Published:Updated:

`ஆதார் அட்டையால் என்னுடைய வாழ்க்கையே நரகமாகிவிட்டது!’ - மும்பைப் பொறியாளரின் அதிர்ச்சி அனுபவம்

`என்னுடைய வீட்டுக்கு வந்த ஒருவர் 17,000 ரூபாயை திரும்பத் தரும்படி கேட்டார். நடந்ததை முழுவதும் அவருக்கு விவரித்த பின்னர் பொறுமையாக எழுந்து சென்றார்’ - மும்பைப் பொறியாளர், அமேயா தாப்ரே

மும்பைப் பொறியாளர் - அமேயா தாப்ரே
மும்பைப் பொறியாளர் - அமேயா தாப்ரே

மும்பையிலுள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்தவர், அமேயா தாப்ரே. கணினி பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருடைய ஆதார் கார்டின் நகலை வலைதளங்களில் மர்ம நபர்கள் பதிவேற்றியுள்ளனர். இதனால், `என்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது' எனக் கூறியுள்ளார்.

தாப்ரே, கடந்த 2012-ம் வருடம் ஆதார் கார்டைப் பதிவு செய்துள்ளார். மூன்று வருடங்கள் கழித்து புனேயிலுள்ள முந்துவா பகுதியின் காவல்துறையினர் இவருடைய வீட்டுக்குச் சென்று, செல்போன் வழியாக பெண் ஒருவரை துன்புறுத்திய வழக்கு தொடர்பாக விசாரித்துள்ளனர். தன்னுடைய விளக்கத்தையும் புனே காவல்துறையிடம் தாப்ரே தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கின் விசாரணையில் தாப்ரேவின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சிம் கார்டு வாங்கியுள்ளது தெரியவந்தது. `விரைவில் இந்தப் பிரச்னை சரியாகிவிடும்' எனக் கருதிய அவர் எந்த நடவடிக்கையும் மேற்படி எடுக்கவில்லை.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

இதைத் தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு தந்தையுடன் இணைப்புக் கணக்கு ஒன்றைத் தொடங்க வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், இதற்காக ஆதார் கார்டை கொடுக்கும்போது அவரின் ஆதார் கணக்கு ஏற்கெனவே இன்னொரு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த தாப்ரே, ``எனது ஆதார் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று வங்கிக்கு மெயில் அனுப்பியுள்ளார். நடக்கும் சம்பவங்கள் குறித்து குழப்பமடைந்ததால் தன்னுடைய பெயரை கூகுளில் டைப் செய்துள்ளார்.

ஒரு சில வலைதளங்களில் அவருடைய ஆதார் கார்டின் நகல் இருப்பதைப் பார்த்து மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னுடைய ஆதார் கார்டின் நகலைப் பயன்படுத்தி சிலர் இணையத்தில் ஷாப்பிங் போன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றியுள்ளதும் அவருக்குத் தெரியவந்தது.

``ஆதார் எண் மையத்தைத் தொடர்புகொண்டு இதுதொடர்பாக புகார் அளித்தேன். `ஆதார் எண்ணை மாற்ற முடியாது. இந்த எண்ணை டி-ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஆனால், இதுவும் நிரந்தரத் தீர்வு அல்ல. ஒவ்வொரு மோசடிக்கும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறினர். ஆனால், இது சாத்தியமில்லாத ஒன்று. தவறே செய்யாமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளேன். ஆகவே, இந்தப் பிரச்னைக்கு விரைவில் ஒரு தீர்ப்பைத் தர வேண்டும்” என்று தாப்ரே, ஆதார் எண் வழங்கும் மையத்தைத் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். மேலும், சைபர் க்ரைம் காவல்துறையிடமும் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

ஆதார் திருட்டு
ஆதார் திருட்டு

இணையத்தில் வெளியாகியுள்ள ஆதாரின் நகலையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், இதுதொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர் காவல்துறைக்கு அளித்த புகாரில், ``கடந்த அக்டோபர் மாதம் என்னுடைய வீட்டுக்கு வந்த ஒருவர் 17,000 ரூபாயை திரும்பத் தரும்படி கேட்டார். நடந்ததை முழுவதும் அவருக்கு விவரித்த பின்னர் பொறுமையாக எழுந்து சென்றார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை மிரர் ஊடகத்திடம் அவர் பேசுகையில், ``என்னுடைய வாழ்க்கை நரகமாகிவிட்டது. ஒரு நாளைக்கு செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் போக குறைந்தபட்சம் இரண்டு, மூன்று மெயில்கள் என்னுடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது தொடர்பாக வருகின்றன. ஜார்க்கண்ட், ஹரியானா என்று என்னுடைய ஆதார் பயன்படுத்தப்படும் மாநிலங்களின் பட்டியல் நீள்கிறது. நான் தத்துக் குழந்தை ஒன்றை வளர்த்து வருகிறேன்.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

நான் இல்லாத நேரங்களில் அறிமுகமில்லாதவர்கள் வீட்டுக்கு வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையிடம் இதுதொடர்பாக பேசும்போது, `நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்கின்றனர். சைபர் க்ரைம் அதிகாரிகளும் இணையத்தில் உள்ள தகவல்களை நீக்க உதவி செய்யவில்லை” என்றார்.