ம.பி: `அப்பாவை விட்டுடுங்க..!’- மாஸ்க் அணியாததற்காக மகனின் கண்முன்னே கொடூரமாகத் தாக்கிய காவலர்கள்

வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அந்த மாநில காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கவே, சம்பந்தப்பட்ட இரு காவலர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது மத்தியப்பிரதேச காவல்துறை.
``அப்பா... அப்பா... அப்பாவை விட்டுடுங்க...” என்று இந்தியில் கதறிக்கொண்டே, நடுரோட்டில்வைத்து தன் தந்தையைக் கொடூரமாகத் தாக்கும் இரண்டு காவல்துறையினரின் கால்களைச் சுற்றிச் சுற்றி ஓடும் சிறுவனின் அழுகுரல் தாங்கிய வீடியோ ஒன்று காண்போர் அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது! அப்படியொரு சம்பவம், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்திருக்கிறது.
ஆட்டோ டிரைவரான கிருஷ்ண கெயர் (35), மருத்துவமனையிலிருக்கும் தனது தந்தைக்கு உணவு கொண்டு செல்லும் வழியில் தவறுதலாக மாஸ்க் கழன்று தொலைந்திருக்கிறது. மாஸ்க் அணியாமல் தனது மகனுடன் நடந்து வந்துகொண்டிருக்கும் கிருஷ்ண கெயரைக் கண்ட அந்தப் பகுதி போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்ததாகத் தெரிகிறது. அவர், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு பிறகு வருகிறேன் என்று வேண்டுகோள் விடுத்து நகர முயற்சித்ததாகவும், அதை ஏற்காத இரு காவலர்கள் தாக்கத் தொடங்கியதாகவும் ANI செய்தி ஊடகம் வெளியிட்ட காணொலியில் சம்பவம் நடந்து முடிந்த பின்னர் தெரிவித்திருக்கிறார் கிருஷ்ண கெயர்.
கிருஷ்ண கெயரை, உடன் வந்த அவரின் மகனின் கண்முன்னே நடுரோட்டில் வைத்து மிகக்கொடூரமாகத் தாக்கியவர்கள் கமல் பிரஜாபத், தர்மேந்திர ஜாட் என்ற இரு காவலர்கள் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அந்த இரு காவலர்களும் கிருஷ்ண கெயரைத் தாக்கும் சம்பவம் இரண்டு நிமிட வீடியோ பதிவாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அந்த வீடியோ காட்சியில் கிருஷ்ணகெயரை கண்மூடித்தனமாகத் தாக்கி நடுரோட்டில் கீழே தள்ளிவிட்டு, அவரின் கழுத்தில் கால்வைத்து காவலர் நெரிக்கும் காட்சி அமெரிக்காவில், ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கரின் கழுத்தில் காவல் அதிகாரி ஒருவர் கால்வைத்து நெரிப்பதும், ``என்னால் மூச்சுவிட முடியவில்லை’’ (I can’t breathe) என்று கூறி உயிர்விட்ட உறையவைக்கும் காட்சியை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது என சமூக வலைதளவாசிகள் தங்கள் உணர்வை ஆதங்கமாகக் கொட்டித்தீர்த்து வருகின்றனர்.
மேலும், அவரின் மகன் கதறுவதும் காண்போர் அனைவரையும் கண்கலங்கவைத்திருக்கிறது. தாக்கும் காவல்துறையினரை பொதுமக்களும் பெண்களும் சேர்ந்து தடுக்கும் காட்சிகள் நாட்டின் மனிதநேயம் உயிர்ப்போடு இருப்பதை காட்டுகின்றன; அதே நேரத்தில் அவர்களையும் மீறி காவலர்கள் கிருஷ்ணா கெயரை மீண்டும் தாக்கும் காட்சிகள் மனிதத்தனமே இல்லாத உணர்வையும் காட்சிப்படுத்துகின்றன.
இந்தநிலையில், வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அந்த மாநிலக் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கவே, சம்பந்தப்பட்ட இரு காவலர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது மத்தியப்பிரதேச காவல்துறை. இருப்பினும் இந்தச் சம்பவத்தை மறுத்துப் பேசிய இந்தூர் கிழக்கு காவல் கண்காணிப்பாளர் அஷீதோஷ் பாக்ரி, ``மாஸ்க் அணியாத காரணத்தால், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் வர மறுத்து காவலர்களைத் தாக்க முயன்றார்’’ எனவும், ``காவல்துறைக்கு வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த வீடியோ ஜோடிக்கப்பட்டது’’ எனவும் அவர் கூறியிருக்கிறார்.
எப்படி இருப்பினும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் தலைவர்கள், பொது நிகழ்வுகளில் கலந்துகொண்ட திரைப் பிரபலங்கள் எனப் பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமலே வலம்வந்தபோது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இது போன்ற எளியவர்களிடம் அதிகாரத்தைப் பயன்படுத்தும் நிகழ்வுகள் ``சட்டம் தன் கடமையைச் செய்யும், அது எளியவர்களிடம் மட்டுமே!” என்ற வசனங்களை மெய்பிக்கும்படியாக இருக்கிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துவருகின்றனர்.