Published:Updated:

சென்னை: `அன்பாகப் பேசி மயக்க மருந்து தெளிப்பு!’- சொத்துக்காகக் கணவரைக் கடத்திய மனைவி

மனைவியால் கடத்தப்பட்ட முத்து
மனைவியால் கடத்தப்பட்ட முத்து

சொத்துக்காக கணவரை காரில் கடத்தி, மனைவியும் அவர் தரப்பினரும் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் சென்னையில் அரங்கேறியிருக்கிறது.

சென்னை, போரூரை அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் முத்து (42). இவர் புதுப்பேட்டையில் கடை வைத்திருக்கிறார். கடந்த அக்டோபர் 1-ம் தேதி கடைக்குச் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து முத்துவின் உறவினர்கள், மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், முத்துவைத் தேடிவந்தனர். இந்தநிலையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வண்டலூரில் தான் இருப்பதாக உறவினர்களுக்கு முத்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து உறவினர்கள் அங்கு சென்று காயங்களுடன் இருந்த முத்துவை மீட்டு, வீட்டுக்கு அழைத்து வந்தனர். இது குறித்து மாங்காடு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயங்களுடன் முத்து
காயங்களுடன் முத்து

இதையடுத்து முத்துவிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் முத்துவைக் கடத்தியது யாரென்ற தகவல் தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில்``முத்துவின் மனைவி திவ்யா. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சம்பவத்தன்று கடையில் இருந்த முத்துவை திவ்யா சந்தித்து அன்பாகப் பேசியிருக்கிறார்.

பின்னர், இருவரும் காரில் சென்றிருக்கிறார்கள். திருமழிசை பகுதியில் காரில் சென்றபோது காரை நிறுத்தும்படி கூறியிருக்கிறார் திவ்யா. பின்னர் முத்துவை காரைவிட்டு இறங்கும்படி திவ்யா சொல்லியிருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் முத்துவின் முகத்தில் மயக்க மருந்தைத் தெளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு திவ்யாவும் உதவி செய்திருக்கிறார். முத்து மயங்கியதும், அவரை காரில் வேலூருக்கு அழைத்துச் சென்று, அங்கு ஒரு வீட்டில் வைத்து தாக்கியிருக்கிறார்கள். அப்போது முத்து பெயரிலுள்ள சொத்துகளை எழுதித் தரும்படி அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

வேலூர்: `மயக்க ஸ்பிரே அடித்துக் கடத்தல்; 7 மாத கர்ப்பம்!’ - மாணவிக்கு நேர்ந்த கொடுமை
கடத்தல்
கடத்தல்
representational image

`முத்துவைக் காணவில்லை’ என்று காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதும் சுதாரித்துக்கொண்ட அந்தக் கும்பல், அவரை காரில் கொண்டு வந்து வண்டலூர் அருகே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. மீட்கப்பட்ட முத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். முத்து அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரைக் கடத்தியவர்களைத் தேடிவருகிறோம். சம்பவம் நடந்த இடம் புதுப்பேட்டை என்பதால் வழக்கை மாற்றுவது தொடர்பாக ஆலோசித்துவருகிறோம்" என்றனர்.

``முத்துவைக் கடத்தியவர்கள் சிக்கினால் மட்டுமே உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும்’’ என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.

அடுத்த கட்டுரைக்கு