Published:Updated:

மும்பையின் புதிய போதை மன்னன் மூஸா! - மாங்குரோவ் காட்டில் தொடரும் போலீஸ் வேட்டை...

மும்பை
பிரீமியம் ஸ்டோரி
மும்பை

ஆறு மாதங்களுக்கு முன்பு மும்பை தனிப்படை போலீஸார் மாங்குரோவ் காட்டைச் சுற்றிவளைத்து மூஸாவைக் கைதுசெய்ய முயன்றனர்.

மும்பையின் புதிய போதை மன்னன் மூஸா! - மாங்குரோவ் காட்டில் தொடரும் போலீஸ் வேட்டை...

ஆறு மாதங்களுக்கு முன்பு மும்பை தனிப்படை போலீஸார் மாங்குரோவ் காட்டைச் சுற்றிவளைத்து மூஸாவைக் கைதுசெய்ய முயன்றனர்.

Published:Updated:
மும்பை
பிரீமியம் ஸ்டோரி
மும்பை
வரதா பாய், ஹாஜி மஸ்தான், சோட்டா ராஜன், தாவூத் இப்ராஹிம்... இவர்களெல்லாம் மும்பையை ஆட்டிப்படைத்த பழைய தாதாக்கள். ஆனால், மும்பையின் இன்றைய லேட்டஸ்ட் போதைக் கடத்தல் மன்னன் மூஸா. ‘‘மும்பையைத் தன் பிடிக்குள் வைத்திருந்த பலரும் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்கள். அந்த இடத்தை இப்போது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூஸா கைப்பற்றியிருக்கிறான். மாங்குரோவ் காடுகளிலிருந்து கண்ணாமூச்சி காட்டும் அவனைப் பிடிக்க தலைகீழாக நின்று, தண்ணீர் குடித்தும் இதுவரை முடியவில்லை’’ என்கிறார்கள் மும்பை போலீஸார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவைச் சேர்ந்தவன் மூஸா. 2010 ஆண்டுவாக்கில் மும்பைக்குப் படிப்பு விஷயமாக வந்தபோது, அவனுக்கு 20 வயது இருக்கலாம் என்கிறார்கள் போலீஸார். நியூ பாம்பேயின் கார்கர் பகுதியில் தங்கியிருந்தவன், விசா காலம் முடிந்தவுடன் பாஸ்போர்ட்டை அழித்துவிட்டு, தனது அடையாளத்தையும் மாற்றிக்கொண்டான். ஆரம்பத்தில் பெரிய வியாபாரிகளிடமிருந்து போதைப் பொருள்களை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்றுவந்தவன், ஒருகட்டத்தில் அந்த போதைப் பொருள்கள் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்துதான் வருகின்றன என்பதை அறிந்து நேரடியாக அவற்றைக் கடல்வழியாக வரவழைத்தான். பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி மும்பையின் வி.ஐ.பி-க்கள் வரை பலரும் மூஸாவின் வாடிக்கையாளர்கள் ஆனார்கள். போலீஸார் பலமுறை ஸ்கெட்ச் போட்டும் மூஸாவைப் பிடிக்க முடியவில்லை. மூஸாவைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன்களை நம்மிடம் விவரித்தார்கள் மும்பை தனிப்படை போலீஸார்...

மூஸா
மூஸா

‘‘மும்பை நகருக்குள் தங்கியிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது இருப்பிடத்தை நவி மும்பைக்கு மாற்றிக்கொண்டான் மூஸா. அங்கும் போலீஸார் அவனைப் பிடிக்கத் திட்டமிட்டதைத் தெரிந்துகொண்டு, மும்பை கடற்கரைப் பகுதிகளான மான்கூர்டு - வசாய் இடையிலான மாங்குரோவ் கழிமுகப் பகுதிக்குத் தப்பிச் சென்றான். புதிய ஆட்கள் யாரும் அவனிடம் அவ்வளவு சீக்கிரம் சரக்கு வாங்கிவிட முடியாது. கழிமுகப் பகுதிக்குச் செல்பவர்கள், நீண்ட தூரத்துக்கு முன்பே வாகனங்களை நிறுத்திவிட்டு, சில கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். வழியில் குடிசைப் பகுதி ஒன்று வரும். அங்கும் கணிசமாக மூஸாவின் ஆட்கள் இருப்பார்கள். அங்கு சில சோதனைகள் நடக்கும். அதைத் தாண்டி காட்டுக்குள் பயணிக்கும் வழியிலும் திடீரென என்ட்ரி கொடுக்கும் மூஸாவின் அடியாட்கள், நன்றாகச் சோதித்த பிறகே மூஸாவின் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அப்படிச் செல்பவர்களிடம் செல்போன் தொடங்கி குண்டூசி வரை எதுவும் இருக்கக் கூடாது. அவனிடம் வியாபாரம் செய்ய வருபவர்கள் முன்பாக மேஜையில் துப்பாக்கியை வைத்துவிட்டே பேச்சை ஆரம்பிப்பான். தொழில் போட்டியில் தனது எதிரிகள் அனைவரையும் வீழ்த்திவிட்ட நிலையில், இப்போது அவன் வைப்பதுதான் விலை. வியாபாரிகள் எதிர்த்து பேசுவதோ, கேள்விகள் கேட்பதோ இயலாத விஷயம். அதேபோல வியாபாரம் பேசும் முதன்முறை மட்டுமே மூஸாவைச் சந்தித்துப் பேச முடியும். அதன் பிறகு டீலிங் அனைத்தும் அவனது ஆட்கள் மூலம் மட்டுமே நடக்கும். பிறகு எதற்காகவும் அவனைச் சந்திக்க அனுமதி கிடையாது.

ஆறு மாதங்களுக்கு முன்பு மும்பை தனிப்படை போலீஸார் மாங்குரோவ் காட்டைச் சுற்றிவளைத்து மூஸாவைக் கைதுசெய்ய முயன்றனர். மூஸா குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் தங்கியிருக்கிறான் என்று உறுதியான துப்பு கிடைத்தும் அவன் சிக்கவில்லை. அன்றைய தினம் குடிசைப் பகுதியிலிருக்கும் மூஸாவின் உளவாளிகளான சிறுவர்கள் சிலர் விசிலடித்தும், பட்டத்தை உயரமாகப் பறக்கவிட்டும் சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். இரவில் புதிய ஆட்கள் நடமாட்டம் தெரிந்தால், லேஸர் லைட்டை அடித்து சிக்னல் கொடுப்பார்கள். உடனடியாக மூஸா கடல்வழியாகத் தப்பிவிடுவான்.

அதன் பிறகும் ஒருமுறை தனிப்படை போலீஸார் மூஸாவின் இருப்பிடத்தைச் சுற்றிவளைத்தார்கள். ஆனால், அவனது மெய்காப்பாளன் ஒபிரோ எக்வெல்கர் என்பவனைத்தான் பிடிக்க முடிந்தது. ஐந்து நிமிடங்கள் முன்புவரை அவனுடன் இருந்த மூஸா காற்றைப்போல அங்கிருந்து மறைந்துவிட்டான். இத்தனைக்கும் யாரையும் நம்பாமல் மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணை இயக்குநர் சமீர் வாங்கடே நேரடியாக நடத்திய ரெய்டு அது. மூஸாவுக்குச் சேறும் சகதியும் நிறைந்த அந்த மாங்குரோவ் காட்டுப் பகுதி மிகவும் பரிச்சயம். தண்ணீருக்கு அடியில் நீண்ட நேரம் தம் பிடித்து தப்புவதிலும் அவன் கில்லாடி. அப்படித்தான் அந்தமுறையும் அவன் தப்பியிருக்கிறான்.

மூஸாவின் கும்பலைச் சேர்ந்தவர்கள் கோகெய்ன், ஹெராயின் மற்றும் மது பார்ட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வகை கெமிக்கல் போதைப்பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்கிறார்கள். அவற்றை கொலம்பியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தனி நெட்வொர்க் வைத்திருக்கிறார்கள். ஒபிரோ சொன்ன சில தகவல்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கின்றன. இனி மூஸா எங்கும் தப்ப முடியாது. விரைவில் அவனைப் பிடித்துவிடுவோம்” என்கிறார்கள் நம்பிக்கையுடன்!

மும்பையின் புதிய போதை மன்னன் மூஸா! - மாங்குரோவ் காட்டில் தொடரும் போலீஸ் வேட்டை...