Published:Updated:

மும்பை: `சரத் பவார் போல் போனில் பேசிய மர்ம நபர்' - திடுக்கிட்ட உள்துறை அமைச்சக அதிகாரி!

சரத் பவார்
சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போல் போனில் பேசி சில அதிகாரிகளை இடமாறுதல் செய்யும்படி சொன்ன நபர் கைதுசெய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி இருக்கிறது. இந்த அரசின் ரிமோட் கன்ட்ரோல் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரிடம் இருப்பதாகப் பரவலாகக் கூறப்படுகிறது. இதனால் தொழில்துறையினர் உட்பட அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை சரத் பவாரிடம் நேரடியாகச் சென்று முறையிடுகின்றனர். சரத்பவார் சொன்னால் எதுவும் நடக்கும் என்ற நிலை இருப்பதால், அதை மர்ம நபர் ஒருவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

சரத் பவார்
சரத் பவார்

மும்பை மந்த்ராலயாவிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சரத்பவார் என்று அறிமுகம் செய்துகொண்டு பேசினார். அந்த நபர் குறிப்பிட்ட ஒரு வருவாய்த்துறை அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, அவரை இடமாற்றம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அவரின் பேச்சு உள்துறை அமைச்சக அதிகாரிக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. சரத் பவார் போலப் பேசிய நபர் பேசி முடித்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரி சரத் பவாரின் மும்பை இல்லத்துக்கு போன் செய்து இது குறித்து விசாரித்தார். ஆனால் சரத் பவார் வீட்டில் இல்லை. அதோடு போனில் பேசியது வேறு ஒருவர் என்பதும் தெரியவந்தது. உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து போன் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்து போன் செய்த விகாஸ் (57) என்பவரைக் கைதுசெய்தனர். அவர் 'ஸ்பூஃப்' என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி, தனது சத்தத்தை மாற்றிப் பேசியது தெரியவந்தது. புனேயில் பிடிபட்ட அவரோடு அவரின் கூட்டாளிகள் கிரண், தீரஜ் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.

மும்பை: மிரட்டிப் பணம் பறித்த வழக்கு; மாஜி போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்குக்குத் தேடுதல் நோட்டீஸ்
மொபைல்போன்
மொபைல்போன்

அவர்கள் மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார், அவர்களைத் தங்களது காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். மேலும், அவர்கள் குறிப்பிடடிருக்கும் வருவாய்த்துறை அதிகாரிக்கும், கைதுசெய்யப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும், யார் சொல்லி அவர்கள் இது போன்று பேசினார்கள் என்றும், இதே போன்று இதற்கு முன்பு வேறு யார் பெயரிலாவது போனில் பேசி மோசடி செய்திருக்கிறார்களா என்பது குறித்தும் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்துவருகின்றனர். மேலும் மூன்று பேரும் புனேயில் பில்டர் ஒருவரை மிரட்டி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புனே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பை போலீஸாரின் போலீஸ் காவல் முடிந்த பிறகு, புனேவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படும் என்று பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ண பிரகாஷ் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மந்த்ராலயாவுக்கு வரும் அழைப்புகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. 2014-ம் ஆண்டு இதே போன்று சரத் பவார், தற்போதைய மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே ஆகியோரைப்போலப் பேசி வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ராகுல் என்பவர் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு