Published:Updated:

"நானும் தங்கச்சியும் கதறினோம்; அம்மாவை அப்பா எரிச்சி கொன்னுட்டாங்க!''- 8 வயது மகளால் சிக்கிய தந்தை

``வரதட்சணைக் கொடுமை செய்து, என் மகள் ரேணுகாவை எரித்துக் கொலை செய்துவிட்டார், ராணுவ வீரரான மருமகன் நாகேந்திரன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார், ரேணுகாவின் தந்தை ஏழுமலை.

நாகேந்திரன்
நாகேந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த மங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், ஏழுமலை. இவருக்கு, நான்கு மகள்கள் ஒரு மகன். இவரின் 3-வது மகள் ரேணுகாவுக்கும் (26), போளூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான நாகேந்திரன் (30) என்பவருக்கும் 2012 -ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு யோகஸ்ரீ (8), தான்யஸ்ரீ (2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குஜராத்தில் பணியாற்றும் நாகேந்திரன், தன் குடும்பத்துடன் குஜராத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்துவந்தார்.

ரேணுகா, நாகேந்திரன் மற்றும் குழந்தைகள்
ரேணுகா, நாகேந்திரன் மற்றும் குழந்தைகள்

இந்நிலையில் கடந்த 27-ம் தேதியன்று, ஏழுமலைக்கு ராணுவ குடியிருப்பிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், ‘ ரேணுகா சமையல் செய்துகொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டர் வெடித்ததில் அவருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். உடனடியாகக் கிளம்பி குஜராத்துக்கு வாருங்கள்'' என்று கூறியுள்ளார்கள். இதைக் கேட்டு பதறிப்போன ஏழுமலை, தனது மகன் தரணிதரனுடன் குஜராத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது, ரேணுகா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ரேணுகாவின் உடல் மார்ச்சுவரியில் உள்ளது என்று காண்பித்துள்ளார்கள். செய்வது அறியாமல் திகைத்துப்போன ஏழுமலை, மகளின் உடலை வாங்கிக்கொண்டு மருமகன் நாகேந்திரனுடன் கிருஷ்ணாபுரம் வந்து சடங்குகளைச் செய்து ரேணுகாவை அடக்கம் செய்துள்ளனர்.

இதையடுத்து, அழுதுகொண்டே இருந்த பேத்தி யோகஸ்ரீ, தாத்தா ஏழுமலையிடம், ‘அம்மா மேல மண்ணெண்ணெய்யை ஊத்தி அப்பாதான் எரிச்சார்’ என்று கூறியிருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ந்துபோன ஏழுமலை குடும்பத்தினர், யோகஸ்ரீயுடன் நேற்று திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியிடம் நாகேந்திரன் மீது புகார் கொடுத்தனர்.

ரேணுகா
ரேணுகா

இதுகுறித்து யோகஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘'அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். அப்பா, அம்மாவைப் போட்டு அடிப்பார். அம்மா அழுதுக்கிட்டே இருக்கும்.

தீபாவளி அன்னிக்கி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்துச்சி. அப்போ, அம்மா மேல மண்ணெண்ணெய்யை ஊத்தி தீ வச்சி எரிச்சிட்டாரு அப்பா. அதப் பார்த்து நானும் தங்கச்சியும் அழுதோம்.

மகள் யோகஸ்ரீ
மகள் யோகஸ்ரீ

சத்தம் கேட்டு பக்கத்துல உள்ளவங்க வந்து நெருப்பை அணச்சி அம்மாவை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டு போய்ட்டாங்க. அங்க போய் பார்த்தா, அம்மா செத்துப்போயிருச்சு. அப்போ, இத வெளிய சொல்லக்கூடாது’னு அப்பா மெரட்டினாரு'' என்று கண்ணீர் விட்டார்.