் வயிறு வலித்துக்கொண்டிருப்பதாகக் கூறினாள். வறுமையின் காரணமாக அவளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. 12-ம் தேதி வரை ஸ்கூலுக்குப் போய்விட்டு வந்தாள். 13-ம் தேதி மதியம்தான் வயிறு வலிப்பதாகக் கூறினாள்" என்றவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு அவரே தொடர்ந்தார்.

சிறுமியின் உறவினர்கள்
சிறுமியின் உறவினர்கள்

``சின்னக் குழந்தை என்றுகூட பார்க்காமல் என் மகளை நாசப்படுத்தியவர்களால்தான் அவள் எங்களைவிட்டு போய்விட்டாள். சென்னை அயனாவரம் சிறுமி வழக்கில் கிடைத்த தண்டனையைப் போல என் மகள்களின் வழக்கிலும் உடனடியாக தண்டனை கிடைக்க வேண்டும். என் மூத்த மகளுக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்ய அரசு உதவி செய்ய வேண்டும். என் மகள்களுக்கு உறவினர்கள், அக்கம் பக்கத்தினரால் நடந்த கொடுமைகள் குறித்து நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், எனக்குப் பல வகையில் மிரட்டல்கள் வருகின்றன. அதனால்தான் சென்னைக்குக் குடிபெயர்ந்தேன்.

ஆனால், சென்னையில் என் மகள் திடீரென இறந்துவிட்டாள். அவளின் மரணத்துக்கு அந்தக் கசப்பான சம்பவம்தான் காரணம். மகளை இழந்து தவிக்கும் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்லக்கூட உறவினர்கள் இல்லை. மாறாக, கிராமத்தில் உள்ள சொத்துக்களைக்கூட எனக்கும் என் குழந்தைகளுக்கும் தராமல் ஏமாற்றிவிட்டனர். என் நிலைமையைப் பார்த்து தியாக மனப்பான்மையோடு என்னையும் என் 2 பெண் குழந்தைகளையும் 2- வது கணவர் சேர்த்துக்கொண்டார்.

எப்ஐஆர்
எப்ஐஆர்
`வீட்டில் திடீரென வாந்தி எடுத்தார்..' -பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்

ஆனால், அவரையும் என்னையும் உறவினர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அவதூறாகப் பேசுகின்றனர். அதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டிருந்த சூழலில், என் மகளின் இழப்பை என்னால் ஈடுகட்ட முடியவில்லை" என்றார் கண்ணீருடன்.

சிறுமியின் வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதானவர்கள் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். சென்னை அயனாவரம் சிறுமி வழக்கில் கைதானவர்களுக்கு, தீர்ப்பு வழங்கும் வரை ஜாமீன் கிடைக்கவில்லை. திண்டிவனம் சிறுமிகள் வழக்கில் ஒருவர் இறந்துள்ள சூழலில் விரைவாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பின் செல்ல