Published:Updated:

முன்பகை; கோயில் விழா ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு! - நாகர்கோவிலைப் பதறவைத்த டிரைவர் கொலை

`ஏற்கெனவே அப்பாவைத் தாக்கியவர், இப்போது திட்டி, தகராறு செய்துள்ளாரே?' என்று அரவிந்த் ஆத்திரம் அடைந்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள குருசடி பகுதியைச் சேர்ந்தவர், அஜி (30). வேன் டிரைவராகப் பணிபுரிந்து வந்தார். இவரது குடும்பக் கோயில் திருவிழா தொடர்பாக உறவினர்கள் ஒன்றுசேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதில், திருவிழா சம்பந்தமாக ஒவ்வொருவரும் கருத்து கூறியுள்ளனர். அப்போது, உறவினர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது வாக்குவாதமாக மாறியது. ஒருகட்டத்தில், மாறிமாறி தகராறு ஏற்பட்டுள்ளது. அஜி, தனது உறவினர் அன்பு என்பவரைத் திட்டியதோடு, தகராறும் செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்னையில், அன்புவை அஜி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த தகராறை அன்புவின் மகன் அரவிந்த் (23) அறிந்து கோபமாகியுள்ளார்.

அஜியைத் தாக்கும் சி.சி.டி காட்சி
அஜியைத் தாக்கும் சி.சி.டி காட்சி

`ஏற்கெனவே அப்பாவைத் தாக்கியவர், இப்போதும் தகராறு செய்துள்ளாரே' என்று அரவிந்த் ஆத்திரம் அடைந்துள்ளார். இதையடுத்து அரவிந்த், தனது சித்தப்பா மகன் திலக் என்பவருடன் பைக்கில் வந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த அஜியை கட்டையால் தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதில், அஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அஜியை உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அஜி இறந்துவிட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆசாரிப்பள்ளம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், அஜியை கட்டையால் விரட்டிச் சென்று தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், அஜி சாலையோரம் வேன் அருகே நின்றுகொண்டிருக்கிறார். அப்போது, திலக் என்பவர் பைக்கை ஓட்டிவருகிறார். பின்னால் கட்டையுடன் அரவிந்த் வருகிறார். இவர்களைக் கண்டதும் அஜி ஓடி தப்ப முயல்கிறார்.

கொலை செய்யப்பட்ட அஜி
கொலை செய்யப்பட்ட அஜி

அப்போது, அரவிந்த் வேகமாக ஓடிச் சென்று கையில் கொண்டு வந்த கட்டையால் அஜியைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு மீண்டும் பைக்கில் ஏறி தப்பிச்செல்கிறார். இந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு