Published:Updated:

`உன் அப்பா அம்மாவுக்கும் இதே கதிதான்!’ - மும்பையில் 15 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

மும்பையில் 15 வயதுச் சிறுமி மீது தாக்குதல் நடத்திய பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Representation Image
Representation Image

மும்பையைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி அங்குள்ள கல்லூரியில் டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலையில் மாணவி வழக்கம் போல் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது மாணவியைத் தடுத்த மூன்று பேர் அவர் மீது ஆசிட் வீசிச் சென்றுள்ளனர். இதையடுத்து மாணவி அளித்த தகவலின் பேரில் அவரின் தந்தை சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவியின் மார்பு, கை, கால்கள் உள்ளிட்ட பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி படித்த பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் முன்விரோதம் காரணமாக ஆசிட் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Representation Image
Representation Image

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``சிறுமி மும்பையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தபோது காரணமே இல்லாமால் பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராகக் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இதை மனதில் கொண்டு சிறுமி மீது ஆசிட் வீசியுள்ளனர். இந்த வழக்கில் நான்கு பேருக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

`யாரை நம்பி யார் இருக்கிறார்கள்; சிந்தித்துப் பேசுங்கள்!'- கங்கனாவுக்கு சிசோடியா பதிலடி

சிறுமி பேசுகையில், ``மைதானத்துக்கு வாக்கிங் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஜாவீத் சார் என்னை வழிமறித்தார். அவருடன் ஹாசிம், ஏமன் ஆகியோர் இருந்தனர். மூன்று பேரும் என்னுடைய கைகளைப் பிடித்துக்கொண்டனர். அப்போது பிரின்சிபல் சார் என் மீது வெள்ளை நிறத்தில் எதையோ ஊற்றினார். இதில் என்னுடைய கை, கால்கள் கடுமையாகக் காயமடைந்தது. என்னால் வலி தாங்க முடியவில்லை. நான் கதறினேன்.

Representation Image
Representation Image

அப்போது அவர்கள்,`இதேமாதிரி உன் அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள் எல்லோரின் மீதும் ஆசிட் அடிப்போம்' என மிரட்டினர். வெள்ளை நிறக் காரில் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஒருவழியாக என் தந்தைக்கு இந்தத் தகவலை கூறினேன். அவர்தான் மருத்துவமனைக்கு என்னை அழைத்து வந்தார்” என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மாணவி வீடு திரும்பினார். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.