Published:Updated:

`எங்களுக்கு எதுக்கு சார் இ-பாஸ்?' - ஆந்திரா டு வேதாரண்யம்; காரில் கடத்தப்பட்ட கஞ்சா

காரில் கடத்தி வந்த கஞ்சா
காரில் கடத்தி வந்த கஞ்சா

`எங்களுக்கு எதுக்கு சார் இ-பாஸ்? வழியிலுள்ள அத்தனை செக்போஸ்டுகளையும் எளிதாகக் கடந்து வந்தோம். இங்குதான் மாட்டிக்கிட்டோம்.'

ஆந்திராவிலிருந்து வேதாரண்யத்துக்கு சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்தி வந்த காரை போலீஸார் மடக்கி கைப்பற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காரில் கடத்தி வந்த கஞ்சா
காரில் கடத்தி வந்த கஞ்சா

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்துவதும், அங்கிருந்து தங்கம் கடத்தி வருவதும் தொடர் நிகழ்வாகும். சில நாள்களுக்கு முன்புகூட 190 கிலோ கடத்தல் கஞ்சா கரை ஒதுங்கியது.

சென்னை: `நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா?’ - கஞ்சா வியாபாரிகளால் எஸ்.ஐ மகனுக்கு  நேர்ந்த கொடூரம்

இந்நிலையில், வேதாரண்யம் தேத்தாக்குடி அருகே இரவு ரோந்துப் பணியில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீஸாரைக் கண்டதும் சிறிது தூரத்தில் காரை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடியிருக்கிறார்கள். அப்போது, கார் டிரைவரை மட்டும் மடக்கிப் பிடித்த போலீஸார், காரை சோதனையிட்டபோது, அதில் மூட்டை மூட்டையாகக் கஞ்சா இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

டி.எஸ்.பி.சபியுல்லா
டி.எஸ்.பி.சபியுல்லா

இதுபற்றி வேதாரண்யம் டி.எஸ்.பி.சபியுல்லாவிடம் பேசினோம். ``பிடிபட்ட கார் டிரைவர் கனகராஜ் தென்னம்புலத்தைச் சேர்ந்தவர். இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் காரில் கொண்டு வந்துள்ளனர். `மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்ட இ-பாஸ் வேண்டுமே? நீங்கள் எப்படி வந்தீர்கள்’ என்று டிரைவரிடம் விசாரித்தபோது, `எங்களுக்கு எதுக்கு சார் இ-பாஸ்? வழியிலுள்ள அத்தனை செக்போஸ்டுகளையும் எளிதாகக் கடந்து வந்தோம். இங்குதான் மாட்டிக்கிட்டோம்' என்றார். அவர் கொடுத்த தகவலின் பேரில் நாலுவேதபதியைச் சேர்ந்த படகு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, குஞ்சான்குட்டையைச் சேர்ந்த நந்தகோபால், கதிரவன் ஆகியோரைக் கைது செய்துள்ளோம். மேலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, குணசேகரன், விஜயராஜ் ஆகியோரைத் தேடி வருகிறோம். சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு