Published:Updated:

“விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்?” - மறுக்கும் குடும்பத்தினர்...

மணிகண்டன் குடும்பத்தினர்...
பிரீமியம் ஸ்டோரி
News
மணிகண்டன் குடும்பத்தினர்...

மணிகண்டனைக் காவல் நிலையத்தில் விசாரணை செய்ததில், அவர் வந்த டூ வீலரின் ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன், போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு வீட்டில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தைப் பற்றி, 12.12.2021 தேதியிட்ட ஜூ.வி இதழில், “ஜட்டியோட உட்காரவெச்சு அடிச்சாங்க!” என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். இந்த விவகாரம் தமிழகமெங்கும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், ‘‘கல்லூரி மாணவரைக் காவல்துறையினர் தாக்கவில்லை; அவர் விஷம் குடித்துத்தான் இறந்தார்’’ என்று காவல்துறை ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மணிகண்டனின் மரணத்தை சாத்தான்குளம் சம்பவத்துடன் ஒப்பிட்டு, ‘காவல்துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தி.மு.க தவிர்த்த பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தியதால், முதுகுளத்தூர் பகுதியில் பதற்றம் தொற்றியது. அதையடுத்து, ‘‘வீட்டுக்குச் சென்ற பின்பு மணிகண்டன் பாம்பு கடித்து இறந்திருக்கலாம்’’ என்றும், ‘‘குடும்பத்தினர் திட்டியதால் விஷம் குடித்து இறந்திருக்கலாம்’’ என்றும் காவல்துறையினர் கூறிவந்தார்கள்.

“விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்?” - மறுக்கும் குடும்பத்தினர்...

தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, மணிகண்டனின் உடல் மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், அந்த அறிக்கை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், மதுரை வந்திருந்த ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடம், ‘‘மணிகண்டனைக் காவல் நிலையத்தில் விசாரணை செய்ததில், அவர் வந்த டூ வீலரின் ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. அவர் கல்லூரி மாணவர் என்பதால், மறுநாள் வந்து ஆவணங்களைக் காட்ட வேண்டுமென்று கூறப்பட்டது. அவரின் தாயாரிடம் போனில் விவரத்தைக் கூறியதை அடுத்து, அவரின் தாயாரும், தம்பியும், உறவினர் ஒருவரும் வந்து கையெழுத்திட்டு அழைத்துச் சென்றார்கள். இவை அனைத்தும் காவல் நிலைய சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. வீட்டுக்குச் சென்ற பின்பு மணிகண்டன் இறந்திருக்கிறார். மறுஉடற்கூறாய்வு அறிக்கையின்படி மணிகண்டன் விஷம் அருந்தி இறந்தது உறுதியாகியுள்ளது. ‘போலீஸ் விசாரணைக்குச் சென்ற மன உளைச்சலால் விஷம் குடித்தாரா... வேறு காரணமா?’ என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. மணிகண்டனின் உடலில் எந்தக் காயமும் இல்லை. ஏற்கெனவே மணிகண்டனின் வீட்டிலிருந்து விஷ பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி., ஆர்.டி.ஓ விசாரணை முடிவில், மணிகண்டன் ஏன் விஷம் குடித்தார் என்பது தெரியவரும்’’ என்று சொல்லி அதிரவைத்தார்.

நம்மிடம் பேசிய மணிகண்டனின் தாய் ராமலட்சுமி, ‘‘என் மகனை போலீஸ் அடிச்சதாலதான், வீட்டுக்கு வந்தும் தூங்க முடியாம வலியால வாந்தியெடுத்து செத்துப்போனான். போலீஸ் செஞ்ச கொடுமையை மறைக்க இப்ப என் பையனே விஷம் குடிச்சதா சொல்றாங்க. அன்னைக்கு ராத்திரி முழுக்க தேம்பித் தேம்பி அழுதவன், படுத்த கொஞ்ச நேரத்துல கை கால் இழுத்து, ஒரேடியா கண்ணை மூடிட்டான். அவன் விஷம் எதையும் குடிக்கலை. போலீஸ் அடிக்கலைன்னா விசாரிச்சுட்டு அனுப்பி இருக்கலாம்ல. எதுக்கு எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி கையெழுத்து வாங்கி, போட்டோ எடுக்கணும்? ஒரு பேச்சுக்கு எம்புள்ள தப்பே பண்ணியிருந்தாலும், கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பியிருக்கலாம். உயிரோட இருக்கான்னு நிம்மதியா இருந்திருப்போம். ஆனா, இப்படி அடிச்சு குத்துயிரா அனுப்பி சாகறதுக்குக் காரணமாயிட்டாங்க’’ என்று இளைய மகன் அலெக்ஸ் பாண்டியனைக் கட்டிக்கொண்டு கதறினார்.

“விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்?” - மறுக்கும் குடும்பத்தினர்...

மணிகண்டனின் தந்தை லெட்சுமணன் கண்பார்வை, கேட்கும் சக்தி குறைபாடுள்ளவர். ‘‘அவனை ஒரு நாள்கூட நாங்க அடிச்சதில்லை. ஆனா, போலீஸு இப்படி அடிச்சிருக்காங்க. அவங்களுக்கெல்லாம் பிள்ளையே இல்லையா? இந்தக் குடும்பத்தை அவன்தான் காப்பாத்தி வந்தான். படிச்சுக்கிட்டே கிடைச்ச வேலையைப் பார்த்தான். போலீஸ் வேலைக்குப் போறதுக்காக டிரெய்னிங் எடுத்தான். அவனைச் சாகுற அளவுக்கு அடிச்சதுமில்லாம, மருந்தைக் குடிச்சுட்டான்னு கதை கட்டுறாங்க’’ என்று அழுதார்.

அங்கு கூடியிருந்த மணிகண்டனின் உறவினர்கள், ‘‘மணிகண்டனோட அம்மா இதய நோயாளி. அப்பாவும் உடம்பு முடியாதவர். மணிகண்டன்தான் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வருவேன்னு சொல்லிக்கிட்டு இருப்பான். காலேஜ்விட்டு வந்ததும் வயல் வேலை, மேய்ச்சல் வேலைக்குப் போயிடுவான். ரொம்ப தன்னம்பிக்கையானவன். அவன் மருந்து குடிச்சுட்டான்னு சொல்றது நம்புற மாதிரி இல்லை. சாத்தான்குளம் வழக்குலயும் போலீஸ் இப்படித்தானே பொய் சொன்னது... பின்னால, போராட்டம் செஞ்ச பிறகுதானே உண்மை தெரிய வந்துச்சு. எங்களோட வருத்தம் என்னன்னா... முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா, மணிகண்டன் இறந்ததுக்கு அனுதாபம் தெரிவிக்கலை. ‘விசாரிக்கப்படும்’னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தாக்கூட, மனசுக்கு ஆறுதலா இருக்கும்.

“விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்?” - மறுக்கும் குடும்பத்தினர்...

டூ வீலர்ல போறவங்களைப் பிடிச்சா ஃபைன் போடுவாங்க, இல்லைன்னா, வண்டியைப் பிடிச்சு வெச்சுக்குவாங்க. ஆனா, மணிகண்டனை மட்டும் பிடிச்ச இடத்துலருந்து அடிச்சே ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்திருக்காங்க. நாலு மணி நேரமா ஸ்டேஷன்ல வெச்சுருக்காங்க. ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுல உள்ளவங்களைக் கூப்பிட்டு பேப்பர்ல கையெழுத்து வாங்கி வீடியோ, போட்டோ எடுத்திருக்காங்க. இறப்புக்குப் பிறகு வீட்டைச் சோதனையிட வந்த முதுகுளத்தூர் டி.எஸ்.பி திருமலை, மனிதாபிமானமே இல்லாம நடந்துக்கிட்டார். ‘நீங்ககூட விஷத்தைக் கொடுத்திருக்கலாம்’னு இரக்கமில்லாமப் பேசினாரு. இப்ப விஷ பாட்டிலை வீட்டுல கண்டெடுத்ததா சொல்லியிருக்குறது சந்தேகமா இருக்கு’’ என்றார்கள்.

தாமரைக்கண்ணன்
தாமரைக்கண்ணன்

உயர் நீதிமன்ற வழிகாட்டல்படி நடத்தப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கை வந்திருப்பதால், அதன்மீது எந்தக் கருத்தையும் சொல்லாமல் பா.ஜ.க உள்ளிட்ட அமைப்புகள் உள்ளன. காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பினர், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, ‘இந்த விஷயத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். உண்மை விரைவில் வெளிவர வேண்டும்.