Published:Updated:

10 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் மாயமான இரிடியம்! - தூத்துக்குடியில் சிக்கியது எப்படி?

எஸ்.பி அலுவலகம்
எஸ்.பி அலுவலகம்

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான டி.ஆர்.டி.ஓ-விலிருந்து மாயமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம், தூத்துக்குடியில் மீட்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

ஜப்பானைத் தாயகமாகக்கொண்ட ஜே.வி.சி நிறுவனம், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த டி.ஆர்.டி.ஓ நிறுவனத்திடமிருந்து இரிடியம் தனிமத்தை வணிகரீதியாக பெற்றுவருகிறது. இந்தநிலையில், கடந்த 2010-ம் ஆண்டு ஜே.வி.சி நிறுவனம், மும்பையிலுள்ள டி.ஆர்.டி.ஓ அமைப்பிடம் இரிடியம் ஆர்டர் செய்திருந்தது. தொடர்ந்து, மும்பையிலிருந்து ஜப்பானுக்கு இரிடியம் பெட்டிகளை அனுப்பும்போது அதிலிருந்து 10 பெட்டிகள் மாயமாகின. இது குறித்து மும்பை நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 144 மி.கி இரிடியம்
பறிமுதல் செய்யப்பட்ட 144 மி.கி இரிடியம்

திருட்டுபோன இரிடியம் பெட்டிகளில், ஒவ்வொரு பெட்டியிலும் தலா ஆறு இரிடியம் குழாய்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன் மொத்த மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் திருட்டுபோன 10 இரிடியம் பெட்டிகளில் மூன்று பெட்டிகள் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

கள்ளச்சந்தையில் இரிடியத்துக்கு விலை அதிகம் என்பதால், அதை விற்பதற்காக தஞ்சாவூரைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்பவரிடம் ஒரு இரிடியம் பெட்டியை கொடுத்திருக்கிறார் சுவாமிநாதன். அதை எடுத்துக்கொண்டு சுவாமிநாதன் அவருடைய நண்பரான முத்துராமலிங்கத்துடன் இனோவா காரில் (பதிவெண்: TN 59 BB-0909) தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதியம்புத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருக்கிறார்கள்.

எஸ்.பி அலுவலகம்
எஸ்.பி அலுவலகம்

தூத்துக்குடியை சேர்ந்த தங்கம், மரியதாஸ், முருகன் ஆகியோர் கள்ளச்சந்தையில் இரிடியத்தை வாங்குவதற்காக விடுதிக்குச் சென்றனர். இது குறித்த ரகசியத் தகவலறிந்த புதியம்புத்தூர் போலீஸார், விடுதிக்குச் சென்று இரிடியம் கடத்தலில் ஈடுபட்ட வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம், தங்கம், மரியதாஸ், முருகன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்த ஆறு இரிடியம் குழாய்கள் அடங்கிய பெட்டியும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இரிடியத்தின் மொத்த எடை 144 மில்லி கிராம். காரில் சோதனை செய்ததில் அதிலிருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வைத்தியலிங்கத்திடம் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், ``சுவாமிநாதனுக்குக் கிடைத்த மூன்று இரிடியம் பெட்டிகளில் ஒன்று திருச்சியிலும், மற்றொன்று நெய்வேலியிலும், மற்றொன்று என்னிடமும் கொடுக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.

இரிடிய துகள்கள்
இரிடிய துகள்கள்

இதையடுத்து இரிடியம் கடத்தலில் ஈடுபட்ட சுவாமிநாதன் மற்றும் அவருடைய கூட்டாளிகளைக் கைதுசெய்ய போலீஸார் திருச்சிக்கும்ம் நெய்வேலிக்கும் விரைந்திருக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்த பிறகே இந்தக் கடத்தலின் பின்னணியிலுள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்த விவரம் தெரியவரும் என்று போலீஸார் கூறியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு