Published:Updated:

காஞ்சிபுரம் அருகே கோயிலில் மர்மப் பொருள் வெடித்தது... ஒருவர் பலி! நான்கு பேர் காயம்!

JAYAVEL B

திருப்போரூர் அருகே மர்ம பொருள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மர்ம பொருள் வெடிப்பு
மர்ம பொருள் வெடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ளது மானாமதி. இங்குள்ள கங்கையம்மன் கோயில் குளம் அருகே அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் மர்ம பொருள் ஒன்றை திறந்து பார்த்த போது, அந்த பொருள் வெடித்துச் சிதறியிருக்கிறது. இதில் சூர்யா என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானர். அவருடன் இருந்த திலீபன், யுவராஜ், ஜெயராம், திருமால் ஆகியோர் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேல் சிகிச்சைக்காக ஜெயராமன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மர்ம பொருள் வெடிப்பு
மர்ம பொருள் வெடிப்பு

கோயில் குளம் தூர்வாரப்பட்ட போது ஏதோ மர்மமான பொருள் தென்பட்டதாகவும் அதை கொண்டுவந்து பிரித்துப் பார்த்த போது அது வெடித்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். சிலர் அங்கு உட்கார்ந்திருந்தபோது அந்தப் பொருள் தானாக வந்து அவர்கள் மீது விழுந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். தகவல் அறிந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த காஞ்சிபுரம் எஸ்.பி கண்ணன் அங்குள்ளவர்களிடம் விசாரணை செய்துவருகிறார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், " தமிழகத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில் வெடிப்பு செய்தி கேட்டதும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தோம். ஆனால், இது வேறு ஏதோ வெடி போல தெரிகிறது" என்கிறார்கள்.