Published:Updated:

பெற்றோர், கர்ப்பிணி மனைவியோடு மகனும் சுட்டுக் கொலை! - கர்நாடகாவில் தொடரும் தொழிலதிபர்கள் தற்கொலை

Gun shot
Gun shot

முதலில் தன் பெற்றோரைச் சுட்டுக்கொன்ற பிரகாஷ், அதன் பிறகு தன் கர்ப்பிணி மனைவியையும் மகனையும் நெற்றியில் சுட்டுக் கொன்றிருக்கிறார்.

இந்தியத் தொழிலதிபர்கள் சிலர், வங்கிகளில் கடன் வாங்கினால் அதைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டுச் சென்றுவிடுவதாகத்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கடந்த சில மாதங்களாகக் கடன் தொல்லையில் சிக்கித் தற்கொலை செய்துகொள்ளும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Suicide
Suicide

`கஃபே காஃபி டே' நிறுவனத்தின் உரிமையாளரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.பி சித்தார்த்தா கடந்த மாத இறுதியில் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இவரின் இறப்புக்கு கடன் பிரச்னையே காரணம் எனக் கூறப்பட்டது. இவரையடுத்து, தற்போது அதே கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபரும் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். 36 வயதான இவருக்குக் கால் சென்டர், ரியல் எஸ்டேட், மைசூரில் ஒரு சுரங்கம் போன்றவை உள்ளன. தன் தொழிலை விரிவாக்கம் செய்வதற்காகப் பலரிடம் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால், தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Business man
Business man

கடன் கொடுத்த அனைவரும் ஓம் பிரகாஷை நெருக்கத் தொடங்கியுள்ளனர். மறுபுறம் அனைத்துத் தொழில்களிலும் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வந்ததால், அதிக மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருக்கிறார் ஓம் பிரகாஷ். இதில் இருந்து விடுபடும்வகையில், `ஒரு மாறுதலுக்காக குடும்பத்தினருடன் வெளியில் பயணம் செல்லலாம்' என முடிவெடுத்து, கர்நாடகா மாநிலத்தின் எல்லையில் உள்ள சாமராஜா நகர் மாவட்டத்திலுள்ள பண்டிப்பூர் என்ற இடத்துக்குக் குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுநர், ஒரு பணியாளர் ஆகியோருடன் சென்றிருக்கிறார்.

`செய்தித்தாள் தந்த உத்வேகம்; சிறைக் கைதிகளுக்கு விடுதலை' - வித்தியாசமாக பிறந்தநாளைக் கொண்டாடிய தொழிலதிபர்

பண்டிப்பூரில் ஒரு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து ஓம் பிரகாஷின் தந்தை நாகராஜன்(65), தாய் ஹேமா(60) 8 மாத கர்ப்பிணி மனைவி நிகிதா (36) மற்றும் 4 வயது மகன் ஆர்யன் கிருஷ்ணன் ஆகியோருடன் தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த ஓட்டுநர் மற்றும் பணியாளரிடம் பேசிய ஓம் பிரகாஷ், `ஓய்வெடுத்துவிட்டு நாளை வாருங்கள்’ எனக் கூறி அனுப்பிவைத்துவிட்டார்.

Murder
Murder

மறுநாள் காலை பண்ணை வீட்டுக்கு வேலைக்கு வந்தவர்கள், வீடு முழுவதும் குடும்பத்தினரைத் தேடியுள்ளனர். ஆனால், வீட்டில் ஒருவரும் இல்லை. வீட்டுக்கு அருகிலிருந்த திறந்தவெளிக்குச் சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஓம் பிரகாஷின் மொத்தக் குடும்பமும் ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த வேலையாட்கள் உடனடியாக சாமராஜா நகர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் ஐந்து உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் ஓம் பிரகாஷின் சகோதரியிடம் உடல்களை ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, நடந்த விசாரணையில் ஓம் பிரகாஷுக்குத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தன் குடும்பத்தினரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுப் பிறகு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Crime
Crime

ஓம் பிரகாஷின் குடும்பம் இறந்து கிடந்த இடத்திலிருந்து ஒரு துப்பாக்கியும் அவரது காரில் இருந்து மற்றொரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், சம்பவ இடத்திலிருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகள், துப்பாக்கியிலிருந்த கைரேகைகள் ஆகியவற்றை வைத்து, ` இது தற்கொலையாக இருக்கக் கூடும்' என்ற முடிவுக்கு வந்துள்ளது காவல்துறை. இருந்தாலும் ஓம்பிரகாஷுக்கு கடன் தொல்லை கொடுத்தவர்களைப் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு