Published:Updated:

மும்பை: வீட்டு வேலை, திருட்டு, எஸ்கேப்! - 18 ஆண்டுகளில் 50 வீடுகளில் கைவரிசை காட்டிய பெண் கைது

வீட்டு வேலை செய்த இடத்தில் திருடிய  பெண்
வீட்டு வேலை செய்த இடத்தில் திருடிய பெண்

நீதிபதியிடம் வனிதா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக இதைச் செய்துவிட்டதாக கூறி நாடகமாடிவிடுவது வழக்கம். இதனால் நீதிபதியும் அவரது நிலையைப் பார்த்து குறுகியகால சிறைத் தண்டனை கொடுப்பது வழக்கம்.

மும்பையின் மேற்குப் பகுதியில், வீட்டு வேலை செய்யும் பெண்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். கொரோனா நேரத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்களில் அதிகமானோர் ஊரைக் காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் பெரும்பாலானோர் வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்காமல், கிடைத்த வேலைக்காரர்களைப் பற்றிச் சரியாக விசாரிக்காமல் வேலைக்கு அமர்த்துகின்றனர். அவர்கள் வேலைக்குச் சேர்ந்த சில நாள்களில் வீட்டு உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்று, கிடைக்கும் பொருள்களைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுவிடும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.

வனிதா
வனிதா

மும்பையில் அது போன்ற ஒரு வீட்டு வேலை செய்யும் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். வனிதா கெய்க்வாட் என்ற பெண், மேற்கு மும்பையில் மிகவும் பணக்காரர்கள் வசிக்கும் ஜுகு பகுதியிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் தீபிகா கங்குலி என்பவரின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் பணிக்குச் சேர்ந்த சில நாள்களிலேயே அங்கிருந்த 10,000 ரூபாய் பணம் மற்றும் 2,500 அமெரிக்க டாலர்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து வீட்டு உரிமையாளர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். அந்தப் பெண் வேலை செய்த வீடு இருந்த கட்டடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதனால் திருடிய பெண்ணின் புகைப்படம் எளிதில் சிக்கியது. ஆரம்பத்தில் அந்தப் பெண் கொடுத்திருந்த முகவரியில் சென்று பார்த்தபோது, அவர் அந்த வீட்டைக் காலி செய்திருந்தார்.

இது குறித்து ஜுகு போலீஸ் அதிகாரி சசிகாந்த் பவார் கூறுகையில், ``வனிதா பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சென்று, அங்கு பணியாற்றும் வாட்ச்மேன்களை பார்த்து யாருக்காவது வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் சொல்லும்படி கூறிவிட்டு, தனது போன் நம்பரையும் கொடுத்துவிட்டு வருவார். அப்படி யாராவது வாட்ச்மேன் மூலம் வனிதாவை வேலைக்கு அழைத்தால், உடனே வேலையில் சேர்ந்துவிடுவார். ஆனால் முகவரி ஆவணங்களைக் கொடுக்கும்படி கேட்டால், சமீபத்தில் தனது வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துவிட்டனர். அதில் ஆவணங்களெல்லாம் வீணாகிவிட்டன. சில நாள்களில் ஏற்பாடு செய்து கொடுக்கிறேன் என்று கூறுவார். வீட்டு உரிமையாளரும் விரைவில் ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுக்கும்படி கூறுவதுண்டு.

கைது
கைது
Representational Image

வீட்டு உரிமையாளர் கொடுக்கும் நேரத்துக்குள் அவரின் நம்பிக்கையைப் பெற்று, அங்கிருக்கும் பொருள்களைத் திருடிச்சென்றுவிடுவது வழக்கம். அதோடு அடிக்கடி தனது வீட்டை மாற்றிக்கொண்டேயிருப்பார். இதனால் அவரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்துவந்தது. இறுதியில் விக்ரோலியிலுள்ள வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டார்” என்று தெரிவித்தார். 2003-ம் ஆண்டிலிருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை செய்து அங்கு திருடி பிடிபட்டும் இருக்கிறார். அதிகமான வழக்குகளில் குறுகியகால சிறைத் தண்டனையே அவருக்கு வழக்கப்படுவது வழக்கம். நீதிபதியிடம் வனிதா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக இதைச் செய்துவிட்டதாகக் கூறி நாடகமாடிவிடுவது வழக்கம். இதனால் நீதிபதியும் அவரது நிலையைப் பார்த்து, குறுகியகால சிறைத் தண்டனை கொடுப்பது வழக்கம். போலீஸார் வனிதாவின் வீட்டைச் சோதனை செய்து பார்த்தபோது வீடு முழுக்க கோர்ட் ஆவணங்களாகக் கிடந்தன. அடிக்கடி வனிதா தனது பெயரையும் மாற்றிக்கொண்டு இது போன்ற திருட்டுக் காரியங்களில் ஈடுபடுவதுண்டு. சூரத்திலும் இரண்டு வீடுகளில் அவர் திருடியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு