சென்னை தி.நகர் ராகவைய்யா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மலர்கொடி (67). இவர் கடந்த 21.5.2002-ம் தேதி வீட்டில் கொலைசெய்யப்பட்டார். அவரின் வீட்டிலிருந்து 5 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மலர்கொடி வீட்டில் வேலைசெய்த அழகர்சாமி, அவரின் சகோதரர் ராமகிருஷ்ணன், நண்பர் சக்திவேல் ஆகியோருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த சக்திவேல், திண்டுக்கல், கொல்லம்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி ஆகியோரை 2002-ம் ஆண்டு போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ராமகிருஷ்ணன் என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் இவர், திண்டுக்கல் பகுதியில் இருப்பதாக பாண்டிபஜார் போலீஸாருக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் திண்டுக்கல்லுக்குச் சென்று ராமகிருஷ்ணனைப் பிடித்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பிறகு அவரைக் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொலை வழக்கில் இருபது ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டது எப்படி என போலீஸாரிடம் கேட்டதற்கு, ``டாக்டர் மலர்கொடி கொலை வழக்கில் உடனடியாக இருவர் கைதுசெய்யப்பட்டுவிட்டனர். இதில் ராமகிருஷ்ணன் என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இந்தக் கொலை சம்பவத்துக்குப் பிறகு அவர் தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரைப் போலீஸார் தேடிவந்த சூழலில் கேரளாவில் குடும்பத்துடன் ராமகிருஷ்ணன் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஆனால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கேரளாவில் குடியிருந்த ராமகிருஷ்ணன், சில மாதங்களுக்கு முன்பு தன் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு வந்தார். இந்தத் தகவல் கிடைத்ததும் அவரைக் கைதுசெய்துவிட்டோம். கொலை நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் தைரியமாக ஊருக்கு வந்த ராமகிருஷ்ணன், எங்களிடம் சிக்கிக்கொண்டார்" என்றனர்.