Election bannerElection banner
Published:Updated:

குமரி: அதிக கட்டணம்; பாலியல் புகார்! - தனியார் நர்ஸிங் கல்லூரி நிர்வாகிகள் தலைமறைவு

நர்ஸிங் மாணவிகள் போராட்டம்
நர்ஸிங் மாணவிகள் போராட்டம்

``மிகச் சிறிய அறையில் நூறு பேருக்கு மேல் தங்கவைத்திருக்கிறார்கள். போதுமான உணவு, கழிவறை வசதிகள் இல்லை" என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை நர்ஸிங் மாணவிகள் கூறியிருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அருகே வெள்ளச்சிவிளையில் கேப் சிட்டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு நர்ஸிங் படிக்கும் மாணவிகள், கடந்த டிசம்பர் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்தப் புகாரில்,``நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கேப் சிட்டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் விடுதியில் தங்கி நர்ஸிங் பயின்றுவருகிறோம். இந்தக் கல்லூரிக்கு மத்திய, மாநில அரசுகளின் சான்றிதழ் மற்றும் இந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கவுன்சிலில் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகக் கூறி ஏமாற்றி எங்களைச் சேர்த்திருக்கிறார்கள். முதலில் சிறிய தொகை செலுத்தினால் போதும், இலவச படிப்பு என்று கூறி பின்னர் ஆண்டுக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள். இங்கு போதுமான அடிப்படை வசதி எதுவும் இல்லை. மிகச்சிறிய அறையில் நூறுபேருக்கு மேல் தங்க வைக்கப்பட்டிருக்கிறாகள். போதுமான உணவு, கழிவறை வசதிகள் இல்லை" என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தனர்.

கல்லூரி முன் போராட்டம்
கல்லூரி முன் போராட்டம்

மேலும், கல்லூரியின் தாளாளர் அடிக்கடி மாணவிகளிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டுவருவதாகவும், இது பற்றிப் புகார் அளித்தால் ஒரிஜினல் சான்றிதழ்களைத் தர மாட்டோம் எனக் கூறி மிரட்டல் விடுத்ததாகவும் மாணவிகள் புகாரில் தெரிவித்திருந்தனர். இது குறித்து பத்மநாபபுரம் துணை ஆட்சியர் மாணவிகளை விசாரணைக்கு அழைத்திருக்கிறார். ஆனால், அவர்களை விசாரணைக்குச் செல்லவிடாமல் தடுத்துவைத்திருக்கிறார்கள்.

`அதிக மார்க் வாங்கித் தருகிறேன்!'- சிவகங்கை பா.ஜ.க பிரமுகரால் நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

இதையடுத்து மாணவிகள் கல்லூரி வளாகத்துக்கு முன்பு பெற்றோருடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் அங்கு வந்த இரணியல் போலீஸார் அவர்களிடம் புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்தநிலையில் மாணவிகளின் புகார் குறித்து விசாரணை நடத்த, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் உத்தரவிட்டார்.

போலீஸ் பேச்சுவார்த்தை
போலீஸ் பேச்சுவார்த்தை

இரணியல் போலீஸார் மாணவிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, பள்ளி தாளாளர் செல்வகுமார், அவரின் மனைவியும் கல்லூரி முதல்வருமான செல்வராணி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமைச் சட்டம் மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் அவர்களைத் தேடிவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு