Published:Updated:

பட்டுக்கோட்டை: `சொத்தை வித்தாவது கடனை அடைச்சிருப்பேன்!’ - தற்கொலை செய்துகொண்ட தாய்; சோகத்தில் மகன்

தற்கொலை
தற்கொலை ( Representational image )

``கொரோனா பாதிப்பால் எல்லாம் முடங்கிக்கிடக்குற இந்த நேரத்துலயும், கடன் கேட்டு வங்கித் தரப்பில் அவமானப்படுத்துறாங்க. எதுக்கு இந்த வாழ்க்கை வாழணும், எல்லோரும் தற்கொலை செஞ்சுக்கிட்டு செத்துடுவோம்னு அழுதுக்கிட்டே இருந்தாங்க.”

பட்டுக்கோட்டை அருகே ஒருவர் ஹோட்டல் நடத்துவதற்கு தனியார் நுண் நிதி நிறுவனத்தில் ரூ.25 லட்சம் கடன்பெற்ற நிலையில், கொரோனா லாக்டெளனால் கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதில் நிதி நிறுவனத் தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததில், மன உளைச்சல் ஏற்பட்டு கடன் பெற்றவரின் அம்மா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது.

அய்யப்பன் மனைவி மகளுடன்...
அய்யப்பன் மனைவி மகளுடன்...

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு அய்யப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் - தமிழரசி தம்பதியின் மகன் அய்யப்பன். இவரின் மனைவி உஷாராணி. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அய்யப்பன் அதே பகுதியில் `வீரனார் உணவகம்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்திவருகிறார். இந்தநிலையில், தனது வீடு மற்றும் ஹோட்டலை விரிவு படுத்துவதற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நுண் நிதி நிறுவனம் ஒன்றில் லோன் வாங்கியுள்ளார். கொரோனா லாக்டெளனால் கடன் தவணையைச் சரியாக அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் அய்யப்பனின் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அய்யப்பனின் அம்மா தமிழரசி வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயம் அடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. `என்னைப்போல யாரும் பாதிக்கப்படக் கூடாது. இதற்குக் காரணமான நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அய்யப்பன் புகார் கூறிவருகிறார்.

தற்கொலை (Representational Image)
தற்கொலை (Representational Image)

அய்யப்பனிடம் பேசினோம். ``தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலையில் நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஹோட்டல் நடத்திவருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு எனது வீடு மற்றும் கடையை விரிவுபடுத்துவதற்காக எக்யூட்டாஸ் நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். பின்னர் அவ்வப்போது டாப்அப் செய்ததில் கடன் தொகை மொத்தம் ரூ.25 லட்சம் ஆனது. அதற்கான தவணைத் தொகை ரூ 40,000-ஐ மாதம்தோறும் சரியாகச் செலுத்தினேன்.

இந்தநிலையில், கடந்த வருடம் கொரோனா முதல் அலை பொதுமுடக்கத்தால் லோன் கட்ட முடியாமல் போனது. அப்போதும் நிதி நிறுவன ஊழியர்கள் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து அதிராம்பட்டினம் போலீஸில் புகார் கொடுத்தேன். இதில் தவணைப் பணத்தைக் குறைத்து மாதம் ரூ.10,000 வசூல் செய்துகொள்ள வங்கி தரப்புக்கு போலீஸார் அறிவுறுத்தினர். தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவியதால், ஹோட்டலைத் திறக்க முடியவில்லை.

கடன் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழரசி
கடன் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழரசி

வியாபாரம் இல்லாததால் லோன் தவணை கட்ட முடியவில்லை. இதைத் தொடர்ந்து நிதி நிறுவனத்தினர் அடிக்கடி வீட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டினர். இதையடுத்து நான் நிதி நிறுவனத்துக்குச் சென்று, `வீட்டை விற்றாவது கடனை வட்டியுடன் கொடுத்துவிடுகிறேன். லாக்டெளன் முடியும் வரை அவசரப்படுத்தாங்கீங்க’ என்று சொல்லிட்டு வந்தேன். ஆனால் அதன் பிறகும் அவர்களது டார்ச்சர் தொடர்ந்தது. நான் வீட்டில் இல்லாத நேரத்துலயும் வந்து பெண்கள் இருப்பதையும் பார்க்காமல் மோசமாகப் பேசிவந்தனர். அம்மா அதிலிருந்தே உடைஞ்சுட்டாங்க. `கொரோனா பாதிப்பால் எல்லாம் முடங்கிக்கிடக்குற இந்த நேரத்துலயும் கடன் கேட்டு வங்கித் தரப்பில் அவமானப்படுத்துறாங்க. எதுக்கு இந்த வாழ்க்கை வாழணும், எல்லோரும் தற்கொலை செஞ்சுக்கிட்டு செத்துடுவோம்’னு அழுதுக்கிட்டே இருந்தாங்க.

அவங்ககிட்ட, `எப்படியாவது கடனை அடைச்சிடலாம்மா... மனச விட்டுறாதீங்க’னு ஆறுதல்படுத்தினேன். ஆனால் நிதி நிறுவனத் தரப்பில் பேசியதை அவரால் மறக்க முடியவில்லை. இதனால் நாங்க இல்லாத நேரத்துல தற்கொலை செய்துகொள்வதற்காக வீட்டு மாடியில இருந்து குதிச்சுட்டாங்க. இதில் பலத்த அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் இறந்துட்டாங்க.

மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை

நிதி நிறுவனத்தினர் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதுமே, அதிலிருந்து எங்களைக் காக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் தனிப்பிரிவு, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்குப் பதிவு தபால் மூலம் புகார் அனுப்பினேன். அப்பவே அதற்கான நடவடிக்கை எடுத்திருந்தா இன்னைக்கு எங்க அம்மா உயிரோடு இருந்திருப்பாங்க. நான் இது வரை ரூ.11 லட்சம் திருப்பி செலுத்தியிருக்கிறேன். ஆனால், இன்னும் ரூ.27 லட்சம் கட்ட வேண்டியிருப்பதாக நிதி நிறுவனத்தில் தெரிவிக்கின்றனர்.

இன்னைக்கு எங்க குடும்பமே நிம்மதியில்லாம தவிக்குது. சொத்தை வித்தாவது கடனை அடைச்சிருப்பேன். ஆனால் செத்துப்போன எங்க அம்மாவ அவங்களால திருப்பிக் கொடுக்க முடியுமா? கொரோனா நேரத்துலயும் கொஞ்சம்கூட இரக்கம் இல்லாம அவங்க நடந்துக்கிட்டாங்க. எனக்கு நடந்தது இனி வேற யாருக்கும் நடக்கக் கூடாது. தமிழக அரசு அந்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கண்கள் கலங்க தெரிவித்தார்.

புகார் மனு
புகார் மனு

நுண் நிதி நிறுவன மேனேஜர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ``அய்யப்பனுக்கு நெறய கடன் இருக்கு. லோன் பணத்தைக் கேட்டு நாங்க யாரும் வீட்டுக்கு செல்லவில்லை. அழுத்தம் கொடுக்கவும் இல்லை. அவங்க குடும்பத்துகுள்ளேயே சண்டை இருந்தது. தமிழரசி இறப்புக்கு அய்யப்பன்தான் காரணம். சம்பவத்தன்னிக்கு அம்மாவிடம் அய்யப்பன் சண்டை போட்டிருக்கிறார். தமிழரசி உயிரிழந்ததற்கு அவர் மகன்தான் காரணம். வேண்டுமென்றே எங்கள் நிறுவனத்தின் மீது களங்கம் ஏற்படுத்தி, ஆதாயம் அடையவதற்காக பொய்யானவற்றைக் கூறிவருகிறார். இது தொடர்பாக நாங்கள் போலீஸில் புகார் அளித்திருக்கிறோம்” என்றார்.

தற்கொலை எண்ணம் எழுந்தால், தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.
அடுத்த கட்டுரைக்கு