Published:Updated:

`க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால், உங்க பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும்!’ - ரூ.29 லட்சத்தை இழந்த பெண்

வீட்டில் இருந்த பழைய மரச்சாமான்களை ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்ய முயன்ற மும்பைப் பெண் ரூ.29 லட்சத்தை இழந்திருக்கிறார்.

ஆன்லைன் மோசடிப் பேர்வழிகளிடம் பொதுமக்கள் பணத்தை இழப்பது தொடர்கதையாகிவருகிறது. மும்பை மேற்குப் பகுதியில் வசிக்கும் ரீனா பாட்டீல் (52) என்ற பெண், வீட்டில் இருந்த பழைய மரச்சாமான்களை விற்பனை செய்ய முடிவு செய்தார். ஆன்லைனில் விளம்பரம் செய்தால் எளிதில் விற்றுவிடலாம் என்று நினைத்து, ஃபேஸ்புக்கில் மார்க்கெட்-ப்ளேஸில் இது தொடர்பாக விளம்பரம் செய்தார். அதோடு தனது வீட்டு பழைய மரச்சாமான்களின் புகைப்படங்களையும் அதில் பதிவேற்றம் செய்தார். சிறிது நேரத்தில் அன்கிதா குமாரி என்பவரிடமிருந்து, அவற்றை வாங்கிக்கொள்வதாக மெசேஜ் வந்தது. இதையடுத்து இருவரும் மொபைல் நம்பர்களை பறிமாறிக்கொண்டனர்.

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

பணத்தை முன்கூட்டியே அனுப்பினால்தான் மரச்சாமான்களை அனுப்ப முடியும் என்று ரீனா தெரிவித்தார். அதற்கு அன்கிதாவும் சம்மதித்தார். அன்கிதா, தான் அனுப்பும் க்யூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்யும்படி கூறி வாட்ஸ்அப்பில் க்யூஆர் கோடு ஒன்றை அனுப்பிவைத்தார். அதை ரீனா ஸ்கேன் செய்தவுடன் ரீனாவின் வங்கிக் கணக்கிலிருந்து 78,000 ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரீனா, இது குறித்து அன்கிதாவிடம் கேட்டதற்கு, உங்களுக்கு வேறு ஒரு நம்பரிலிருந்து அழைப்பு வரும் என்றும், பணம் திரும்பக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

சென்னை: `ரூ. 1.5 கோடி மோசடி’ - மளிகைக் கடை ஊழியரின் மனைவி, உறவினர் கைது!

சொன்னபடியே வேறு ஒரு நபர் ரீனாவுக்கு போன் செய்து, `நான் அனுப்பும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் உங்கள் பணம் இரட்டிப்பாகத் திரும்பக் கிடைக்கும்’ என்று தெரிவித்தார். அவர் சொன்னபடி ரீனா க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தார். உடனே ரீனாவின் கிரெடிட் கார்டுகளிலிருந்தும் பணம் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது. இது குறித்து ரீனா தனது மகனிடம் தெரிவித்தார். அவர் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரீனா இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். பொதுமக்கள் முன்பின் தெரியாதவர்கள் அனுப்பும் க்யூஆர் கோட்களை ஸ்கேன் செய்யக் கூடாது என்று போலீஸார் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

சைபர் தாக்குதல்
சைபர் தாக்குதல்

இதே போன்று ஆன்லைன் நண்பரிடம் மும்பை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 72 வயது நபர் 4.8 லட்சத்தை இழந்திருக்கிறார். மும்பை அருகிலுள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் அந்த முதியவர் டேட்டிங் ஆப்பில் பதிவு செய்திருந்தார். அதிலிருந்து நம்பர் எடுத்து மும்பை முதியவருக்கு பெண் ஒருவர் போன் செய்தார். அந்தப் பெண் தனது பெயர் எடித் என்றும், பிரிட்டனைச் சேர்ந்தவர் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அதைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். எடித், தான் மும்பை வருவதாகத் தெரிவித்தார். முதியவரும் அவரின் வருகையை எதிர்பார்த்து இருப்பதாகச் சொன்னார்.

திடீரென அந்தப் பெண் மும்பை வந்துவிட்டதாகவும், விமான நிலையத்தைவிட்டு வெளியில் வருவதில் சிக்கல் இருப்பதாகவும், தன்னிடம் இருக்கும் பொருள்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். உடனே அந்தப் பெண் கேட்ட தொகையை முதியவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பிவைத்துவிட்டு விமான நிலையத்துக்கு வெளியில் பல மணி நேரம் காத்திருந்தார். ஆனால் அந்தப் பெண் வரவே இல்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், இது குறித்து போலீஸில் புகார் செய்திருக்கிறார். இது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு