நாகர்கோவில் சியோன் தெருவில் வசிப்பவர் பி.டி.செல்லப்பன் (56). கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், குலசேகரம் அருகே உள்ள அயக்கோடு ஊராட்சித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் மகன் லிபின்ராஜா (23). ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 4-ம் தேதி இரவு 8 மணியளவில் கடைக்குச் சென்று விட்டு வருவதாகக் கூறி பைக்கில் வெளியே சென்ற லிபின்ராஜா, பின்னர் வீடு திரும்பி வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறார். அதனால், பி.டி.செல்லப்பன் நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் லிபின்ராஜா கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நான்குவழிச்சாலை அருகே புதைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து கன்னியாகுமரி எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் பழவூர் சென்று நான்குவழிச்சாலை பகுதியில் உள்ள கால்வாய் அருகே புதைக்கப்பட்டிருந்த லிபின்ராஜாவின் உடலை நேற்று தோண்டி எடுத்து அந்த இடத்தில் வைத்தே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இறந்து 5 நாள்கள் ஆகியுள்ளதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடலை அவர் தந்தை பி.டி.செல்லப்பன் அடையாளம் காட்டினார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் பிரசன்னா தலைமையிலான மருத்துவக் குழுவினர் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பின்னர் லிபின்ராஜா உடல் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. லிபின்ராஜா கொலை தொடர்பாக நாகர்கோவில் நேசமணி போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். போலீஸார் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், நாகர்கோவில் புதுகுடியிருப்பு காமராஜர் புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (26), புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எபின் (27) ஆகியோர் நேற்று நாகர்கோவில் ஜே.எம் 2 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். போலீஸார் தங்களை தேடுவதால் சரணடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சரணடைந்தவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் லிபின்ராஜாவை அவர்கள் அடித்துக் கொலை செய்தது தெரியவந்திருக்கிறது.

இதுபற்றி போலீஸார் கூறுகையில், ``பைக்ரேஸில் ஈடுபட்டபோது லிபின்ராஜா, எபின் உள்ளிட்டவர்களுக்கு கடந்த ஆண்டு முன் விரோதம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 4-ம்தேதி வெட்டூர்ணிமடம் அருகே சென்ற லிபின்ராஜாவை எபின் உள்ளிட்டசிலர் மடக்கி தகராறு செய்திருக்கின்றனர். பின்னர், வீட்டுக்குச் சென்ற லிபின்ராஜா எபினுக்கு போன் செய்து நாம் சமாதானமாக போய்விடுவோம் என கூறியிருக்கிறார். எனவே நேரில் சந்தித்து சமாதானம் பேசலாம் என தீர்மானித்து கன்னியாகுமரி அருகே உள்ள வழுக்கம்பாறை நான்குவழிச்சாலை பகுதியில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்குக் கிடந்த கட்டையால் லிபின்ராஜாவை அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் பைக்கில் வைத்து உடலை பழவூர் நான்குவழிச்சாலை அருகே புதைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறொம்" என்றனர்.