Published:Updated:

`வேற சமூகத்துக்கு ஆதரவா போஸ்டர் ஒட்டுனா கிழிக்கத்தான் செய்வேன்' - ஒரே சமூகத்துக்குள் நடந்த கொலை!

கொலை

தூத்துக்குடியில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர், மாற்றுச் சமூகத்தின் தலைவர் ஜயந்தியை முன்னிட்டு ஒட்டிய போஸ்டரைக் கிழித்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.

`வேற சமூகத்துக்கு ஆதரவா போஸ்டர் ஒட்டுனா கிழிக்கத்தான் செய்வேன்' - ஒரே சமூகத்துக்குள் நடந்த கொலை!

தூத்துக்குடியில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர், மாற்றுச் சமூகத்தின் தலைவர் ஜயந்தியை முன்னிட்டு ஒட்டிய போஸ்டரைக் கிழித்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
கொலை

தூத்துக்குடி மூணு செண்டு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், கறிக்கடையில் வேலை பார்த்துவருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் இருகிறார். இவரின் மகன், தூத்துக்குயிலுள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார். மூணு செண்டு பகுதியில் டாக்டர் அம்பேத்கரின் சிலை இருக்கிறது. இந்தச் சிலை அமைந்திருக்கும் பகுதியில், அதே சமூகத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவர், மாற்றுச் சமூகத்தின் தலைவரின் ஜயந்தி விழாவை முன்னிட்டு, பல தலைவர்களின் புகைப்படம் தாங்கிய போஸ்டரைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒட்டியிருக்கிறார். இந்த நிலையில், மாரிமுத்துவின் மகன், இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தப் போஸ்டர்களைக் கிழித்திருக்கிறாராம். “வேற சமூகத் தலைவருக்கு போஸ்டர் ஒட்டுனா கிழிக்கத்தான் செய்வேன்” எனச் சொன்னாராம்.

தென் பாகம் காவல் நிலையம்
தென் பாகம் காவல் நிலையம்

இதையடுத்து இரு தரப்பிற்கும் மோதல் ஏற்படவே, இரு தரப்பையும் அழைத்துச் சமாதானம் செய்ததுடன், மாரிமுத்துவின் மகனை அழைத்து  போலீஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலையில் மாரிமுத்து மதுபோதையில், மாற்றுச் சமூகத் தலைவரின் ஜயந்தி விழாவுக்கு போஸ்டர் ஒட்டியது தொடர்பாகத் தெருவுக்குள் அவதூறாகப் பேசினாராம். இதையடுத்து முகேஷ் தரப்பினர், மாரிமுத்துவின் வீட்டுக்கு வந்து தட்டிக்கேட்டுள்ளனர்.

அப்போது வீட்டின் பின்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த மாரிமுத்து மீண்டும் அவதூறாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து மாரிமுத்து, முகேஷ் தரப்பினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் மாரிமுத்துவின் மகனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், சில காயங்களுடன் அவர் தப்பியோடியிருக்கிறார். மகனை வெட்ட முயன்றபோது குறுக்கே வந்து தடுக்க முயன்ற மாரிமுத்துவுக்கும் அரிவாள்  வெட்டு விழுந்தது. அதில் அவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மாரிமுத்துவின் மகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.  

உயிரிழந்த மாரிமுத்து
உயிரிழந்த மாரிமுத்து

ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாற்றுச் சமூகத்தின் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ஒட்டியதும், அதனால் ஒரே சமூகத்துக்குள் மோதல் ஏற்பட்டு  ஒருவர் உயிரிழந்த சம்பவமும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. கட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தூத்துக்குடிக்கு வருகை தந்திருக்கும் நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், அதே சமூகத்தைச் சேர்ந்த கும்பலால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.