Published:Updated:

நாகை: `ஏழைப் பொண்ணுனு ஏத்துக்காம ஏமாத்திட்டான்!' - பெண்ணின் தந்தை கண்ணீர்

கண்ணீர்
கண்ணீர்

``நல்லபடியா குழந்தையைப் பெத்துக்க. நான் வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு சொல்லியிருக்கான். ஆனா...''

காதல் எல்லையை மீறி, கணவன் - மனைவியாக வாழ்ந்து, ஒரு குழந்தைக்குத் தந்தையான ஒருவர், ஏழை பணக்காரன் பாகுபாட்டால் இப்போது தன் மனைவியையும் மகனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தன் 10 மாத ஆண் குழந்தைக்கு அதன் தந்தையைக் காட்ட தவித்துக்கொண்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் நாகலிங்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் மகளான கௌரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே ஊரைச் சேர்ந்த முருகையன் - ராணி தம்பதியின் மகன் உதயகுமார் என்பவருடன் காதல். `நீதான் என் பொண்டாட்டி' என்று ஆசை வார்த்தை கூறி கௌரியுடன் வாழ்ந்தார் உதயகுமார். கௌரி கர்ப்பமானார்.

பெண்ணின் தந்தை
பெண்ணின் தந்தை

அதன் பின் நடந்தவற்றை கௌரியின் தந்தை நாகலிங்கம் கூறுகிறார்.

"எனக்கு மூணு பொண்ணு, நாலு பையன். மூத்த பொண்ணுதான் கௌரி. பத்தாவது வரை படிச்சிருக்கு. அது வாயும் வயிறுமா இருந்தப்போதான் எங்களுக்கு விஷயம் தெரியும். 'இந்த ஊர்ல பணக்காரங்க அவங்க, எப்படி உன்னை ஏத்துக்குவாங்க?'னு அதிர்ச்சியும் அழுகையுமா என் பொண்ணுகிட்ட கேட்டேன். 'அவரு என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லிருக்காருப்பா. 'நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன், நீ கவலைப்படாத'னு சொல்லியிருக்காரு'னு எம்பொண்ணு நம்பிக்கையா சொல்லுச்சு.

அந்த நேரத்துல அவன் வெளிநாடு போயிருந்தான். விஷயத்தைச் சொன்னதும், 'நல்லபடியா குழந்தையைப் பெத்துக்க. நான் வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு சொல்லியிருக்கான். ஆனா, அவன் ஊர் திரும்பினதுக்கு அப்புறமும் கல்யாணம் செஞ்சுக்கலை.

நாங்க எல்லாம் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவங்கதான். ஆனா, ஏழைங்களாச்சே? அதனால அவங்க குடும்பத்துல ஏத்துக்க மறுத்துட்டாங்க. வேற வழி தெரியாம ஊர்ப் பஞ்சாயத்துல முறையிட்டோம்" என்றார்.

கிராமத் தலைவர் கணேசனிடம் பேசினோம்.

"கிராமத்துல பேச்சுவார்த்தை நடத்தினப்போ, பையன் குடும்பம் ஒத்துவரலை. பின் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துல புகார் கொடுத்தோம். அங்க நடந்த விசாரணையில, 'நான் இப்ப சபரிமலைக்கு மாலை போட்டிருக்கேன். போயிட்டு வந்த பிறகு, கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு சொன்னான் அந்தப் பையன். அதை எழுத்துபூர்வமாவும் எழுதிக்கொடுத்தான். ஆனா சபரிமலைக்கு போனவன், ஊருக்குத் திரும்பி வரவே இல்ல. அப்புடியே தலைமறைவா இருக்கான்.

உதயகுமார் வீடு
உதயகுமார் வீடு

10 மாசமா இந்தப் பொண்ணு கைக்குழந்தையோடு தவியா தவிச்சுக்கிட்டு இருக்கு. இதுக்கு என்ன முடிவு பண்றதுனு தெரியல" என்றார்.

இதுபற்றி நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் வேம்புவிடம் கேட்டோம்.

''கிராமப் பஞ்சாயத்தார் முன்னிலையில் அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக உதயகுமார் எழுதிக் கொடுத்தார். தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறோம். அவரைப் பிடித்து வர தனிப்படை அமைத்திருக்கிறோம். விரைவில் கைது செய்வோம்" என்றார்.

உதயகுமார் வீட்டுக்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருக்கிறது. உதயகுமாருடன் சேர்ந்து வீட்டில் அனைவருமே தலைமறைவாகியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு