Published:Updated:

நிழலுலக ராஜாக்கள்: தாவூத் இப்ராஹிம் வாழ்க்கைக் கதை! - இறுதி அத்தியாயம்

நிழலுலக ராஜாக்கள்
நிழலுலக ராஜாக்கள்

தாவூத் கூட்டத்திலிருந்துகொண்டு சோட்டாராஜன் தன்னை வளர்த்துக்கொள்வது அந்த அணியிலிருந்த சோட்டா சகீல் மற்றும் சரத்ஷெட்டி போன்ற தாவூத்தின் பிற கூட்டாளிகளுக்குப் பிடிக்கவில்லை.

படாராஜனைக் கொலை செய்ய பத்தான் கோஷ்டியினர் சரியான தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அப்துல் குஞ்சு என்பவர் மூலம் சந்திரசேகர் சபாலிகா என்ற ஆட்டோ டிரைவர் தேர்வுசெய்யப்பட்டார். சந்திரசேகரிடம் படாராஜன் மாதம் 10 ரூபாய் ஹப்தா வாங்குவதோடு சந்திரசேகரின் சகோதரியையும் அடிக்கடி படாராஜன் கிண்டல் செய்துவந்தான். இதனால் படாராஜன் மீது சந்திரசேகர் கோபத்தில் இருந்தான். 50,000 ரூபாய் கொடுக்கப்பட்டு படாராஜனின் கதையை முடிக்கச் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

சந்திரசேகருக்கு விமானப்படை வீரர் போன்று வெள்ளை உடைகள் அணிவிக்கப்பட்டன. சட்டையில் பிலாய் என்ற பெயருடன் சந்திரசேகர் கோர்ட்டுக்குச் சென்றான். விமானப்படை வீரர் என்ற நினைப்பில் அவனை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ராஜன் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்டம் சற்றுக் குறைந்தவுடன், படாராஜன் நிற்கும் இடத்தை நோக்கி சந்திரசேகர் சென்றான். விமானப்படை வீரர்தான் வருகிறார் என்று போலீஸார் நினைத்தனர். சட்டென அந்தச் சம்பவம் நேர்ந்தது. சந்திரசேகர் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக ராஜனை சுட்டு வீழ்த்தினார். சுட்ட பிறகு எங்கும் தப்பிச்செல்ல முயலவில்லை. சந்திரசேகர் கைதுசெய்யப்பட்டார்.

படாராஜன் கொலை செய்யப்பட்ட பிறகு, சோட்டாராஜன் செம்பூர் பகுதியில் மிகப்பெரிய ரெளடியாக உருவெடுத்தான். தாவூத்துடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த ஊரான செம்பூரில் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்தான். ஒருமுறை பத்தான் கூட்டத்தைச் சேர்ந்த சமத்கான் என்பவ,ர் தாவூத்திடம் வந்து சேர்ந்தார். ஆனால் அவர் ஒரு பிரச்னையில் தாவூத்தின் சகோதரனைப் பிடித்து அடித்துவிட்டார். அதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தாவூத் தானே களமிறங்கினான். சோட்டாராஜனுடன் சென்று சமத்கானை சுட்டுக் கொலை செய்தான்.

தாவூத் இப்ராஹிமுடன் சோட்டாராஜன்
தாவூத் இப்ராஹிமுடன் சோட்டாராஜன்

ஏற்கெனவே தாவூத் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. புதிதாக மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவனைக் கைதுசெய்ய போலீஸ் படை முழுவீச்சில் களத்தில் இறக்கிவிடப்பட்டது.

ஒவ்வொரு முறையும் தாவூத் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு அவரைக் கைதுசெய்ய காவல்துறை செல்கையில், கடைசி நேரத்தில் தப்பிச் சென்றுவிடுவதை வாடிக்கையாகக்கொண்டிருந்தான். இது போலீஸாருக்கே அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இதே பாணியில் பல முறை தாவூத் தப்பித்தான்.

போலீஸில் தாவூத்தின் உளவாளிகள் இருந்தனர். அவர்கள் போலீஸார் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு, கைதுசெய்ய புறப்பட்டவுடன் தாவூத்துக்குத் தகவல் கொடுத்தனர். எனவே தாவூத்தால் தப்பிக்க முடிந்தது. இனியும் சுதந்திரமாகச் சுற்ற முடியாது என்று நினைத்த தாவூத், 1986-ம் ஆண்டு மும்பையில் இருந்து டெல்லிக்கு சென்றான். அங்கிருந்து போலி பாஸ்போர்ட்டில் துபாய் சென்றான்.

தாவூத் பாஸ்போர்ட்டை ஏற்கெனவே போலீஸார் கைப்பற்றியிருந்தனர். அப்போதே தாவூத் சுதாரித்துக்கொண்டான். போலி பாஸ்போர்ட் தயாரித்துவைத்திருந்தான். துபாயிலிருந்துகொண்டே தாவூத் மும்பையை ஆள ஆரம்பித்தான்.

மும்பையில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள தொழிலதிபர்கள், பில்டர்கள் துபாயிலிருக்கும் தாவூத் நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். துபாயில் ஏற்படும் பகையைத் தீர்க்க மும்பையில் ஆட்களைவைத்து எதிரிகளைச் சுட்டுக்கொலை செய்தான் தாவூத். அவனும் சோட்டாராஜனும் சேர்ந்து மும்பையின் பாலிவுட் பிரபலங்கள், பில்டர்கள், தொழிலதிபர்கள் எனப் பணக்காரர்களை மிரட்டி, பணம் பறிப்பதிலும், பில்டர்களிடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதிலும், பீர் பார் மற்றும் ஒயின் ஷாப் உரிமையாளர்களை மிரட்டிப் பணம் பறிப்பதிலும் பிஸியாக இருந்தனர்.

 தாவூத் இப்ராகிம்!
தாவூத் இப்ராகிம்!

மறுபுறத்தில், துபாயில் தனது தொழில் சம்ராஜ்யத்தை விரிவுபடுத்த ஆரம்பித்தான் தாவூத். மும்பையில் சோட்டாராஜன், பீர் பார் ஹப்தா மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் மூலம் ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை சம்பாதித்தான். பீர் பார் உரிமையாளர்கள் மாதம் 50.000 ரூபாய் ஹப்தா கொடுத்தனர். மேலும் சோட்டாராஜன் மும்பையில் தனது கூட்டத்தை விரிவுபடுத்தினான். நூற்றுக்கணக்கான பீர் பார்களை பினாமியாக நடத்திவந்தான்.

தாவூத் கூட்டத்தில் இருந்துகொண்டு சோட்டாராஜன் தன்னை வளர்த்துக்கொள்வது அந்த அணியில் இருந்த சோட்டா சகீல் மற்றும் சரத்ஷெட்டி போன்ற தாவூத்தின் பிற கூட்டாளிகளுக்குப் பிடிக்கவில்லை. இருவரும் தாவூத்திடம் நேரில் புகார் செய்தனர். ஆனாலும் சோட்டாராஜனை தாவூத் முழுமையாக நம்பினான்.

1990-களில் தாவூத் கும்பலில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதற்குப் பழிவாங்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ திட்டம் தீட்டியது. இதற்காக துபாயில் வசிக்கும் இந்திய மாஃபியாக்களான தாவூத் இப்ராஹிம், அனீஸ் இப்ராகிம், மொஹமத் தோஷா, டைகர் மேமன், தஹிர் மெர்ச்சன்ட் போன்றோரை ஐ.எஸ்.ஐ ஒருங்கிணைத்தது. துபாய், அபுதாபி, லண்டன், கராச்சி போன்ற நகரங்களில் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

பாபர் மசூதி இடிப்புக்குப் பழிவாங்க, இந்தியாவில் குறிப்பாக, மும்பையில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஐ.எஸ்.ஐ விரும்பியது. இதற்காக மும்பை முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்திக்கொள்ள ஐ.எஸ்.ஐ ஆலோசித்தது. டைகர் மேமன், மொஹமத் தோஷா ஆகியோர் இந்த ஆபரேஷனுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம்
பாபர் மசூதி இடிப்பு சம்பவம்

மும்பையின் முஸ்லிம் இளைஞர்களை ஒருங்கிணைத்து பாகிஸ்தானுக்கு அழைத்துவரும் பொறுப்பு டைகர் மேமனிடம் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் தாவூத் இவற்றில் ஆர்வம் காட்டாமல் இருந்தாலும், பின்னர் முழு ஆதரவு கொடுக்கச் சம்மதித்தான்.

இவர்கள் நடத்தும் கூட்டங்களில் சோட்டாராஜன் கலந்துகொள்வதை புறக்கணித்தான் அல்லது புறக்கணிக்கப்பட்டான்.

டைகர் மேமன் மும்பையிலிருந்து 30 முஸ்லிம் இளைஞர்களை துபாய்க்கு அழைத்துச் சென்றான். அங்கு அவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டது. அங்கிருந்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்து அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

எட்டு டன் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளையும் துப்பாக்கிகளையும் மகாராஷ்டிராவின் ரத்னகிர் மாவட்ட கடல் பகுதிக்கு பாகிஸ்தானிலிருந்து டைகர் மேமன் கடத்திவந்தான். அங்கிருந்து அவை மும்பைக்குக் கொண்டுவரப்பட்டன. 1993-ம் ஆண்டு, மார்ச் 12-ம் தேதி மும்பையின் ஏர் இந்தியா டவர், சேனா பவன், மும்பை பங்குச்சந்தைக் கட்டடம், பாஸ்போர்ட் அலுவலகம், பாந்த்ரா ஹோட்டல் உட்பட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

மொத்த தாக்குதலுக்கும் தாவூத்தான் பொறுப்பு என்று அனைவரும் நம்ப ஆரம்பித்தனர். ஆனால் இதில் தனக்கு முழுமையாகப் பங்கு கிடையாது என்று தெரிவித்தான் தாவூத். மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மெலானியிடம் தெரிவித்து இந்தியாவிடம் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்தான்.

தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

சரணடைவதற்கு இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தான். தன்மீது இருக்கும் முந்தைய வழக்குகளைக் கைவிட வேண்டும் என்றும், தன்னைச் சிறையில் அடைக்காமல் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தான். ஆனால், மத்திய அரசு, ஒப்புக்கொள்ளவில்லை.

தாவூத் எப்போது வேண்டுமானாலும் சரணடையலாம் என்றும், அவன் மீதான வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் என்றும் தாவூத்தின் எந்த நிபந்தனையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தொடர்ந்து துபாயில் இருப்பது தனக்கு நல்லதல்ல எனப் புரிந்துகொண்டான் தாவூத். தொடர்ந்து தனது தளத்தை கராச்சிக்கு மாற்றிக்கொண்டான்.

முற்றும்.

நிழலுலக ராஜாக்கள்: தாவூத், சபீர் சித்ரா, காமாத்திபுரா - ஒரு விறு விறு அத்தியாயம்! | பகுதி- 9
அடுத்த கட்டுரைக்கு