Published:Updated:

அரசியல் கட்சித் தலைவரை சந்தித்த ஜோலி; 2-வது கணவரின் தலையீடு! -கேரள சீரியல் கொலையில் திடீர் திருப்பம்

கேரளா ஜோலி
கேரளா ஜோலி

கேரளாவில், கடந்த 14 ஆண்டுகளாகத் தன் குடும்பத்தினரைத் தொடர்ந்து கொலை செய்துவந்த ஜோலிக்கு உதவியது யார் எனக் கண்டுபிடிக்க தீவிரம் காட்டிவருகிறது போலீஸ்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தாமரைச்சேரி பகுதியைச் சேர்ந்த ரோஜோ என்பவர், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோழிக்கோடு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘என் சகோதரர் ராய் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர், இயற்கையாக உயிரிழந்தாரா அல்லது கொலையா எனக் கண்டுபிடிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Kerala Murder case
Kerala Murder case
Mathrubhumi

இதைச் சிறிய மனுவாகப் பெற்றுக்கொண்ட காவலர்கள், வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தொடர் விசாரணையில், ராய் இறப்பு தொடர்பாகவும் அதையும் தாண்டி போலீஸார் எதிர்பார்க்காத பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளன. கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ரோஜோவின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். முதலில், அவை அனைத்தும் சாதாரண மரணமாக மறைக்கப்பட்டுள்ளது. ரோஜோ அளித்த புகாருக்குப் பிறகுதான் அவை அனைத்தும் கொலை எனத் தெரியவந்துள்ளது.

குடும்பத்தில் திடீர் மரணங்கள்!- 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவை பதறவைத்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

மூன்று வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கு விசாரணை, சமீபத்தில் குற்றவியல் துறைக்கு மாற்றப்பட்டது. பின்னர், கடந்த வாரம் இறந்த ஆறுபேரின் உடல்களையும் தோண்டி எடுக்க அனுமதி கிடைக்கவே, அனைத்து உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. இதன் முடிவில், இறந்த அனைவரின் உடலிலும் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இறப்பதற்கு முன், அவர்கள் அருகிலிருந்தது ராயின் மனைவி ஜோலிதான். அனைவரின் உடலிலும் விஷம் கலந்திருப்பது உறுதியான பிறகு, கேரள போலீஸின் மொத்தக் கவனமும் ஜோலி மீது திரும்பியது.

Serial Killing
Serial Killing

அதிகாரத்துக்காகத் தன் மாமியார் அன்னம்மா, எதிர்பார்த்த பணம் தராததால் மாமனார் டாம் தாமஸ், தன் விருப்பத்துக்குக் குறுக்கே நின்ற கணவர் ராய் தாமஸ், தன்னைப் பற்றி சந்தேகம் கிளப்பிய கணவரின் மாமா மேத்தீவ், தான் ஆசைப்பட்டவரான சாஜூவைத் திருமணம் செய்துகொள்ள அவரின் மனைவி சிலி மற்றும் குழந்தை எனத் தன் மொத்த குடும்பத்துக்கும் தனித்தனியாக விஷம் வைத்துக் கொலைசெய்துள்ளார் ஜோலி. அனைவரையும் கொலை செய்த பிறகு, தன் விருப்பப்படி சொத்து, பணத்துடன் சாஜூவையே திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில், இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

`அபார நினைவுத் திறன்; 93 கொலைகள்; 50 ஆண்டுகள்!' - அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய சீரியல் கில்லர்

கொலை செய்த தாய் பற்றி மகன்!

“என் தாய் மட்டும் தனியாக இந்த அனைத்துக் கொலைகளையும் செய்யவில்லை. அவருக்கு யாரோ சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்படுவார்கள் என நம்புகிறேன். குற்றவியல் துறையின் விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. எனக்கு ஒரு தம்பி உள்ளார். அவருக்காக நான் தைரியமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவரைத் துன்பப்பட விடமாட்டேன்” என்று ஜோலி - ராய் தம்பதியின் மகன் ரோமோ கூறியுள்ளார்.

Romo
Romo
manorama

ரோமோ கூறியது போல இந்த அனைத்துக் கொலைகளையும் ஜோலி மட்டும் தனியாகச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே கேரள காவல்துறையினரும் சந்தேகித்துள்ளனர். இதனால், ஜோலியின் போன் கால்கள், அக்கம்பக்கத்தினர் வாக்குமூலம் போன்றவற்றைச் சேகரிக்கும் பணியில் அவர்கள் ஈட்டுப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் ஜோலிக்கு உதவி செய்ததாகக் கருதப்படும் சிலரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கைதுக்கு முன் அரசியல் தலைவரைச் சந்தித்த ஜோலி!

கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை, இறந்தவர்களின் உடலைத் தோண்ட அனுமதி கிடைத்துள்ளது. உடல்கள் தோண்டப்படும்போது, இறந்த ராயின் குடும்பத்தினர் அனைவரும் உடன் இருந்தனர். ஆனால், ஜோலி மட்டும் அங்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

Roy - jolly
Roy - jolly
manorama

தான் கைதுசெய்யப்படுவோம் என அறிந்த ஜோலி, அதற்கு முன்னதாக கோழிக்கோட்டில் உள்ள ஒரு அரசியல் தலைவரை நேரில் சந்தித்து, தான் செய்த அனைத்து குற்றங்களையும் அவரிடம் கூறியுள்ளார். ஜோலி காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக, அந்தத் தலைவரும் உதவி செய்துள்ளார். ஜோலி ஓர் அரசியல் கட்சித் தலைவரைத் தொடர்ந்து சந்தித்து வந்ததை ராயின் சகோதரி ரெஞ்சி உறுதிசெய்துள்ளார்.

`ஒரே நேரத்தில் 60 ஆபாச வீடியோக்கள் ஷேர்!' - பதறிய கேரள பெண் ஊழியர்கள்... சிக்கிய அதிகாரி

தந்தை - மகன் கருத்து வேறுபாடு!

ஜோலி, வேறு ஒரு திருமணம் செய்துகொண்டது அவரது மகன் ரோமோவுக்குப் பிடிக்கவில்லை. இதனால், ரோமோவும் சாஜூவும் சரியாக பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், தன் குடும்பத்தில் நடந்த கொலைக்கும் சாஜூவுக்கும் தொடர்பு உள்ளது என ரோமோ கூறியுள்ளார். “ சாஜூவின் முதல் மனைவி சிலி மற்றும் குழந்தை இறந்தது அவரைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. மனைவி இறந்த மூன்றாவது நாள், அவருக்கு இரண்டாம் திருமணம் பற்றிய பேச்சு நடந்தது. அதற்கும் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இவை அனைத்தையும் வைத்துப் பார்த்தால், இந்தக் கொலைகளில் சாஜுவுக்கும் தொடர்பு உள்ளது எனத் தோன்றுகிறது” என ரோமோ கூறியுள்ளார்.

Kerala serial Killing
Kerala serial Killing
manorama

ஆனால் சாஜூ, தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இறந்த குழந்தையைத் தவிர சிலி-சாஜூ தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. “ராய், மதுவுக்கு அடிமையானவர் என நான் கேள்விப்பட்டுள்ளேன். அவரது போஸ்ட் மார்ட்டத்தில் விஷம் இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், அவர் மாரடைப்பில் இறந்ததாகத்தான் கூறினார்கள். அவருக்குப் பொருளாதார பிரச்னை இருந்ததால், அவர் மாரடைப்பில் இறந்திருக்கவே வாய்ப்பு அதிகம்” என சாஜு கூறியுள்ளார். இதை மறுத்துள்ள ரோமோ, தன் தந்தைக்கு மதுப்பழக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜோலி பற்றி சாஜூ கருத்து!

“ஜோலிக்கும் எனக்கும் திருமணம் நடக்கும் முன்பு, நாங்கள் இருவரும் நிறைய பேசிக்கொண்டது கிடையாது. எங்கள் குடும்பத்தில் நடந்த முதல் இறப்பு இயற்கை மரணம் என்றுதான் நினைத்தேன். என் முதல் மனைவி சிலி, இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக இருந்தபோது அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த பின்னர், அவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக, சிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் எங்கள் இரண்டாவது குழந்தை உயிரிழந்தது. கிட்னி பாதிப்பு மற்றும் குழந்தை இறந்த சோகத்தில் சிலி தன் உடலை வருத்திக்கொண்டாள். அதனால் அவளுக்கு உடல்நிலை மோசமானது.

Shaju
Shaju
manorama

அனைத்திலிருந்தும் மீண்டு வந்த அவர், இன்னொரு குழந்தை பெற வேண்டும் என விருப்பப்பட்டார். அந்த நேரத்தில், அவர் ஒருவித மூளை நோயால் பாதிக்கப்பட்டார். சிலி இன்னும் சில நாள்களே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவர்கள் கூறிய 3 நாள்களுக்குள் சிலி இறந்துவிட்டார். தனக்கு இருக்கும் நோயால்தான் அவர் இறந்தார் என்றுதான் அனைவரும் நினைத்தோம்.

பின்னர், எனக்கும் ஜோலிக்கும் திருமணம் செய்ய வேண்டும் என உறவினர்கள்தான் முடிவுசெய்தனர். எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாங்கள் இருவரும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டோம். திருமணம் முடிந்த பிறகு, ஜோலி நீண்ட நேரம் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருப்பார். அப்போதும் அவர்மீது எந்தச் சந்தேகமும் வரவில்லை. அவர் நடவடிக்கைகளும் சந்தேகப்படும்படியாக இல்லை.

Jolly
Jolly
manorama

இந்த விவகாரத்தில், நான் முன்ஜாமீன் கேட்டுள்ளதாகப் பலர் கூறுகின்றனர். ஆனால், நான் செய்யாத தவறுக்கு ஏன் பயம் கொள்ள வேண்டும். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. மேலும், நான் முன்ஜாமீன் எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை” என்று சாஜூ கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தினம்தினம் பல திடீர் தகவல்கள் கிடைப்பதால், ஜோலிக்கு உதவியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க கேரள குற்றவியல் போலீஸார் திணறிவருகின்றனர். இருந்தும் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.

News Credits : Manorama

அடுத்த கட்டுரைக்கு