Published:Updated:

மனைவி பிரிந்து சென்ற 45வது நாள்! 3 குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட தந்தை

தற்கொலை
தற்கொலை ( Representational Image )

மும்பையில் மனைவி பிரிந்துசென்று 45 நாள்கள் ஆன நிலையில், 3 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மும்பையில் நலசோபாரா பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ் பார்மர். இவருக்கு 12 வயதில் மகனும் 13 மற்றும் 17 வயதில் பெண் குழந்தைகளும் உள்ளனர். குடும்பப் பிரச்னையில் பாரமரின் மனைவி 45 நாள்களுக்கு முன் அவரை விட்டுப் பிரிந்து சென்றதாகத் தெரிகிறது. இந்தநிலையில், அவர் மூன்று குழந்தைகளோடு நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பார்மரின் தந்தை விஜூ நேற்று மாலை 4 மணியளவில் தேநீர் அருந்த வெளியே சென்றுவரலாம் என கைலாஷை அழைத்திருக்கிறார். ஆனால், குழந்தைகள் மூவரும் தூங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் எழுந்தவுடன் செல்லலாம் எனவும் கைலாஷ், தந்தையிடம் பதிலளித்திருக்கிறார். பின்னர், 8.30 மணியளவில் விஜூ அவரது வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறார். நீண்டநேரமாகக் கதவு திறக்கப்படாததால், அருகிலிருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்திருக்கிறார்.

அப்போது, கைலாஷ், அவரின் மூன்று குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட பின்னர், 4 பேரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.

கைலாஷின் தந்தை விஜூவிடம் நடத்திய விசாரணையில், அவரின் மனைவி 45 நாள்களுக்கு முன்னர் பிரிந்து சென்றது தெரியவந்திருக்கிறது. இதனால், குழந்தைகள் கைலாஷின் பராமரிப்பில் இருந்து வந்திருக்கிறார்கள். இதனால் ஏற்கெனவே மன உளைச்சலில் இருந்த கைலாஷ், மனைவியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பார்த்திருக்கிறார்.

`மனைவி இறந்த 3-வது நாள்!' - தற்கொலை முடிவெடுத்த மீஞ்சூர் போலீஸ் ஏட்டு

அதனால், தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். 12 வயது மகன் மற்றும் 17, 13 வயது மகள்கள் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் கைலாஷ். ஆனால், அந்த முயற்சி தோல்வியடையவே, கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

மூன்று குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு