Published:Updated:

க்ரைம் டேப்ஸ்: தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கொலை; ஒரே கைரேகை! -துப்பு துலங்கியது எப்படி?| பகுதி 2

க்ரைம் டேப்ஸ்
க்ரைம் டேப்ஸ்

ஆடு மேய்க்கும் சிறுமி கொலை செய்யப்பட்டுக் கிடந்ததும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஓரன்ய்ள்ள காட்டுப் பகுதியில்தான்!

கடந்த பாகத்தில் லாரி டிரைவர் சத்யா சிறையில் சக கைதியிடம் தன் வீரபராக்கிரமங்களைப் பற்றிச் சொல்லி மாட்டிக்கொண்டதைச் சொல்லியிருந்தேன். ஆனால், அவன் சொன்ன வார்த்தையை மட்டும் நம்பி அவனை ஜோதிமணி வழக்கில் கைதுசெய்திருக்க முடியுமா?

கான்ஸ்டபிள் ஜோதிமணி வழக்கில் அவரது நண்பர் ஜெயபாலைக் கைதுசெய்வதற்கு முன்பே போலீஸுக்கு மிகப்பெரிய சந்தேகம் ஒன்று இருந்தது. ஜோதிமணி உடலில் இருந்த கைரேகைகள்தான் அவை. ஜெயபால் கொலை செய்திருக்க முடியும் என்று செல்போன் உரையாடல்கள் மற்றும் சந்தர்ப்ப சாட்சிகளைவைத்து போலீஸ் முடிவு செய்து, அவரை கைதும் செய்திருந்தார்கள். ஆனால் இறந்து கிடந்த ஜோதிமணி உடை மற்றும் உடம்பில் இருந்த கைரேகை, ஜெயபாலின் கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை.

சிறையிலிருக்கும் சத்யா, `ஜோதிமணியை நான்தான் கொலை செய்தேன்’ என்று வாய்ச் சவடால் விட்டதை அடுத்து அந்த வழக்கை விசாரித்துவந்த காவல்துறை அதிகாரி புத்திசாலித்தனமாக ஒரு காரியத்தைச் செய்தார்.

ஜோதி உடலில் இருந்த காயங்கள்

ஜோதி உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட கைரேகையை மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பிவைத்தார். `இந்த ரேகைகள் சம்பந்தப்பட்ட வழக்கு ஏதேனும் உங்கள் பகுதியில் இருந்தால் உடனே தகவல் தரவும்’ என்ற செய்தியையும் அதனுடன் அனுப்பிவைத்துவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தார்.

க்ரைம்
க்ரைம்
pixabay

வழக்கமாக குற்றவாளிகளைத் தேடிப் பிடித்து கைதுசெய்து சிறையில் அடைப்பார்கள். இந்த வழக்கில் குற்றவாளி ஏற்கெனவே சிறையில் இருக்கிறான். அப்படியென்றால் அவன் முதன்முறைக் குற்றவாளியாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏற்கெனவே சிலபல சம்பவங்கள் செய்திருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி முடிவு செய்துதான் கைரேகையை அனுப்பிவைத்தார்.

கைரேகையை அனுப்பிய சில மணித் துளிகளில் அவருக்கு அதிர்ச்சிகரமான ஒரு செய்தி வந்து சேர்ந்தது. காட்டுப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் இதே கைரேகை பதிவாகியிருப்பதாக பதில் வந்தது. அந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்பது அந்த அதிகாரியின் பல்ஸை எகிறவைத்தது.

அதேபோல் கொலை செய்யப்பட்ட இன்னொரு பெண்ணின் உடம்பிலும் இதே கைரேகை பதிவாகியிருப்பதாக மற்றொரு காவல் நிலையத்திலிருந்து தகவல் வந்து சேர்ந்தது. அது அந்த அதிகாரியை நிமிர்ந்து உட்காரவைத்தது.

இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் தொழிலாளி. நள்ளிரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் லாரி டிரைவர்கள்தான் இவரின் கஸ்டமர்கள். ஆக, சத்யா ஒரு லாரி டிரைவர் என்பது இந்த வழக்கில் கச்சிதமாகப் பொருந்திப்போனது.

க்ரைம்
க்ரைம்
pixabay

ஆடு மேய்க்கும் சிறுமி கொலை செய்யப்பட்டுக் கிடந்ததும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள காட்டுப் பகுதியில்தான்! சத்யாவின் பயண வழியில்தான் இந்தக் கொலையும் நடந்திருக்கிறது. அந்த அதிகாரி தானும் சரியான பாதையில் போய்க்கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்.

கான்ஸ்டபிள் ஜோதிமணி கொலையோடு இவ்விரு கொலைகளையும் சத்யா செய்திருக்கிறான் என்று முடிவு செய்தார். அப்போது அந்த அதிகாரிக்கு ஒரு மின்னல்போல ஒரு யோசனை உதித்தது. சத்யா தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களுக்கு இடையேதான் லாரி ஓட்டிக்கொண்டிருந்தான். இவ்விரு மாநில காவல்துறைக்கும் ஜோதிமணி உடம்பில் கைப்பற்றப்பட்ட கைரேகை மாதிரிகளை அனுப்பிவைத்தார்.

ஒரே கைரேகை

சில மணி நேரங்களில் ஃபேக்ஸ் வரத் தொடங்கியன. இந்த மாநில எல்லைகளில் அடுத்தடுத்து கொலைசெய்யப்பட்ட பாலியல் தொழிலாளிகள், ஆடு மாடு மேய்க்கும் பெண்களின் உடல்களிலும் இதே கைரேகைதான் பதிவாகியிருந்திருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த வழக்கிலும் கொலையாளி சிக்கவே இல்லை. சத்யா தொடர்ந்து லாரியில் பயணம் செய்துகொண்டிருந்ததால் போலீஸால் அவனை நெருங்க முடியாமல் போய்விட்டது. சத்யா சிக்காமல் இருந்ததற்கு இது மட்டும் காரணம் அல்ல. கொலை செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் பாலியல் தொழிலாளிகள் என்பதால் போலீஸார் அதில் அவ்வளவாக ஆர்வம்காட்டவில்லை. அந்த உயிர்களுக்கு அவ்வளவுதான் மதிப்புபோலும். அதேபோல மாடு மேய்க்கும் பெண்களும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே என்பதால், இவர்களின் மரணங்கள் காவல்துறையினரின் மனங்களை அசைத்துப் பார்க்கத் தவறிவிட்டன.

க்ரைம்
க்ரைம்
pixabay

ஜோதிமணி வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த காவல் அதிகாரியின் டேபிளில் ஃபேக்ஸில் வந்த வழக்கு விவரங்கள் குவிந்துகிடைந்தன. அத்தனையும் கொலை வழக்குகள். பெரும்பாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள். மாநிலங்கள் வேறு, கொலை நடந்த இடங்கள் வேறு, கொலையான பெண்களில் யாருக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனால் அனைத்தையும் இணைக்கும் ஒரே புள்ளி அந்தப் பெண்களில் உடலில் இருந்த சத்யாவின் கைரேகைதான்.

சத்யா சாதாரணக் கொலைகாரன் அல்ல, சைக்கோ கில்லர் என்பதை போலீஸ் உணர்ந்தபோது, சத்யாவால் தங்களுடைய இரவுகள் பல மாதங்களுக்கு தூங்கா இரவுகளாக இருக்கப்போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இதே சத்யாவால் காவல்துறையைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் தற்கொலை செய்யப்போகிறார் என்பதையும் யாரும் யூகித்திருக்க மாட்டார்கள்

க்ரைம் டேப்ஸ் தொடரும்...


பகுதி 1-க்குச் செல்ல...

க்ரைம் டேப்ஸ்: 50 கொலை, பாலியல் வன்கொடுமை; தமிழகத்தை உலுக்கிய பரபரப்பு சம்பவம் | பகுதி 1
அடுத்த கட்டுரைக்கு