Published:Updated:

`பக்கெட்டில் பெட்ரோல், தீப்பந்தத்தோடு தயாரா வந்திருந்தார்!’- மதுரவாயில் பெண்ணின் இறுதி வாக்குமூலம்

கொலை செய்யப்பட்ட பெண் கொரசா பேகம்
கொலை செய்யப்பட்ட பெண் கொரசா பேகம்

`என் முதல் கணவருக்குப் பிறந்த மகனையும், மகளையும் என் 2-வது கணவர் மக்ஃபுல் அலி வெறுக்க ஆரம்பித்தார். அதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு எங்களை தீ வைத்து கொளுத்திவிட்டார்' என கொலை செய்யப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மதுரவாயல், புளியம்பேடு, பெரிய தெருவைச் சேர்ந்த கொரசா பேகம் அவரின் மகன் அக்ரம் மல்லிக், மகள் மஹிதா பாசும் ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவத்தை கொரசா பேகத்தின் 2-வது கணவர் மக்ஃபுல் அலி சர்தார் செய்ததாக கொரசா பேகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையிலிருந்தபோது இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனிடம் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். எனது சொந்த ஊர் கொல்கத்தா மாநிலம் ஹவுரா ஆகும். என் முதல் கணவர் இஸ்ரபில் மல்லிக். அவருக்கும் எனக்கும் கரீம் (23), அக்ரம் மல்லிக் (22) என்ற மகன்களும் டஹிதா பாசும் (14) என்ற மகளும் உள்ளனர். என் முதல் கணவருக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவர் என்னைப் பிரிந்து வேறு திருமணம் செய்துகொண்டார்.

எப்ஐஆர்
எப்ஐஆர்

எங்களின் மூத்த மகன் கரீம் அவருடன் வசித்துவருகிறான். பின்னர் நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக மக்ஃபுல் அலி சர்தார் என்பவரை திருமணம் செய்துகொண்டேன். நான் அவருடன் 2016-ம் ஆண்டு சென்னைக்கு என்னுடைய 2-வது மகன் அக்ரம் மல்லிக், மகள் மஹிதா பாசுமுடன் வந்துவிட்டேன். என் கணவர் வேலப்பன் சாவடியில் அருகே டூவிலர் ஷோரூமில் வேலை செய்துவந்தார். நானும் என் மகனும் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தோம். எனக்கு தமிழ் கொஞ்சம்தான் பேச வரும். எனக்கும் என் 2-வது கணவரான மக்ஃபுல் அலி சர்தாருக்கும் குழந்தைகள் பிறக்காததால் அவர் என் மகனையும் மகளையும் மாற்றான் தகப்பனின் குழந்தைகள் என்பதால் வெறுப்பு காட்ட ஆரம்பித்தார்.

மேலும், என் மீது சந்தேகப்படவும் ஆரம்பித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு அவர் என்னை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார். வேலைக்குச் சென்று பணம் எதுவும் கொடுக்க மாட்டார். மேலும் கேவலமான வார்த்தைகளால் திட்டியும் அசிங்கப்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு என் கணவர் என்னை சந்தேகப்பட்டுப் பேசினார்.

`மனைவி மீது சந்தேகம்; குடும்பத்துக்கே தீ வைத்த ஊழியர்’ -சென்னையில் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்
அக்ரம் மல்லிக்
அக்ரம் மல்லிக்

அப்போது என் மகன், `அப்பா தேவையில்லாமல் அசிங்கமாக பேசிதீர்கள்' என்று கூறியதும் அவர், அவனிடம் நீயும் உன் தங்கச்சியும் என்னை அப்பா என்று அழைக்கக் கூடாது என்று பேசினார். அதனால் கோபமாக நானும் என் மகனும், `உங்களுக்கு விருப்பமில்லை என்றால் எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் தனியாக நிம்மதியாக வாழ்ந்து கொள்கிறோம். நாங்கள் உழைத்து சாப்பிட்டு எங்களைப் பார்த்துக் கொள்கிறோம். உங்களால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. தொந்தரவுதான் இவ்வளவு கேவலமாக பேசிய பிறகு நாம் சேர்ந்து வாழ முடியாது. நீங்கள் இனி வீட்டுக்கு வராதீர்கள்’ என்று கூறினோம்.

அதற்கு அவர், `நான் இல்லாமல் வாழ தைரியம் வந்திடுச்சா உங்கள குடும்பத்தோடு கொளுத்தாமல் விட மாட்டேன்’ என சவால் விட்டார். அப்போது அக்கம் பக்கத்தினரும் எங்கள் உறவுக்காரர்களும் என் கணவரிடம்,`ஏன் இப்படி குடும்பத்தை அசிங்கப்படுத்துகிறீர்கள்’ என்று கேட்டனர். அதற்கு மக்ஃபுல் அலி, `என்னைக்கு இருந்தாலும் உங்களுக்கு என் கையாலதான் சாவு’ என்று கூறிவிட்டுச் சென்றார். குடும்ப பிரச்னை தானே திரும்பி வந்துவிடுவார் என நினைத்தேன். ஆனால், அவர் ஒரு மாதமாக வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் 7.6.2020 வீட்டில் புழுக்கம் காரணமாக நாங்கள் வீட்டின் வாசலில் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அதிகாலை 2 மணியளவில் எங்களது வீட்டுக்கு வந்து என் கணவர் மக்ஃபுல் அலி, `தூங்குறீர்களா?’ என்று சத்தம் போட்டார்.

மக்ஃபுல் அலி சர்தார்
மக்ஃபுல் அலி சர்தார்
`நாட்டு வெடிகுண்டுகள்; ஹெல்மெட் தகராறு' - அடுத்தடுத்து மகன்களின் மரணத்தால் கலங்கும் தாய்

நான், `ராத்திரி நேரம் எல்லோரும் தூங்குகிறார்கள். ஏன் சத்தம் போடுகிறீர்கள்? இதற்குதான் உங்களை வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொன்னேன்’’ என அவரிடம் கூறினேன். அதனால் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தெருவே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டது. என் மகன் அவரிடம் ஏன் இப்படி மானத்தை வாங்குகிறீர்கள் என்று கூறி விட்டு திரும்பவும் படுத்துக்கொண்டான். என் மகள் பயத்தில் ஓரத்தில் உட்காந்திருந்தாள். அவர் என்னிடம் வாக்குவாதம் செய்து கொண்டே வெளியே சென்று எங்களை எரித்துக் கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்து ஒரு பக்கெட்டில் பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக வைத்திருந்தார்.

இது தெரியாமல் பேசிக்கொண்டிருந்த என் மீதும் படுத்திருந்த என் மகன் மற்றும் மகள் மீதும் திடீரென்று தீ வைத்தார். பின்னர் கதவையையும் வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் கதவைத் திறந்து தீயை அணைத்தனர். எங்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்’’ என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மக்ஃபுல் அலி சர்தார்
மக்ஃபுல் அலி சர்தார்

சிகிச்சை பலனின்றி கொரசா பேகம், அக்ரம் மல்லிக் ஆகியோர் உயிரிழந்ததால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. வீட்டில் தங்காத மக்ஃபுல் அலி சர்தார், கிடைக்கும் இடத்தில் சாப்பிட்டுவிட்டு காலியாக கிடக்கும் பிளாட்பாரத்தில் தங்கியுள்ளார். அதனால் அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு