Published:Updated:

தூத்துக்குடி: ரெளடிகளுடன் நட்பு; தாய் மாமாவின் கொலைக்குப் பழி! - போலீஸ் ஏட்டு சிக்கியது எப்படி?

சிப்காட் காவல் நிலையம்
சிப்காட் காவல் நிலையம்

தூத்துக்குடியில் தலைமைக் காவலர் ஒருவரின் தாய் மாமாவைக் கொலை செய்தவரை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ரெளடிகளுடன் சேர்ந்து பழிக்குப் பழியாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான், பாத்திமா நகரைச் சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன். சிப்காட் வளாகம் அருகில் டீக்கடை நடத்திவந்தார். இவர்மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், கடந்த 9-ம் தேதி மீளவிட்டான் ரயில் நிலையம் அருகில் ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட பொன் மாரியப்பன், மோகன்ராஜ்
கைதுசெய்யப்பட்ட பொன் மாரியப்பன், மோகன்ராஜ்

மணியாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில், சிப்காட் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பல கொலை வழக்குகளில் தொடர்புடைய மோகன்ராஜை போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், தனது நண்பரான பொன் மாரியப்பன் சொன்னதற்காக லூர்து ஜெயசீலனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. பொன் மாரியப்பன், மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவருகிறார்.

விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒத்துக்கொண்டதால், இருவரும் கைதுசெய்யப்பட்டு பேரூரணியிலுள்ள தூத்துக்குடி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளியைப் பிடித்தது எப்படி என மாவட்ட எஸ்.பி ஜெயகுமாரிடம் பேசினோம். “கொலை செய்யப்பட்ட லூர்து ஜெயசீலன், சிப்காட் பகுதியில டீக்கடை நடத்திக்கிட்டு வந்திருக்கார். அவர் மேல தென்பாகம் போலீஸ் ஸ்டேஷன்ல கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில இருக்கு. ஆனா, 2011-ம் வருஷத்துக்குப் பிறகு அவர் மேல எந்த கிரிமினல் கேஸும் பதிவாகலை. அவரோட உடம்புல 17 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது.

ஜெயக்குமார் மாவட்ட எஸ்.பி
ஜெயக்குமார் மாவட்ட எஸ்.பி

அதைவெச்சுத்தான், முன்விரோதம் அல்லது பழிக்குப்பழியாகக்கூட இந்தக் கொலை நடந்திருக்கலாம்னு முடிவு செஞ்சோம். அந்தப் பகுதியில உள்ள ஒரு தனியார் மில்லில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செஞ்சோம். அதுல ஒரே பைக்கில் ரெண்டு பேரு பதற்றத்தோட போகுறதைப் பார்த்தோம். அந்த வண்டி எண்ணைவெச்சு முதலில் மோகன் ராஜை விசாரிச்சோம். மோகன்ராஜ் மேலயும் ஏற்கெனவே சில வழக்குகள் நிலுவையில இருக்கு. அவரை விசாரிச்சதில் பொன் மாரியப்பனின் தாய் மாமாவின் கொலைக்குப் பழிக்குப் பழியாக ஜெயசீலனைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். பொன் மாரியப்பனிடம் விசாரணை நடத்துனதுலயும் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்” என்றார்.

கொலை செய்த மோகன்ராஜூம் பொன் மாரியப்பனும் அளித்த வாக்குமூலத்தில், “சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன்ல ஹெட் கான்ஸ்டபிளா இருக்குற பொன் மாரியப்பனோட தாய் மாமா அழகுங்கிறவரை 1998-வது வருஷம் கொலை செஞ்சுட்டாங்களாம். அந்த கொலை கேஸுல லூர்து ஜெயசீலனும் ஒரு குற்றவாளி. அதனால, லூர்துவை பழிக்குப்பழியா கொலை செய்யணும்னு எங்கிட்ட நிறைய தடவை அழுது உதவி கேட்டார். எட்டு வருசமா பொன் மாரியப்பனும் நானும் நண்பர்களா இருந்தோம். சில குற்றவழக்குகள்ல அவர் எனக்கு உதவியிருக்கார்.

போலீஸார் ஆய்வு
போலீஸார் ஆய்வு

அதனால, அவர் சொன்னதுனால லூர்து ஜெயசீலனைக் கொலை செஞ்சேன். ஜெயசீலனை எனக்கு ஏற்கெனவே நல்லாத் தெரியும்கிறதுனால, சரக்கு அடிக்கப் போலாமான்னு மீளவிட்டான் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் கூட்டிட்டுப் போயி கத்தியால குத்தினேன். அதுக்குப் பிறகு பொன் மாரியப்பனும் வெறித்தனமா ஜெயசீலன் உடம்புல சரமாரியா குத்தினார். அதுக்குப் பிறகு நாங்க தப்பிச்சுப் போயிட்டோம். சிசிடிவி கேமராவுல நாங்க பைக்குல போனதைவெச்சு எங்களை போலீஸ் பிடிச்சுட்டாங்க” எனக் கூறியுள்ளனர். சில போலீஸார் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுடன் நட்பாக உள்ளனர். அந்தக் கூடா நட்புதான் தற்போது கேடாய் முடிந்துள்ளது!

அடுத்த கட்டுரைக்கு