Published:Updated:

``எங்களைக் கொலை செய்ய பிளான் பண்ணினார்... நாங்க முந்திக்கிட்டோம்” - 2 சிறார்களின் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஓட ஓட ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு சிறார் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

``எங்களைக் கொலை செய்ய பிளான் பண்ணினார்... நாங்க முந்திக்கிட்டோம்” - 2 சிறார்களின் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஓட ஓட ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு சிறார் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
தூத்துக்குடி

தூத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பெயின்ட்டரான சரவணகுமார், தாளமுத்துநகரில் வசித்துவந்த நிலையில், அங்குள்ள சிலருடன் அவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு குடும்பத்துடன் பிரையண்ட்நகரில் வந்து குடியேறியிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட சரவணகுமார்
கொலை செய்யப்பட்ட சரவணகுமார்

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் தன் உறவினர் சிவாவை மதுரைக்கு பஸ் ஏற்றிவிடுவதற்காக தன்னுடைய தம்பி முகேஷ்கண்ணனுடன் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கிறார். மூவரும் பேருந்து நிலையத்துக்குள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மூன்று பைக்குகளில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல், சரவணகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், சரவணகுமாரின் இரண்டு மணிக்கட்டுகளும் துண்டாகின. தலை, கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இதையடுத்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்தனர். ஆய்வாளர் ரபிசுஜின் ஜோஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு சிறுவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். ``சரவணகுமாரோட நண்பர் ராஜாமணிக்கும், மனோவா ரோஸிங்கிறவருக்கும் மூணு வருஷமா முன் விரோதம் இருந்து வந்துச்சு. இதுல ராஜாமணி, சரவணகுமாரோட சேர்ந்து மனோவா ரோஸைக் கொலை செஞ்சுடுவேன்னு சொன்னார்.

கொலை செய்யப்பட்ட சரவணகுமாரின் உடல்
கொலை செய்யப்பட்ட சரவணகுமாரின் உடல்

கொலை செய்யத் திட்டமும் போட்டு ஒரு வாரமா தேடிக்கிட்டு இருந்தாங்க. இது மனோவா ரோஸுக்குத் தெரிஞ்சு போச்சு. அவருக்கு நாங்க நெருக்கமா இருக்குறதுனால எங்களையும் டார்கெட் பண்ணினார். `அவங்க நம்மளைக் கொலை செய்யுறதுக்கு முன்னால நாமளே அவங்க ரெண்டு பேரையும் கொலை செஞ்சுடுவோம்’னு எங்ககிட்ட சொன்னார் மனோவா ரோஸ். ராஜாமணியோட அப்பா ரெண்டு நாளுக்கு முன்னால இறந்துபோயிட்டார்.

அதனால அவர் வீட்டைவிட்டு வெளிய வரலை. இந்த நிலைமையில சரவணகுமாரை கண்காணிச்சதுல அவர் புது பஸஸ்டாண்ட்ல இருக்குறதா எங்களோட நண்பர் ஒருத்தர் சொன்னார். ராஜாமணியை அப்புறம் பார்த்துக்கலாம், கையில கிடைச்ச சரவணகுமாரை முதல்ல கொன்னுடுவோம்னு மனோவாரோஸ் சொன்னதுனால பஸ் ஸ்டாண்ட்லவெச்சு அரிவாளால வெட்டினோம்” என்றனர்.

கொலை நடந்த புதிய பேருந்து நிலையம்
கொலை நடந்த புதிய பேருந்து நிலையம்

அந்த இரண்டு சிறுவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மனோவா ரோஸ், அவருடைய நண்பர்களான துரைசாமி, கார்த்திகேயன் ஆகியோரைக் கைதுசெய்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள், அந்தப் பகுதி வழியே சென்றவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கொலைச் சம்பவத்தைப் பார்த்து பதறி ஓடினர். அந்தக் கும்பலிடம் சரவணகுமார் தன்னை வெட்ட வேண்டாம் என கைகூப்பி உயிருக்காகக் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.