Published:Updated:

வாட்ஸ்அப்பில் சாட்டிங்; மனைவியின் `தாதா' நண்பரை அழைத்த `கான்ஸ்டபிள்' கணவன்; நடந்தது என்ன?

மும்பையில் அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனரிடம் டிரைவராக இருக்கும் சிவ் சங்கர், தன் மனைவியின் நண்பரைத் திட்டம் போட்டு வரவழைத்திருக்கிறார்.

மும்பை அண்டாப்ஹில் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாக்குமூட்டையில் பாதி எரிந்த நிலையில் தலையில்லாமல் உடல் ஒன்று கிடந்தது. அதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த உடலைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தினர். அந்த உடலில் தலையில்லாமல் இருந்ததால் அது யார் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கொலை
கொலை
Representational image
குடிபோதையில் தினமும் சித்ரவதை: சகோதரனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி கைது!

பிரேத பரிசோதனையில் அந்த உடலின் காலில் ஆபரேஷனின்போது இரும்பு பிளேட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை எடுத்துப் பார்த்த டாக்டர்கள் அந்த இரும்பு பிளேட்டில் இருந்த நம்பர், அதைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றைக் குறித்துக் கொடுத்தனர். அதன் மூலம் அந்த சாதனம் சோலாப்பூர் மிளகாய் வியாபாரி தாதா ஜக்தாலே என்பவருக்குப் பொருத்தப்பட்டது என்பது தெரியவந்தது. அதோடு கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த டாட்டூவும் அவர் யார் என்பதை அடையாளம் காண உதவியாக இருந்தது. கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை அடையாளம் கண்டுகொண்ட போலீஸார் அவரை யார் கொலை செய்தனர் என்று கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பாதி எரிந்த நிலையில் உடல் கிடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களைச் சோதனை செய்த பிறகு ஒரு கார் அங்கு வந்து உடலை வீசிவிட்டுச் செல்வதைக் கண்டுபிடித்தனர். அந்த வாகனத்தின் பதிவெண்ணைக் கண்டுபிடிக்க ஏராளமான கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இறுதியில் கண்டுபிடித்தனர். நம்பர் பிளேட் அடிப்படையில் கார் யாருக்கு சொந்தமானது என்பதைக் கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்ய சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குற்றவாளி ஒரு கான்ஸ்டபிள். மும்பை உதவி போலீஸ் கமிஷனரிடம் டிரைவராக இருக்கும் சிவ் சங்கர் கெய்க்வாட்தான் குற்றவாளி. அவர் தன் மனைவியின் உதவியோடு இந்தக் கொலையைச் செய்திருக்கிறார். போலீஸார் இரண்டு பேரையும் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

கொலை (Representational Image)
கொலை (Representational Image)

இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ``சிவ் சங்கர் மனைவி மோனாலிக்கு தாதா ஜக்தாலேயுடன் பள்ளிப் பருவத்திலிருந்தே பழக்கம் இருந்திருக்கிறது. இது திருமணத்துக்குப் பிறகும் நீடித்திருக்கிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மோனாலி தனது கணவனிடம் சண்டையிட்டு சொந்த ஊருக்குச் சென்று ஒன்றரை ஆண்டுகள் வசித்துவந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் மீண்டும் மும்பைக்கு வந்திருக்கிறார். மீண்டும் மோனாலி தன் நண்பர் தாதாவுடன் வாட்ஸ்அப்பில் ஆட்சேபகரமான சாட்டிங்கில் ஈடுபட்டிருக்கறார். இதைக் கண்டுபிடித்த சிவ் சங்கர் மீண்டும் தன் மனைவியுடன் சண்டை போட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு மனைவியுடன் பேசி ஜக்தாலேவை மும்பைக்கு வரவழைக்கும்படி கேட்டுக்கொண்டார். மனைவியும் நயமாகப் பேசி ஜக்தாலேயை மும்பைக்கு வரவழைத்திருக்கிறார். செப்டம்பர் 29-ம் தேதி தாதர் ரயில் நிலையம் வந்து இறங்கிய ஜக்தாலேவை சிவ் சங்கர்தான் தனது காரில் சென்று அழைத்து வந்திருக்கிறார். அதன் பிறகு எங்கு வைத்து கொலை செய்தார் என்று விசாரித்துவருகிறோம். ஆனால் கொலை செய்த பிறகு தனது வீட்டில்வைத்து ஜக்தாலேவின் உடலைப் பல துண்டுகளாக வெட்டியிருக்கிறார். அதனால் இந்தக் கொலையில் அவரின் மனைவிக்கும் தொடர்பு இருக்கும் என்று கருதுகிறோம். தலையில்லாத உடலைக் கொண்டு வந்து வீசியபோது காரில் மோனாலியும் இருந்தது தெரியவந்திருக்கிறது" என்றார். இந்தச் சம்பவம் நடக்கும்போது அவர்களில் 13, 16 வயது மகள்கள் டியூஷனுக்குச் சென்றிருக்கிறார்கள். போலீஸார் கணவன், மனைவி இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு