Published:Updated:

நாகை: `ஐயா..என் ஆடுகளைக் காணவில்லை!' - கறி விருந்தால் சிக்கிய அ.தி.மு.க புள்ளி

ஆடு
ஆடு ( மாதிரிப் படம் )

அ.தி.மு.க பிரமுகரும் அந்த ஊராட்சியில் இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தவருமான கவிமுருகன் என்பவர் வீட்டில் அமர்க்களமாக ஆட்டுக்கறி விருந்து நடந்திருக்கிறது.

நாகை மாவட்டத்தில் இரண்டு ஆடுகளைத் திருடி கறி விருந்து நடத்திய அ.தி.மு.க பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கறி விருந்து
கறி விருந்து

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விளாகம் கிராமம் அமைந்திருக்கிறது. இக்கிராமத்தில் வசிக்கும் விவசாயக் கூலித் தொழிலாளியான பழனி என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இரவில் கொட்டகையில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஆடுகளில் இரண்டை விடியற்காலையில் காணவில்லை. அன்றைய தினம் அ.தி.மு.க பிரமுகரும் அந்த ஊராட்சியில் இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தவருமான கவிமுருகன் என்பவர் வீட்டில் அமர்க்களமாக ஆட்டுக்கறி விருந்து நடந்திருக்கிறது.

Kame Gowda: 16 ஏரி, குளங்களை வெட்டிய ஆடு மேய்க்கும் தொழிலாளி... வியக்கவைத்த `லேக்மேன்’!

பழனிக்குக் கிடைத்த தகவலின்படி, தனது வீட்டில் திருடிய ஆடுகளில் ஒன்றை விற்று மதுவும், மளிகைப்பொருள்களும் வாங்கியுள்ளனர். இன்னொரு ஆட்டை கேட்டரிங் படித்த இளைஞர் மூலம் சமைத்துக் கறியாக்கி கவிமுருகன் தலைமையில் 13 பேர் விருந்துண்டுள்ளனர். இவற்றை உறுதிப்படுத்திக்கொண்ட பழனி உடனே பெரம்பூர் காவல்நிலையத்தில் அளித்துள்ளார்.

இதையடுத்து, அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து உரிய முறையில் விசாரணை செய்தபோது, ஆடுகளைத் திருடி விருந்து நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர். போலீஸார் கவிமுருகனைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். பின்னர், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். தொடர்ந்து, ஆடுகளுக்குரிய ரூ.8,000-த்தை கவிமுருகனிடம் பெற்றுப் பழனியிடம் கொடுத்து சமாதானமாகப் பேசி முடித்துள்ளனர்.

ஆடு
ஆடு
மாதிரிப் படம்

இதுபற்றி கவிமுருகனிடம் கேட்டபோது, ``எங்கப் பசங்க விளையாட்டுத்தனமாய் செஞ்சிட்டானுக. போலீஸ் கேஸான பிறகு, நான்தான் பணம் கட்டி எல்லாரையும் காப்பாத்தி அழைச்சிட்டு வந்தேன்" என்றதோடு முடித்துக்கொண்டார்.

`சொகுசு கார்னா சந்தேகம் வராது!’ - போலீஸாருக்கு அதிர்ச்சி அளித்த ஆடு திருட்டு
அடுத்த கட்டுரைக்கு