மும்பையைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார். 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அந்த பெண் அவர் கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக விரைவிலேயே விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதையடுத்து, அவரின் பெற்றோர் மறுமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்து வந்தனர். அதனால், அந்தப்பெண் திருமண தகவல்களை வழங்கும் இணைய தளத்திலும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் இணைய தளத்திலும் தன் விவரங்களைப் பதிவேற்றம் செய்திருக்கிறார். அதைப் பார்த்த யுவராஜ் போஸ்லே என்பவர் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன் என்று அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். அதோடு அந்தப் பெண்ணிடம் புதிய வேலை தேடுகிறீர்களா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, புதிய வேலைக்குத் தான் உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து இருவரும் நட்பாகப் பழக ஆரம்பித்தனர். தான் தனியார் நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக இருப்பதாகவும், உங்கள் விவரங்களை அனுப்பி வைக்கும்படியும் அந்த நபர் கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணும் அதை நம்பி வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தன் விவரங்களை அனுப்பி வைத்தார். ஆனால் அடுத்த சில நாள்களில் அந்த பெண்ணின் செல்போனுக்கு மர்ம நம்பரிலிருந்து அவரின் அந்தரங்க புகைப்படங்கள் வந்திருக்கிறது.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் செய்வதறியாது திகைத்து நின்றிருக்கிறார். அந்த பெண்ணின் மொபைல் போனை ஹேக் செய்த அந்த மர்ம நபர், அவரின் புகைப்படங்களை எடுத்து அவருக்கே அனுப்பியிருக்கிறார். மேலும், அந்த பெண்ணின் மொபைல் போனிலிருந்து வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடி, 30 லட்சம் ரூபாயை தன் வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேபோல, அந்தப்பெண்ணுக்குச் சொந்தமான 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரையும் கேட்டு மிரட்டியிருக்கிறார். அப்போது தான், தன்னை மிரட்டிக் கொண்டிருக்கும் மர்ம நபர் யுவராஜ் என்று அவருக்குத் தெரியவந்தது. அதையடுத்து, அந்த பெண் தனது காரை அளிக்க மறுத்திருக்கிறார். ஆனால், யுவராஜ் அவரின் அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி அந்த காரை அபகரித்திருக்கிறார். யுவராஜ் தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்ததால், அந்த பெண் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, புனே தாலேகாவ் பகுதியிலிருந்த யுவராஜ் போஸ்லேயை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்கும் டி.சி.பி ரேஷ்மி இது குறித்துக் கூறுகையில், ``எங்களின் விசாரணையில் யுவராஜ் மேலும் 10 பெண்களை மோசடி செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. பெரும்பாலும் விவாகரத்தான அல்லது விதவை பெண்களைத்தான் ஏமாற்றி இருக்கிறார். யுவராஜ் மூலம் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் முன் வந்து புகார் செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.