Published:Updated:

கேலி செய்த மூவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த பூசாரி - தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ராஜசேகரன்
தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ராஜசேகரன்

போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, ராஜசேகரனைப் பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸாரின் மீதும் ராஜசேகரன் பெட்ரோலை ஊற்றிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள கணபதிபுரம் சன்னதிதெருவைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் (40), சதீஷ் (40), காளி (40). இவர்கள் மூவரும் நண்பர்கள். இவர்கள் சன்னதிதெரு நூலகம் முன் நேற்று முன்தினம் இரவு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று நூலகத்தின் எதிர்வீட்டில் வசிக்கும் கூலித் தொழிலாளி ராஜசேகரன் (40), தன் கையில் கொண்டுவந்த பொட்ரோலை அவர்கள் மூவரின் மீதும் ஊற்றி தீவைத்துக் கொளுத்தியிருக்கிறார். இதனால் அவர்கள் மூவரும் அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினர். தீக்காயம் அடைந்த மூவரையும் மீட்ட அந்தப் பகுதியினர், நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் சதீஷ் மற்றும் வெங்கடேஷ் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சையில் இருக்கிறார்கள். காளிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டிருக்கிற து.

பெட்ரோல் ஊற்றி எரித்ததில் தீ காயம் அடைந்தவர்
பெட்ரோல் ஊற்றி எரித்ததில் தீ காயம் அடைந்தவர்

இது குறித்த தகவலின்பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மூவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்திய ராஜசேகரனைப் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் வீட்டைப் பூட்டிகொண்டு உள்ளே இருந்துகொண்டார். போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ராஜசேகரனைப் பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸாரின் மீதும் ராஜசேகரன் பெட்ரோலை ஊற்றிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். போலீஸார் துரத்தியதால், பொட்ரோல் கேனில் மீதமிருந்த பெட்ரோலைத் தன் மீது ஊற்றி கொளுத்தியதில் அவர்மீதும் தீப்பிடித்திருக்கிறது.

சென்னை: கொரோனாவால் வேலை இழந்த டிரைவர்! - ரூ.3 லட்சம் கடனால் தற்கொலை

துரத்திச் சென்ற போலீஸார் தீயை அணைத்து, அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 95 சதவிகித தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டிருக்கும் ராஜசேகரனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இது பற்றி அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``ராஜசேகருக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பூசாரி ஒருவருக்கும் தகராறு இருந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு பெட்ரோலுடன் சென்று தகராறு செய்திருக்கிறார் ராஜசேகரன். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து அனுப்பியிருக்கிறார்கள். மேலும், போலீஸுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து வீட்டுக்கு வந்த ராஜசேகரன் ரோட்டில் நின்று சத்தம் போட்டதை வெங்கடேஷ், சதீஷ், காளி ஆகியோர் தட்டிக்கேட்டதால் அவர்கள் மீது தீவைத்து எரித்திருக்கிறார்" என்றனர்.

பெட்ரோல் ஊற்றி எரித்ததில் தீ காயம் அடைந்தவர்
பெட்ரோல் ஊற்றி எரித்ததில் தீ காயம் அடைந்தவர்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ராஜசேகரன் கோயில்களில் பூஜை செய்துவந்தார். கோயிலில் பூஜை வேலை செய்வதால் அவரை வெங்கடேஷ், சதீஷ், காளி ஆகியோர் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், காளியின் மனைவி குறித்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் ராஜசேகரன் அவதூறு பரப்பியிருக்கிறார். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்திருக்கிறது. இந்தநிலையில் மூன்று பேர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்தியிருக்கிறார். அவரும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு