Published:Updated:

`ஃப்ரைடு ரைஸில் சிதறிய ரத்தத்துளிகள்!'- ஃபாஸ்ட் புட் கிச்சனில் நடந்த கொலை

எஸ்.மகேஷ்

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபாஸ்ட் புட் கிச்சனில் நாகாலாந்தைச் சேர்ந்தவரை வடமாநிலத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் கொலை செய்துள்ளனர்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் ஃபாஸ்ட் புட் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் உணவுப் பொருள்கள், ஸ்நாக்ஸ் வகைகள் விற்கப்படும். மேலும், இங்கு தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் புட் உணவு வகைகள் சென்னையில் உள்ள சில பிளாட்பார கடைகளுக்கு மினி வேன் மூலம் சப்ளை செய்யப்பட்டு விற்பனைச் செய்யப்படும். இதற்காகக் கடையின் பின்பகுதியில் உணவு தயாரிக்கும் இடம் உள்ளது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பணியாற்றிவருகின்றனர்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

இந்தநிலையில் இன்று பிற்பகல் உணவு தயாரிக்கும் கூடத்திலிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அடுத்து சிறிது நேரத்தில் உணவு தயாரித்துக்கொண்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள் தப்பி ஓடினர். அவர்களின் மீது ரத்தக்கறைகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் கார்த்திக் மற்றும் ஊழியர்கள் உணவு தயாரிக்கும் இடத்துக்குச் சென்றனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்துக்கிடந்தார். அவரின் தலையிலும் உடலிலும் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் ரத்தத்துளிகள் சிதறியிருந்தன. இதையடுத்து வேளச்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் பகலவன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

 கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

கொலை செய்யப்பட்டுக் கிடந்த வடமாநில வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். அடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, ரத்தக்கறைகளோடு மூன்று வாலிபர்கள் ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடையின் உரிமையாளர் கார்த்திக்கிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ஜித்தோ என்கிற ஜித்து. நாகாலாந்தைச் சேர்ந்தவர். இவர், இந்தக்கடையில் சில ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். மேலும் தப்பிய ஓடியவர்களும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஜான்தோ, ரஞ்சித் மற்றும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. எதற்காக அவர்கள் ஜித்துவைக் கொலை செய்தார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``உணவுப் பொருள்கள் தயாரித்துக்கொண்டிருக்கும்போதுதான் இந்தக் கொலை நடந்துள்ளது. இதனால் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களின் மீது ரத்தம் படிந்துள்ளது. மேலும், மூன்று வடமாநில வாலிபர்கள் ஒன்று சேர்ந்து ஜித்துவை கொலை செய்துள்ளனர். முதலில் இரும்புக் கம்பியால் அவரின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர்.

ஜித்துவின் சடலம்
ஜித்துவின் சடலம்

அடுத்து, கத்தியால் அவரைக் குத்தியுள்ளனர். இதனால்தான் ஜித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. வடமாநில வாலிபர்கள் மூன்று பேரும் சிக்கினால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்றனர்.

ஃபாஸ்ட் புட் கடையில் நடந்த கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.