Published:Updated:

`கண்டித்தேன், கேட்கவில்லை!'- படுக்கை அறையில் கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்

சத்யா கோபாலன்

கண்டித்தும் கேட்காத கணவரை சரமாரியாக குத்திக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

Murder
Murder

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள நல்லோஸ்பரா பகுதியில் வசித்து வந்தவர் சுனில் கடம் (36). இவரின் மனைவி ப்ரனாளி (33). இந்தத் தம்பதிக்குக் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்து 7 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். சுனில் தன் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்துவந்தார்.

Sunil Kadam - Pranali
Sunil Kadam - Pranali

இந்தநிலையில், சுனிலுக்கும் மனைவி ப்ரனாளிக்கும் சில நாள்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் இவர்களுக்குள் சண்டை வெடித்துள்ளது. தங்கள் படுக்கை அறையில் வாக்குவாதம் செய்தபடி இருந்துள்ளனர்.

வாக்குவாதத்துக்குப் பிறகு சுனில் தூங்கச் சென்றுள்ளார். மனைவி ப்ரனாளி சமையல் அறைக்குள் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்குள் வந்துள்ளார். அப்போது, தூங்கிக்கொண்டிருந்த சுனில் வயிற்றில் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். சத்தம் போடக் கூடாது என்பதற்காக சுனிலின் தொண்டையை கத்தியால் குத்தியுள்ளார்.

Murder
Murder

இதில் சுனில் உயிரிழந்தார். பின்னர் எதுவும் நடக்காததுபோல் வெளியில் வந்த ப்ரனாளி, தன் வீட்டுக் கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாமனார், மாமியாரை எழுப்பி, `உங்கள் மகன் தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்’ எனக் கூறிவிட்டு அழுது நாடகமாடியுள்ளார்.

Vikatan

இதையடுத்து சுனிலின் தந்தை ஆனந்தா, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சுனில் இறந்த இடத்தில் சோதனை நடத்தியுள்ளனர். தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் ஒருவர் எதற்காகத் தன்னைத் தானே இத்தனை முறை கத்தியால் குத்த வேண்டும் என்ற சந்தேகம் காவலர்களுக்கு எழுந்துள்ளது.

Murder
Murder

இருந்தாலும் சுனிலின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, வீட்டிலிருந்தவர்களிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதலில் தன் கணவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடிய ப்ரனாளி, காவலர்களின் விசாரணையில் சிக்கிக்கொண்டார்.

இதுபற்றிப் பேசிய துலிஞ் பகுதி இன்ஸ்பெக்டர் டி.எஸ்.பாட்டீல், ``ஆனந்தா அளித்த புகாரின் பேரில் அவரது வீட்டில் நாங்கள் சோதனை நடத்தினோம். தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் ஒருவர் தன்னைத் தானே குத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அதுவும் 11 முறை வயிற்றிலும் தொண்டையிலும் குத்திக்கொள்ளத் தேவையில்லை. அதனால் நாங்கள் சுனிலின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, சம்பவம் நடந்தபோது அவருடன் இருந்த ப்ரனாளியிடம் விசாரணை நடத்தினோம். இறுதியில் கணவரை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். `தன் கணவர், வேறு ஒரு பெண்ணுடன் நட்பு வைத்திருந்ததால் அதைக் கண்டுபிடித்துக் கண்டித்தேன். அவர் கேட்காததால் அதற்குப் பழிவாங்கவே கொலை செய்தேன்’ என எங்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

Arrest
Arrest

இதையடுத்து ப்ரனாளி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குழந்தைகள் இருவரும் சுனிலின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

News & Photo Credits : Hindustan Times