Published:Updated:

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு; காவல்நிலையத்தில் சமரசம்! - நாகை அதிர்ச்சி

விசாரணைக்குச் சென்ற இடத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் ஏட்டு போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

sp office
sp office

நாகை மாவட்டம், திருமருகலை அடுத்த புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்பப் பிரச்னை தொடர்பாகத் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Representational Image
Representational Image

அந்தப் புகார் தொடர்பாக நன்னிலம் காவல் நிலையத்தில் கோர்ட் ஏட்டாகப் பணிபுரியும் அய்யாசாமி என்பவர் புத்தகரம் கிராமத்தில் உள்ளவரின் வீட்டுக்கு விசாரிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவரின் மகளான 9-ம் வகுப்புப் படிக்கும் சிறுமியும் வீட்டில் இருந்திருக்கிறார். அந்த வகையில் ஏட்டுக்கு சிறுமியின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் மது அருந்திவிட்டு போதையில் சிறுமியின் வீட்டுக்கு வந்திருக்கிறார் ஏட்டு அய்யாசாமி. பெற்றோர் இல்லாத நிலையில் தனிமையில் இருந்த சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதிர்ச்சியில் அலறிய அச்சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள், கூடுவதற்குள் ஏட்டு அய்யாசாமி தப்பித்து ஓடிவிட்டார். நடந்ததை அறிந்த சிறுமியின் தந்தை, ஏட்டு மீது நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், அங்கு நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசியிருக்கிறார்கள். சிறுமியின் காலில் ஏட்டுவை விழவைத்து மன்னிப்பு கேட்கவைத்து இந்த விவகாரத்தை மூடி மறைத்திருக்கிறார்கள்.

Representational Image
Representational Image

இதையடுத்து அந்தச் சிறுமியின் தந்தை திருவாரூர் மாவட்ட எஸ்.பி துரையிடம் முறையிட்டிருக்கிறார். அவர் உடனே சம்பவம் நடந்த இடம் நாகை மாவட்ட எல்லைக்குள் வருவதால் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய விசாரணைக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். அதன்படி போலீஸார், ஏட்டு அய்யாசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தினர். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுமி மற்றும் அவரின் பெற்றோர்களிடம் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை ஏட்டு அய்யாசாமி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஏட்டு அய்யசாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.