Published:Updated:

அஞ்சலி போஸ்டரில் எச்சரிக்கை... இறுதிச்சடங்கில் ரத்த சபதம்... முகத்தை சிதைத்து கொலை!

அஞ்சலி போஸ்டரில் எச்சரிக்கை...
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சலி போஸ்டரில் எச்சரிக்கை...

பெலிக்ஸ் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக அன்றைய தினம் மதியமே தங்களது அட்ராசிட்டியைத் தொடங்கியிருக்கிறது சின்ராஜ் டீம்.

சமீபகாலமாக பழிக்குப் பழியாக நடக்கும் கொலைகளால் பதறிப்போயிருக்கிறது திருச்சி. இந்த நிலையில், கொலையானவரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் எச்சரிக்கைவிடுத்து, ஒரு கொலைக்குப் பழிதீர்க்க நடைபெற்ற இன்னொரு கொலையால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள் திருச்சி மக்கள்!

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி மாலை 7 மணி. திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே 24 வயதான சின்ராஜ் என்ற இளைஞரை, மர்மக்கும்பல் ஒன்று வெட்டிச் சாய்த்து, தலையைத் துண்டித்தது. ‘உயிரிழந்த சின்ராஜின் கோஷ்டிக்கும், ரெளடி அலெக்‌ஸ் கோஷ்டிக்கும் முன்பகை இருந்திருக்கிறது. அலெக்ஸ் கோஷ்டியினர் சின்ராஜைக் கொலைசெய்திருக்கிறார்கள்’ என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதில் அலெக்ஸ் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள்.

அஞ்சலி போஸ்டரில் எச்சரிக்கை... இறுதிச்சடங்கில் ரத்த சபதம்... முகத்தை சிதைத்து கொலை!

அப்போதே, சின்ராஜின் கொலைக்குப் பழிவாங்க அவரது கோஷ்டி தயாரானது. சின்ராஜ் மரணத்துக்கு ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் ‘விரைவில்’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு, அடுத்த கொலைக்கான ‘ஹின்ட்’ கொடுத்திருந்தார்கள். இந்த விவகாரம் திகிலைக் கிளப்பவே... போஸ்டர் அடித்த ஐந்து பேரை போலீஸார் உடனடியாகக் கைதுசெய்தார்கள். ஆனாலும், சின்ராஜ் கொலைக்குப் பழிக்குப் பழியாக அவரது கோஷ்டி எப்போது வேண்டுமானாலும் அலெக்ஸ் தரப்பில் ஒருவரைக் கொலை செய்யலாம் என்று போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவந்தார்கள்.

இந்த நிலையில்தான், டிசம்பர் 12-ம் தேதி இரவு, பொன்மலைப்பட்டி மாவடிக்குளம் அருகே வந்த அலெக்ஸின் தம்பி பெலிக்ஸை, சின்ராஜ் கோஷ்டி ஓட ஓட விரட்டி முகத்தைச் சிதைத்து கொடூரமாகக் கொலைசெய்தது. போஸ்டரில் எச்சரித்ததுபோலவே கொலை நடந்திருப்பதால் திருச்சி காவல்துறை கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக சின்ராஜின் சகோதரர்கள் ரமேஷ், சக்திவேல், கூட்டாளிகள் மனோஜ், நிஜி (எ) பிரகாஷ், சுபாஷ், கிஷோர், ஜோஸ்வா பீட்டர், டார்வின் ஆன்ரோ, மனோஜ்குமார், சிவராம் ஆகிய 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் 19 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது இன்னும் அதிர்ச்சிகரமான விஷயம்.

இது குறித்து விவரமறிந்த வட்டாரத்தில் பேசினோம்... ‘‘சின்ராஜின் இறுதிச் சடங்கின்போதே அவரின் கோஷ்டியினர் பாட்டிலை உடைத்து, கையைக் கிழித்துக்கொண்டு, சின்ராஜின் சடலத்தின் முன்பு ரத்தம் சொட்டச் சொட்ட ‘அலெக்ஸைப் பழிவாங்குவோம்’ என்று சபதம் எடுத்தார்கள். ‘ஜெயில்ல இருக்குற அலெக்ஸோட கதையை முடிக்கிறதுக்கு முன்னாடி அவனோட தம்பியைப் போட்டாத்தான் அவனுக்கு வலின்னா என்னன்னு தெரியும்’ என்று சின்ராஜின் சகோதரர்கள் சக்திவேலும் ரமேஷும் உக்கிரமாகவே இருந்திருக்கிறார்கள். இது போலீஸாருக்குத் தெரிந்ததும் அலெக்ஸ் குடும்பத்தினரை கவனமாக இருக்கச் சொல்லி எச்சரித்துள்ளார்கள். இதனால் தலைமறைவாக இருந்த பெலிக்ஸ், சில நாள்களுக்கு முன்புதான் பொன்னேரிபுரத்துக்கு வந்திருக்கிறார். அதைத் தெரிந்துகொண்ட சின்ராஜ் கோஷ்டி, பெலிக்ஸைக் கொலைசெய்திருக்கிறது.

பெலிக்ஸ்
பெலிக்ஸ்

பெலிக்ஸ் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக அன்றைய தினம் மதியமே தங்களது அட்ராசிட்டியைத் தொடங்கியிருக்கிறது சின்ராஜ் டீம். சின்ராஜ், அலெக்ஸ் கோஷ்டிகளுக்கு இடையே நான்கு மாதங்களுக்கு முன்பு தகராறு நடந்தபோது, போண்டா மணி என்பவர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தியிருக்கிறார். அதன் பிறகுதான் சின்ராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் டிசம்பர் 12-ம் தேதி மதியம், ‘அன்னைக்கு மட்டும் நீ எங்களைத் தடுக்காம விட்டிருந்தா, அப்பவே அலெக்ஸை முடிச்சிருப்போம். அன்னைக்கு அவனை உயிரோட விட்டதாலதான் சின்ராஜைப் போட்டுட்டான். எல்லாத்துக்கும் காரணம் நீதான்’ என்று போண்டா மணியையும், அவரின் கூட்டாளி ஒருவரையும் சின்ராஜ் டீம் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியிருக்கிறது. ரத்தக் காயங்களுடன் போண்டா மணி, திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து நடந்ததுதான் அட்ராசிட்டியின் உச்சம்... சம்பவ இடத்துக்கு இரண்டு போலீஸார் சென்று சின்ராஜ் கோஷ்டியினரை விசாரித்திருக்கிறார்கள். அவர்களோ, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுக்க... பயந்துபோன போலீஸார், தாங்கள் வந்த பைக்கை அங்கேயே போட்டுவிட்டு, ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். அதன் பிறகும் அடங்கவில்லை அந்த ரெளடிகள்... பொன்மலைப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே பேருந்து ஒன்றை அரிவாளைக் காட்டி மறிக்க, பேருந்தில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். இவையனைத்தும் பெலிக்ஸ் கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக டிசம்பர் 12-ம் தேதி மதியம் நடைபெற்ற சம்பவங்கள். அப்போதே போலீஸார் தீவிரமாகச் செயல்பட்டு, சின்ராஜ் கோஷ்டியை வளைத்திருந்தால், அன்றைய தினம் இரவு நடந்த பெலிக்ஸ் கொலையைத் தடுத்திருக்கலாம். போலீஸார் அலட்சியமாக இருந்ததுதான் இந்தக் கொலைகளுக்குக் காரணம்’’ என்றார்கள்.

அஞ்சலி போஸ்டரில் எச்சரிக்கை... இறுதிச்சடங்கில் ரத்த சபதம்... முகத்தை சிதைத்து கொலை!

திருச்சி எஸ்.பி சுஜித்குமாரிடம் பேசினோம். ‘‘கடந்த 20 நாள்களில் பத்து ரெளடிகளைச் சிறையில் அடைத்துள்ளோம். குற்றங்களைத் தடுக்க தினசரி மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போலீஸார் ரவுண்ட்ஸ் போகிறார்கள். சின்ராஜ் கொலை சிட்டி லிமிட்டான பொன்மலைப்பட்டியில் நடந்ததால், சிட்டி போலீஸார்தான் அந்தக் குற்றவாளிகளை ஃபாலோ செய்துகொண்டிருந்தார்கள். பழைய வழக்குகளில் எதற்கெல்லாம் பழிக்குப்பழி கொலைகளுக்கு வாய்ப்பிருக்கிறதோ அவற்றையெல்லாம் இன்னும் தீவிரமாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

“இந்த கொலை இதோடு முடியாது... அடுத்தடுத்து தொடரும்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இனியேனும் விழித்துக்கொள்ளுமா காவல்துறை?