Published:Updated:

`பெண்களிடம் மட்டுமல்ல, வீடு கட்டியதிலும் மோசடி!'- இன்ஜினீயர் சுஜி விவகாரத்தில் அடுத்த அதிரடி

இன்ஜினீயர் சுஜி என்கிற காசி
இன்ஜினீயர் சுஜி என்கிற காசி

சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தரைத்தளம் மற்றும் அதற்கு மேல் ஒரு மாடி அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி இல்லாமல் மேலும் இரண்டு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி என்ற சுஜி (26). இவர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுக்கு காதல் வலை வீசி, பின்னர் அவர்களுடன் நெருக்கமாகி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

பின்னர் அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை வாங்குவார். பணம் கொடுக்க மறுத்தால் அந்தப் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டுவார். இப்படி பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் என அனைத்துத்தரப்பு பெண்களிடமும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் நெருக்கமாகப் பழகி அவரிடம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை வாங்கியுள்ளார். மேலும், அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுகுறித்து பெண் டாக்டர் குமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார் காசி என்ற சுஜியை கைது செய்தனர். மேலும், `காசியால் ஏமாந்த பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம், அவர்களது ரகசியம் காக்கப்படும்' எனக் குமரி காவல்துறை அறிவித்தது. மேலும், பெண்கள் புகார் அளிக்க எஸ்.பி ஸ்ரீநாத்தின் பர்சனல் மொபைல் எண் வெளியிடப்பட்டது.

காசி என்ற சுஜியின் தந்தை வீடு
காசி என்ற சுஜியின் தந்தை வீடு

இதைத்தொடர்ந்து மற்றொரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் காசி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை நாகர்கோவில் ஏ.எஸ்.பி ஜவஹர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காசியின் நண்பர்கள் சிலருக்கும் இந்த மோசடிகளில் தொடர்பு இருப்பதாகத் தகவல் கிடைக்கவே, சிலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

`கோழிப் பண்ணையில் லேப்டாப்; சீக்ரெட் வீடியோக்கள்!' -எப்படியெல்லாம் ஏமாற்றுவார் இன்ஜினீயர் சுஜி?

இந்த நிலையில், சுஜியின் வீடு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாருக்குப் புகார் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு ஆய்வாளர் கெபின்ஜாய் தலைமையில் சுஜியின் வீட்டை அதிகாரிகள் அளவீடு செய்தனர். அதில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வீட்டை அளந்து கணக்கிடும் அதிகாரிகள்
வீட்டை அளந்து கணக்கிடும் அதிகாரிகள்

இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ``பல பெண்களை வன்கொடுமை செய்ததாக கைதான காசியின் தந்தை தங்கபாண்டியன் பெயரில் உள்ள வீடு, சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் அந்த வீட்டை அளவீடு செய்ததில் சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், தரைத்தளம் மற்றும் அதற்கு மேல் ஒரு மாடி அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி இல்லாமல் மேலும் இரண்டு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். சரியான விளக்கம் அளிக்காமல் இருந்தால் சாலையில் உள்ள ஆக்ரமிப்புகளை நாங்களே இடித்து அகற்றுவோம். அனுமதி இல்லாமல் கட்டிய கட்டடத்தை அவர்களிடம் இடித்து அகற்றும்படி கூறுவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு