ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகிலிருக்கும் வி.சி.மோட்டூர் பிள்ளையார்க் கோயில் தெருவைச் சேர்ந்த குழந்தைவேலு (35) என்பவர் பைக் மெக்கானிக் வேலை செய்துவந்தார். இவருக்குத் திருமணமாகி பிரேமா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அதேபோல, வி.சி.மோட்டூர் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) என்பவர் லாரிகளில் பழுதுநீக்கும் வேலை செய்துவந்தார். சரவணனுக்கும் திருமணமாகி ரேகா என்ற மனைவியும், இரு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்களான குழந்தைவேலுவும், சரவணனும் நேற்று மாலை வி.சி.மோட்டூரிலுள்ள லாரி பழுது பார்க்கும் நிலையத்தில் மது அருந்தி புத்தாண்டைக் கொண்டாடினர். அப்போது, அங்கிருந்த லாரி ஓட்டுநர் ஒருவரிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த லாரி ஓட்டுநர், அவர்கள் இருவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தைவேலுவின் உயிர் பிரிந்துவிட்டது. இதையடுத்து, ஆபத்தான நிலையிலிருந்த சரவணனை மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழியிலேயே அவரும் உயரிழந்துவிட்டார்.
இது பற்றித் தகவலறிந்ததும், வாலாஜாபேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சம்பவ இடத்தில் நின்றிருந்த ஒரு லாரியின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. அந்த லாரியைக் கைப்பற்றி, அதன் ஓட்டுநர் குறித்து விசாரித்தபோது, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் நிர்மல்குமார் என்பது தெரியவந்தது. போலீஸார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அந்த இளைஞரைப் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், இரட்டைக்கொலை செய்தவரே அவர்தான் என்பதை ஒப்புக்கொண்டார். மதுபோதையில் இருந்த குழந்தைவேலுவும் சரவணனும் ‘லாரியை நிறுத்தக் கூடாது’ எனத் தொந்தரவு செய்து, தகராறில் ஈடுபட்டதாகவும், அதனால் ஏற்பட்ட கோபத்தில் குத்திக் கொன்றதாகவும் நிர்மல்குமார் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நிர்மல்குமாரை கைதுசெய்திருக்கும் போலீஸார், ரத்தினகிரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகிறார்கள். அதேசமயம், கைதுசெய்யப்பட்ட நிர்மல்குமார் மீது ஏற்கெனவே 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.