Published:Updated:

ப்ரீ-வெடிங் போட்டோஷூட்... ஆற்றில் மூழ்கிய ஜோடி... மைசூரு துயரம்!

Photoshoot (Representational Image)
Photoshoot (Representational Image) ( Photo by Février Photography on Unsplash )

ஆற்றில் ப்ரீ-வெடிங் புகைப்படங்கள் எடுக்க ஆசைப்பட்டு ஒரு இளம்ஜோடி தங்கள் உயிரையே இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

திருமணத்திற்கு முன்பு ஜோடிகள், இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் ப்ரீ-வெடிங் புகைப்படங்கள் எடுக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. குறிப்பாக நீர்நிலைகளில் கவித்துவமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள ஜோடிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி ஆற்றில் ப்ரீ-வெடிங் புகைப்படங்கள் எடுக்க ஆசைப்பட்ட ஓர் இளம்ஜோடி, தண்ணீரில் மூழ்கி தங்கள் உயிரையே இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

மைசூருவின் கியாதமரனஹள்ளி பகுதியைச் சேர்ந்த சந்த்ரு - சசிகலா ஜோடிக்கு வருகின்ற நவம்பர் 22-ம் தேதி திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. திருமணத்திற்கு முன்பு ப்ரீ - வெடிங் புகைப்படங்கள் எடுக்க ஆசைப்பட்ட இந்த ஜோடி, புகைப்படக் கலைஞர் மற்றும் தங்களின் இரண்டு உறவினர்களோடு மைசூருவில் உள்ள முடுகுத்தோரே என்ற காவிரி ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

காவிரி ஆற்றில் படகுச் சவாரி செய்தபடி புகைப்படம் எடுக்க விரும்பிய அவர்கள் அங்கிருந்த ஒரு ரிசார்ட்டில் படகை வாடகைக்குக் கேட்டுள்ளனர். ஆனால் ரிசார்ட்டில் தங்குபவர்களுக்கு மட்டுமே படகுச் சவாரி வசதி இருப்பதாக ரிசார்ட்டின் மேலாளர் சொல்லியிருக்கிறார்.

Representational Image
Representational Image

எப்படியும் ப்ரீ-வெடிங் புகைப்படங்களை எடுத்தே ஆகவேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்த அந்த ஜோடி, ஆபத்தை உணராது தங்களது உறவினர்களுடன் அங்கிருந்த பரிசல் ஒன்றில் ஏறி நதியின் கரைக்குச் சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

இதன் பின்னர்தான் விதி விளையாட ஆரம்பித்திருக்கிறது. இந்த ஜோடி மட்டும் தனியாகப் பரிசல் பயணம் செய்ய ஆசைப்பட்டு, அவர்கள் மட்டும் மீண்டும் பரிசலில் ஏறியிருக்கின்றனர். 10 - 15 மீட்டர்தான் அவர்கள் பரிசலில் பயணம் செய்திருப்பார்கள். உறவுகள் ஆராவாரிக்க, புகைப்படக்காரர் கரையில் இருந்தபடி இவர்களை வளைத்து வளைத்துப் படமெடுக்க, உற்சாக மிகுதியில் மணமகன் சந்த்ரு திடீரென பரிசலில் எழுந்து நின்றிருக்கிறார். அவ்வளவுதான், கண்ணிமைக்கும் நேரத்தில் நிலைதடுமாறிய பரிசல் அப்படியே கவிழ்ந்துவிட்டது.

பரிசல் ஒட்டிக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர் நீந்திக் கரைசேர்ந்துவிட்டார். ஆனால் நீச்சல் தெரியாத காரணத்தால் சந்த்ருவும், சசிகலாவும் தண்ணீரிலேயே மூழ்கிவிட்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு இரண்டு உடல்களையும் மீட்டிருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் காவிரி நதியில் பாதுகாப்பாற்ற பரிசல் பயணம் செய்யக்கூடாது என்று காவல்துறை தொடர்ந்து எச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மாவட்டக் காவல்துறை ஆங்காங்கே இதுகுறித்த எச்சரிக்கைப் பலகைகளையும் வைத்திருக்கிறது. ஆனாலும் இவற்றையெல்லாம் அலட்சியம் செய்து த்ரில்லுக்காக இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட்டு இளம் வயதினர் உயிரை இழப்பது பெரும் வேதனையைத் தருகிறது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

வாழ ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில் முடிந்துபோன இந்த ஜோடி பற்றிய செய்தி, மக்களுக்கு அதிர்ச்சியையும் துயரத்தையும் தந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு