Published:Updated:

`வேலை கிடைத்தால் உயிரைக் காணிக்கையாகத் தருகிறேன்!’ - வேண்டுதலுக்காக விபரீத முடிவெடுத்த இளைஞர்

தற்கொலை
தற்கொலை ( Representational Image )

`பல வருடங்களுக்குப் பிறகு எனக்கு வேலை கிடைத்தது. எனவே, என் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கடவுளிடமே நான் செல்கிறேன்’ எனக் கடிதம் எழுதி வைத்திருக்கிறார் நவீன்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த செல்லசுவாமி என்பவரின் மகன் நவீன் (32). இவருக்குச் சிறு வயது முதலே கடவுள் பக்தி அதிகமாக இருந்துவந்திருக்கிறது. இவர் இன்ஜினீயரிங் படித்து முடித்த பிறகு வேலைக்காக முயன்றுவந்திருக்கிறார். வங்கித் தேர்வுகளும் எழுதிவந்திருக்கிறார். ஆனால், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எனவே, இறைவனிடம் ஒரு வேண்டுதலை முன்வைத்திருக்கிறார். தனக்கு வேலை கிடைத்தால், தனது உயிரையே காணிக்கையாகத் தருவதாகவும், வேலை கிடைத்தவுடன் இந்த நேர்த்திக்கடனைச் செலுத்துவதாகவும் இறைவனிடம் வேண்டுதல் வைத்திருக்கிறார். இப்படி வேண்டுதல் வைத்த பிறகு தொடர்ந்து வேலைக்கு முயன்றிருக்கிறார்.

அவருக்கு, வங்கி உதவி மேலாளராக சமீபத்தில் பணி கிடைத்திருக்கிறது. மும்பையிலுள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணியில் சேர ஆணை வந்திருக்கிறது. இதையடுத்து கடந்த 15 நாள்களுக்கு முன்னர் மும்பையிலுள்ள வங்கியில் பணிக்கும் சேர்ந்திருக்கிறார். வேலைக்குச் சேர்ந்து 15 நாள்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் மும்பையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்திருக்கிறார். அங்கிருந்து மார்த்தாண்டம் சென்று, தனது நண்பரைப் பார்த்துப் பேசியிருக்கிறார். பிறகு தன் சகோதரருக்கு போன் செய்து, தான் ஊருக்கு வந்திருப்பதாகத் தகவல் கூறியிருக்கிறார். பின்னர் பேருந்தில் நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார்.

கடிதம்
கடிதம்

நாகர்கோவிலிலிருந்து புத்தேரிப் பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்துக்குச் சென்றிருக்கிறார். ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து தற்கொலை செய்திருக்கிறார். தற்கொலை செய்வதற்கு முன்பு நவீன் தனது சட்டைப்பையில் தாய், தந்தைக்குக் கடிதம் ஒன்றையும் எழுதிவைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், ``அன்புள்ள அப்பா, அம்மா நான் பல காலம் வேலை இல்லாமல் இருந்தேன். அதனால் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. எவ்வளவோ முயன்றும் எனக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. எனவே, வேலை கிடைத்தால் என் உயிரையே காணிக்கையாகத் தருவதாக இறைவனிடம் வேண்டினேன்.

கரூர்: மூன்று குழந்தைகளுக்கும் விஷம்... தற்கொலை முயற்சி! - பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

தற்போது பல வருடங்களுக்கு பின், எனக்கு வேலை கிடைத்தது. எனவே, என் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கடவுளிடமே நான் செல்கிறேன். இப்படிக்கு சி.நவீன்" என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும், அவரது சட்டைப்பையில் தனது ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் போன்றவையும் இருந்திருக்கின்றன. நவீனின் உடலை மீட்ட நாகர்கோவில் ரயில்வே போலீஸார் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் முதலில் நவீனின் பெற்றோரைத் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியபோது, அவர்கள் அதை நம்பவில்லை.

தற்கொலை செய்துகொண்ட நவீன்
தற்கொலை செய்துகொண்ட நவீன்

பின்னர் மும்பை வங்கி அலுவலகத்தைத் தொடர்புகொண்ட பெற்றோர், மகன் ஊருக்கு வந்ததை உறுதிசெய்திருக்கிறார்கள். அதன் பிறகு மகனின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். வேலை கிடைக்காமல் விரக்தியில் தற்கொலை செய்யும் முடிவுக்கு வருவதையே முட்டாள்தனம் என்கிறோம். ஆனால், வேலை கிடைத்ததற்கு நேர்த்திக்கடனாக தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞரின் விபரீத செயலை என்னவென்று சொல்வது?!

அடுத்த கட்டுரைக்கு